Wednesday, April 20, 2016

ஜனநாயக சோதனை சாலையில்-9: ஊழலின் அடித்தளம்

  • மார்ச் 28,2016
  •  
  •  
பிரிட்டிஷ் ஆய்வாளரான ராய் மாக்ஸம், அவருடைய புகழ்பெற்ற நுாலான உப்புவேலி [Great Hedge of India: The Search for the Living Barrier That Divided a People, Roy Moxham] என்னும் (எழுத்து பிரசுரம் ) நுாலில் இந்தியா வந்த பிரிட்டிஷார் இங்கே அதிகாரவர்க்கத்தை எவ்வாறு உருவாக்கினர் என்று சொல்கிறார். அவர்கள் இந்தியாவில், 1750களில் தான் வேரூன்றினர். இருபது ஆண்டு காலத்தில் இந்தியாவில் வேறு எந்த அரசும் உருவாக்காத அளவுக்கு
பிரம்மாண்டமான அதிகார நிர்வாக அமைப்பை உருவாக்க அவர்களால் முடிந்தது.

முழுக்க முழுக்க இந்தியர்களால் ஆனது அந்த அமைப்பு. மிகச்சில எண்ணிக்கையிலான பிரிட்டிஷ் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்பட்டது அது. பிரிட்டிஷ் நிர்வாகமுறை ஏற்கனவே பிரிட்டனிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய பிற நாடுகளிலும் பலமுறைச் சோதிக்கப்பட்டு வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டது. ராணுவ நிர்வாகம், சிவில் நிர்வாகம் ஆகியவற்றில் பிரிட்டிஷார் நிபுணர்கள் என்பதிலும் ஐயமில்லை. ஆனால் எப்படி அத்தனை விரைவாக அந்த அமைப்பை அவர்கள் உருவாக்கினர்?
அந்தக் காரணம், ஊழல்! இந்தியா வில் அப்போதிருந்த மன்னராட்சியின் நிர்வாக அமைப்புகள் அனைத்துமே தலைமுறை தலைமுறையாக வரும் அதிகாரத்தால் ஆனவை. கிராம அதிகாரியின் மகனே கிராம அதிகாரியாக வருவான். நாட்டாமையின் மகன் நாட்டாமை. அமைச்சரின் மகனே அமைச்சர். ஆகவே புதிய அதிகார வர்க்கம் உருவாவதற்கு வாய்ப்பே இருக்கவில்லை. மன்னராட்சிக் காலத்திலும் ஊழல் மிக அதிகமாகவே இருந்தது. குறிப்பாக
பிரிட்டிஷார் வருவதற்கு முன்பு தமிழகத்தில் இருந்த நாயக்கர் அரசில் அமைச்சர்களும் ராயசம் எனப்படும் நிதி நிர்வாகிகளும் பெரும் கொள்ளை அடித்தனர் என்பதை அன்றைய ஆவணங்கள் காட்டுகின்றன. ஆனால் புதிய அதிகார வர்க்கம் உருவாக இடமிருக்கவில்லை.
பிரிட்டிஷார் இங்கு அவர்களின் நிர்வாக முறையை உருவாக்கியபோது ஏராளமான புதிய ஊழியர்களை பதவிக்கு எடுத்தார்கள். அவர்கள் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும், பிரிட்டிஷ் அரசுக்கு அவர்கள் சேகரித்துக் கொடுக்க வேண்டிய பணத்தை ஒழுங்காக கொடுத்துவிட வேண்டும், அவ்வளவு தான் நிபந்தனை.
அதற்கு மேலதிகமாக அவர்கள் எத்தனை மடங்கு வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். பிரிட்டிஷாருக்கும் அவர்களின் இந்திய ஊழியர்களுக்கும் இந்த ஊழல் அமைப்பு மிகப்பெரிய கவர்ச்சியாக இருக்கவே அன்று இருந்த குட்டி நிலப்பிரபுக்கள் உதிரிப் போர்வீரர்கள் படித்த வர்க்கம் அத்தனை பேரும் பிரிட்டிஷாருடன் சென்று சேர்ந்தார்கள். மிக விரைவிலேயே பிரம்மாண்டமான நிர்வாக வர்க்கம் உருவானது.

இன்று தான் அதை ஊழலென்று சொல்கிறோம். அன்றைக்கு அதற்கு, 'சம்பாத்யம்' என்று தான் பெயர். அது ஒரு தவறு என்றே அன்று எவருக்கும் தோன்றவில்லை.
அதற்கு முன்பு அரசரின் குடும்பமும் வேண்டியவர்களும் சிற்றரசர்களும் அதிகாரிகளும் மக்களைக் கொள்ளையடித்தனர். அதுவும் எவருக்கும் தவறென தோன்றவில்லை. ஏனென்றால் அன்று மக்களுக்கு அரசாங்கத்தில் தங்களுக்கு ஏதேனும் உரிமை உண்டு என்று தெரியாது. கொள்ளையடிக்கப்படுவது தங்கள் உழைப்பும் செல்வமும் என்ற பிரக்ஞை இல்லை. ஜமீன்தார்களும் நாட்டாமைகளும் குட்டி அரசர்களும் அரசர்களின் வரிவசூல்காரர்களும் தங்களிடமிருந்து பொருளைப் பிடுங்குவதும் ஊழல் செய்வதும் அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டது.

