பதிவு செய்த நாள்
26மார்2016
21:39
குமரி மாவட்டத்திற்கே உயிராக உள்ள பேச்சிப்பாறை அணை திருவிதாங்கூர் மன்னர் மூலம் திருநாள் அவர்களால், 1897--1906ல் கட்டப்பட்டது. ஐம்பதாண்டு காலமாக அது துார்வாரப்படவே இல்லை. ஏனென்றால் தமிழக அரசிடம் அதற்கான நிதிவசதி இல்லை. உலக நிதியமைப்புகளிடம் கடன் கேட்டார்கள், கிடைக்கவில்லை.
காவிரியின் நீரை தமிழகம் முழுக்க பரப்பும் மேட்டூர் அணை 1934ல் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. அதுவும் சென்ற அரை நுாற்றாண்டாகத் தூர்வாரப்படவில்லை. வடதமிழகத்திற்கே நீராதாரமாக விளங்கும் வீராணம் ஏரி சோழர்களால் வெட்டப்பட்டது. அதை துார்வார தமிழக அரசு திட்டமிட்டது. நிதிவசதி இல்லை என கைவிட்டது.
அதாவது எந்த ஒரு நிர்மாணப்பணிக்கும் இன்றைய அரசுகளிடம் பணம் இல்லை. ஆனால் சென்ற அரை நுாற்றாண்டாக ஒவ்வொரு வருடமும் பட்ஜெட்டில் புதியவரிகள் விதிக்கப்படுகின்றன. நம் வரிச்சுமை ஐம்பதாண்டுகளுக்கு முன் இருந்ததைவிட இப்போது இருமடங்கு. இந்த வரிப்பணம் எங்கே செல்கிறது?
சென்ற ஐம்பதாண்டு காலமாக அரசியலில் மேலோங்கியிருக்கிற ஊழல் வரிப்பணத்தில் பெரும் பகுதியைக் கொள்ளையடித்துச் செல்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. மேம்பாலங்கள் போன்று கொள்ளையடிக்க வாய்ப்பான கட்டுமானத் திட்டங்கள் மட்டுமே அரசுகளால் நிறைவேற்றப்படுகின்றன. நம் வீட்டருகே வாழும் நகராட்சி உறுப்பினர் ஐந்தாண்டுக் காலத்தில் ஐந்துகோடி ரூபாய் சம்பாதிக்கிறார். அது அவர் ஈட்டுவது அல்ல, நம் வரிப்பணத்தில் திருடுவது.
ஆனால் இதைவிட முக்கியமான இன்னொன்றும் உள்ளது.
அதை நாம் அதிகமாக கவனிப்பதில்லை. இந்தியா வின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால், நமக்குத்தெரிந்த தொன்மையான வரலாற்றுக் காலமான ரிக்வேத காலகட்டத்திலிருந்து இன்றைக்கு வரைக்கும் மிக அதிகமான மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படைக் கட்டுமானங்கள் நமக்குச் சுதந்திரம் கிடைத்த முதல் இருபதாண்டுகளுக்குள் தான் செயல் படுத்தப்பட்டிருக்கின்றன.
சிந்தித்துப் பாருங்கள் நாகார்ஜுன சாகர் போல, பக்ராநங்கல் போல எத்தனை மாபெரும் அணைக்கட்டுகள், அக்கால கட்டத்தில்தான் இந்தியா முழுக்க சாலை போடப்பட்டிருக்கீறது. கிராமங்கள் தோறும் மின்சாரம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஊர் ஊராக பள்ளிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பசுமைப்புரட்சி வழியாக பட்டினிச்சாவுகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் முதல் இருபதாண்டுகளுக்கு பிறகு அந்த மக்கள் நலப்பணிகளில் மிகபெரிய தொய்வு ஏற்படத் தொடங்கியது. அதற்குக் காரணம் முதல் சீனப் போர்தான். அந்தப் போர் நிகழும் வரை நேரு இந்தியாவின் ராணுவத்தைப் பற்றி நினைக்கவே இல்லை. பேச்சுவார்த்தை மற்றும் அகிம்சை வழியில் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கலாமென அவர் நினைத்திருந்தார். அந்தப் போர் அவரது நம்பிக்கையைத் தகர்த்தது.