அதே மனநிலை தான் பிரிட்டிஷ் ஆட்சியிலும் நீடித்தது. உப்பு அன்றைக்கு மிகப்பெரிய வணிகப் பொருளாக இருந்தது. இந்தியாவின் மேற்கே கடற்கரைப் பகுதியான குஜராத்தின் கடற்கரைகளில் விளைவிக்கப்பட்டு சாலைகள் வழியாக உள்நிலப் பகுதியான பீகாருக்கும் உத்தர பிரதேசத்திற்கும் மலைப் பகுதிகளான கிழக்கு மாகாணங்களுக்கும் பூடான் வரைக்கும்கூட உப்பு கொண்டு செல்லப்பட்டது.ஆகவே உப்புக்கு தங்கத்துக்கு நிகரான மதிப்பு இருந்தது. தங்கம் போலவே உப்பு ஒரு பண்டமாற்று நாணயமாக பயன்படுத்தப்பட்டது. உப்பில் தொட்டு சத்தியம் செய்வது, எவரையும் கட்டுப்படுத்துவதாக இருந்தது.

பிரிட்டிஷார் இந்த வண்டிப் பாதைகளை தடை செய்து முள்மரங்களின் வரிசையாலான ஒரு பெரிய வேலியை ஒரிஸ்ஸாவில் இருந்து காஷ்மீர் வரைக்கும் கட்டினார்கள். அதை நிர்வாகம் செய்வதற்கான ஊழியர்களை ஓரிரு மாதங்களுக்குள் அவர்களால் அமர்த்த முடிந்தது. அந்த ஊழியர்கள் இந்த வண்டிகளிடமிருந்து பல மடங்கு கொள்ளையடித்து அதில் ஒரு பகுதியை பிரிட்டிஷாருக்கு வழங்கினார்கள். பின்னர் இந்தியா முழுக்க பிரிட்டிஷ் ஆட்சிக்கு வந்து நிலவரி முதலியவற்றை விதிக்கத் தொடங்கியதும் உப்புக்குச் சுங்க வரி நிறுத்தப்பட்டது. வேலி கைவிடப்பட்டு அழிந்தது. பின்பு மீண்டும் உப்புக்கு வரி போடப்பட்டபோது தான், காந்தி, உப்பு சத்தியாக்கிரகத்தை தொடங்கினார். பழைய உப்புவரியின் கொடுமை மக்கள் நினைவில் இருந்தமையால் தான் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அது காந்திக்குத் தெரிந்திருந்தது.
இந்தவகையான ஊழல் மையமான ஆட்சி முறை தான், 1947 வரை பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் ஊழல் இல்லை என்று அடிக்கடி இங்கு உள்ள பழமையாளர்கள் சொல்வதைப் பார்க்கலாம். உண்மை என்னவென்றால் அவர்கள் எவருக்குமே பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றி எதுவுமே தெரியாது என்பதுதான்.

ஊழலால் ஊழலுக்கு நடத்தப்பட்ட ஆட்சி என்று காலனி ஆதிக்கத்தை சொல்லலாம். பிரிட்டனில் குளிர்நாட்டில் பிறந்த ஒரு வீரன் அங்கிருந்து ஆறாயிரம் கிலோ மீட்டர் இங்கு வந்து, இங்குள்ள தீவெயிலில் அம்மை முதலிய கொடிய நோய்களின் நடுவே வாழ்ந்து, பிரிட்டிஷாருக்கு பணியாற்ற வேண்டு மென்றால் அவனும் முடிந்த வரை ஊழல் செய்துகொள்ள அரசு அனுமதித்தாக வேண்டும். ஒரு சாதாரண கலெக்டர் ஐந்து ஆண்டுகளில் பிரிட்டனில் ஒரு பிரபு அளவுக்கு சம்பாதிக்க முடியும் என்ற கவர்ச்சிதான் அவர்களை இங்கே வரவழைத்தது.
பிரிட்டிஷ் கவர்னர்கள் லஞ்சம் பெறுவதற்கென்றே மாபெரும் விருந்துகளை நடத்தினர். ஊழல் செய்வதற்கென்றே மாபெரும் கட்டுமானங்களை கட்டினார் கள். குத்தகைதாரர்களுக்கும் அவர்களுக்குமான உறவு மிக அணுக்கமானது.இந்தியாவில் இருந்து அடிமைகளாக ஏழை மக்களை மலேசியாவுக்கும் இலங்கைக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் கொண்டு சென்று தோட்டங்களை அமைப்பதற்கு உதவும்பொருட்டு இங்கே பஞ்சங்களை வளரவிட்டார்கள். அதற்காக ஏராளமான கையூட்டை அன்றைய ஆட்சியாளர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

சுதந்திரம் கிடைத்த பிறகுதான் இந்த ஊழலெல்லாம் தவறு, குற்றம் என்ற எண்ணம் நமக்கு உருவாக ஆரம்பித்தது. ஆனால், அதுகூட நவீனக் கல்வி பயின்று, ஐரோப்பாவில் உருவாகி வந்த ஜனநாயக அறத்தை அறிந்தவர்கள் மத்தியில்தான். சாதாரண மக்களுக்கு ஊழல் ஒரு குற்றம் என்றோ, அது தங்களுக்கு எதிரான சுரண்டல் என்றோ தெரிந்திருக்கவில்லை. காரணம், காலாகாலமாக அவர்கள் அறிந்திருந்த மன்னராட்சியும் சரி பிரிட்டிஷ் ஆட்சியும் சரி; ஆட்சிக்கு நெருக்கமானவர்களின் ஊழலால் நடைபெற்றவை தான்.

இன்றும்கூட அந்த மனநிலையை நம் எளிய மக்கள் மாற்றிக்கொள்ளவில்லை. ஊழல் சம்பந்தமான பேச்சுக்கள் படித்தவர்களிடம் எழுப்பும் கோபத்தை சாதாரண மக்களிடம் எழுப்புவதில்லை. “ஆட்சியாளன் ஊழல் செய்யாமலிருப்பானா?” என்றுதான் அவர்கள் நினைப்பார்கள்.
இந்தியாவில் சுதந்திரப்போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மாபெரும் லட்சியவாதிகள். ஆனால் அவர்கள் ஆட்சியைப் பிடித்தபோது இங்கு ஏற்கனவே இருந்த நிர்வாக அமைப்பைத்தான் அவர்கள் சார்ந்து இருக்க வேண்டியிருந்தது. அது முழுக்க முழுக்க பிரிட்டிஷ்காரர் களால் ஊழலால் உருவாக்கப்பட்டு ஊழலால் நிலை நிறுத்தப்பட்ட ஒன்று. சுதந்திரம் கிடைத்த முதல் இருபதாண்டுக்காலம் அன்றைய காந்திய - நேரு யுகத்தின் இலட்சியவாதிகள் அதிகாரிகளைக் கொஞ்சம் கட்டுப்படுத்தினர்.
அடுத்த தலைமுறைக்குள் படிப்படியாக ஊழல் நிறைந்த அதிகாரி வர்க்கத்திடம் நிர்வாகம் முழுமையாகச் சென்று சேர்ந்தது. இன்றைய அரசியல்வாதிகள் இலட்சியவாதிகள் அல்ல. நிர்வாகத்திறன் கொண்டவர்களும் அல்ல. ஆகவே அவர்கள் அதிகாரிகளை நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. அதிகாரிகள் ஊழல் செய்து அரசியல்வாதிகளுக்கு ஒரு பகுதியை கொடுக்கிறார்கள்.
இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் சக்தி என்பது அரசியல்வாதிகள் அல்ல, அதிகாரிகள் தான். இந்தியாவின் அதிகார வர்க்கம் என்பது மிகப் பிரம்மாண்டமானது. இவர்கள் செய்யும் ஊழலின் ஒட்டுமொத்தத் தொகை அரசியல்வாதி கள் செய்யும் ஊழலின் தொகையை விட பல நுாறு மடங்கு பெரிது. இந்தியா வின் அத்தனை மக்கள் நலத்திட்டங்களையும் சுரண்டி இல்லாமல் ஆக்குகிறார்கள் இவர்கள். இந்தியாவில் உள்ள அத்தனை தனியார் முயற்சிகளுக்கும் தடைக்கல்லாக அமைகிறார்கள். இந்தியாவின் நவீன ஜனநாயகத்திற்கு வரலாற்றுரீதியாகவே முதல் எதிரி இங்குள்ள அதிகாரிகள்தான்.
இன்றைய தேவை ஊழல் என்பதை ஒரு குற்றம் என்று சாமானியர் மனதில் பதியச்செய்வதுதான். அதிகார வர்க்கத்தின் ஊழல் தங்கள் வாழ்க்கையை அழிக்கிறது என்பதை மக்களுக்குப் புரியச் செய்தாலொழிய ஜனநாயகம் வளர முடியாது. அவர்கள் இந்த அதிகாரி களிடம் கைகட்டி நின்றிருக்கும் மனநிலையை அகற்ற வேண்டும். அது மன்னராட்சிக் காலத்தின் நினைவினால் உருவாகும் அடிமைத்தனம். அதிகாரிகள் தங்கள் ஏவலர்கள் என்னும் உணர்வை பெறவேண்டும். அதுவே ஜனநாயகத்தின் தொடக்கம்.ஜெயமோகன்,கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com
www.jeyamohan.in
நன்றி : தினமலர் http://election.dinamalar.com/detail.php?id=5758

No comments:

Post a Comment