இந்திய ராணுவம் போதுமான ஆயுதங்கள் இல்லாமல், குளிருக்குத் தேவையான ஆடைகளும் இல்லாமல் சீனாவை போரில் சந்தித்தது. படுதோல்விகளை அடைந்து ஏராளமான நிலப்பகுதிகளை இழந்தது. அந்தப் போருக்குப் பிறகு இந்தியா ராணுவத்தை மேம்படுத்த தொடங்கியது. இன்று இந்தியாவின் வரிப்பணத்தில் மிகப்பெரும் பகுதி ராணுவத்திற்கு அளிக்கப்படுகிறது. வரிப்பணத்தில் ஏறத்தாழ நாற்பது விழுக்காடு ராணுவத்திற்கு போகிறது என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள்.
நேருவின் தொடக்க ஆட்சிக்காலத்தில் ராணுவத்திற்கு மிகக்குறைவாக செலவழிக்கப்பட்டது. ஆகவே தான் அவருக்கு மக்கள் நலப்பணிகளுக்கு பணம் இருந்தது. இன்றும் இந்தியாவைத் தாங்கி நிற்கும் மாபெரும் கட்டுமானங்களை அவரால் உருவாக்க முடிந்தது.
இன்று இந்திய அரசு நம்மிடம் வரி வசூல் செய்து அதை ராணுவத்திற்கு அளித்துக் கொண்டிருக்கிறது. ராணுவத்திற்கு அளிக்கும் நிதியை இன்றைக்கு எந்த அரசும் எவ்வகையிலும் குறைக்க முடியாது. ஏனென்றால் இன்று தேசம் முழுக்க பல்வேறு வகையான பிரிவினைவாதங்கள், உள்நாட்டு போர்கள் இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கின்றன.
காஷ்மீரிலும் வடகிழக்கு மாவட்டங்களிலும் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாதிகள் அந்நிய ஆதரவுடன் உள்நாட்டு போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகளின் கலகம் மூன்று மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கிறது. இதுபோக இந்தியா முழுக்க சாதி மதம் சார்ந்த பிரிவினைவாத இயக்கங்கள் உருவாகிஇருக்கின்றன.
இவை இந்த அளவுக்கு பெருகப்பெருக ராணுவத்தின் பணி மேலும் கூடுகிறது. நம் அரசு ராணுவத்திற்கு பணம் செலவழித்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. அது நாம் உழைத்துச் சம்பாதித்து அளிக்கும் வரிப்பணம். நமக்குரிய நலப்பணிகளுக்காகவும், அடிப்படைக் கட்டுமானத்துக்காகவும் செலவழிக்க வேண்டிய பணம். இவ்வாறு நம் வரிப்பணம் வீணாவது மேலும் மேலும், நம்மை வறுமையிலேயே ஆழ்த்தி வைக்கும்.
அப்படியென்றால் இந்தப் பிரிவினை வாதங்களையும் உள்நாட்டுப் போர்களையும் யார் உருவாக்கியிருக்கிறார்கள்? எவர் நம்மை வளரவிடக்கூடாது என்று நினைக்கிறார்களோ, நாம் பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள்தான் இதை துாண்டி விடுகிறார்கள். நம் ராணுவத்திற்கு செலவழிக்கப் படும் பணத்தில் மிகபெரும்பாலான பகுதி ஐரோப்பிய நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் வாங்கத்தான் அளிக்கப்படுகிறது.
அதாவது இந்தியாவுடைய வரிவசூல் பணத்தில் பெரும்பகுதியை ஐரோப்பிய ஆயுத நிறுவனங்கள் எடுத்துக் கொண்டு செல்கின்றன. அவற்றில் ஒரு சிறு பகுதியை பல்வேறு மறைமுக வழிகளில் இந்தியாவுக்கு அனுப்பி இந்தியாவில் பிரிவினை வாதங்களையும் கலவரங்களை உருவாக்குகின்றன அவை. நாம் அந்தப் பிரச்சினைகளை அடக்குவதற்காக கோடிக்கணக்காக ராணுவத்திற்கு செலவழிக்கிறோம்.
நாம் முதல் இருபதாண்டுக்கால வளர்ச்சியை அப்படியே தொடர்ந்திருந்தால் சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் நாம் எவ்வளவோ முன்னேறியிருக்க முடியும். அனைத்தும் இங்கே தேங்கிக் கிடக்கின்றன. ஓர் உடம்பில் ஆறாத புண் ஒன்றிருந்தால் அந்த உடம்பு உட்கொள்ளும் அனைத்து உணவின் சத்தும் அந்த புண்ணைக் குணப்படுத்தவே செல்லும். நம் உடம்பில் பஞ்சாப், அசாம் எல்லாம் பெரிய புண்கள். அவை ஆறிவிட்டன. காஷ்மீரும் வடகிழக்கும் ஆறாமல் உள்ளன.
இந்தியாவின் இந்த வன்முறை பிரிவினை இயக்கங்கள் நம்மை மறைமுகமாக அழித்துக் கொண்டிருக்கின்றன. இது கொஞ்சம் யோசிப்பவர்களுக்கே தெரியும். ஆனால் இந்தியாவின் தலைநகரில் உள்ள பெருமைமிகுந்த கல்விநிறுவனமான ஜவகர்லால் நேரு பல்கலையில் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஆதரவுக்கூட்டம் போடப்படுகிறது. பாராளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
காஷ்மீர் சட்டவிரோதமாக இந்தியாவால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது என்று அங்கே வேலைபார்க்கும் பேராசிரியர் ஒருவர் பொதுமேடையில் பேசுகிறார் ஏன்? நம்மை விட ஜனநாயகம்
பேசும் ஐரோப்பிய நாடுகள் இத்தகைய 'பேச்சுரிமையை' அவர்கள் நாட்டில் அனுமதிப்பார்களா?
பிரான்ஸில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிக்கு அங்கே சார்போன் பல்கலைக்கழகத்தில் ஓர் அஞ்சலிக்கூட்டம் நடத்த முடியுமா? சாமானியர்களான நாம் அறிந்த இவற்றை எல்லாம் பேராசிரியர்கள் அறிந்திருக்கவில்லையா என்ன?
உண்மையில் இந்தியாவில் நிகழ்ந்த பெரும்பாலான பிரிவினைவாதங்கள் அறிவுஜீவிகளான பேராசிரியர்களால் கல்வித்துறையில் ஒரு கோட்பாடாக முதலில் முன்வைக்கப்பட்டவைதான். அதன்பின்னரே அவை தீவிரவாத அரசியல்வாதிகளால் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதன்பின் வன்முறை இயக்கமாக ஆயின.
உதாரணமாக வங்காளத்திலுள்ள கூர்க்காக்களின் வாழ்விடத்தை தனி வட்டாரமாக அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கை நுாறாண்டுகளாகவே இருந்துவந்தது. அது ஒரு நிர்வாகக் கோரிக்கை மட்டுமே. ஆனால், 1980களில் இந்திரா பகதுார் ராய் என்னும் எழுத்தாளர்தான் கூர்க்காக்களுக்கு தனிநாடு என்னும் பிரிவினைக் கோரிக்கையை முன்னெடுத்தார். மிக விரைவிலேயே அது சுபாஷ் கிஷியாங் என்னும் அரசியல்வாதியால் வன்முறைக் கிளர்ச்சியாக மாற்றப்பட்டது. பதினைந்தாண்டுக் காலம் கிளர்ச்சி நடைபெற்றது.
டார்ஜிலிங்கின் சுற்றுலாத் தொழிலே அழிந்தது. வங்காளம் பெரிய பொருளியல் அழிவைச் சந்தித்தது.இத்தகைய பிரிவினைக் கோரிக்கை எழுவதற்கான முக்கியமான காரணம் இவர்கள் கோரிய கூர்க்காலாண்ட் என்பது வங்க தேசத்திற்கும் பூட்டானுக்குமான ஒரு இணைப்பு போன்ற நிலம் என்பதுதான். இந்தியாவின் மைய நிலத்தையும் வடகிழக்கு மாகாணங்களையும் கூர்க்காலாண்ட் பிரித்துவிடும்.
ஆகவே வடகிழக்கு பகுதியின் பிரிவினைவாதம் மேலும் வளரும். அதற்காகவே கூர்க்காலாண்டுக்கு அந்நிய நிதி குவிந்தது. இவ்வாறு பிரிவினைவாதம் பேசும் அறிவுஜீவுகள் அதற்காகப் பெரும் நிதியுதவிகளைப் பெறுகிறார்கள்.கருத்தரங்குகளுக்கான அழைப்புகள், பல்வேறு ஆய்வுகளுக்கான நிதியளிப்புகள் என மறைமுக வழிகளில் அவர்களுக்கு இவ்வாறு இந்தியாவில் வன்முறையை, பிளவுகளை உருவாக்குவதற்கான ஊக்கத்தொகை வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் பேசுவது அதற்காகவே.
ஆயுத வியாபார நிறுவனங்கள் ஐரோப்பாவிலுள்ள கலாச்சார நிறுவனங் களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் நிதி அளிக்கின்றன. அவற்றை இவர்கள் கலாச்சாரச் செயல்பாடுகள் என்று பெயர் சொல்லிப் பெற்றுக் கொள்கிறார்கள்.இந்தியா மிகமிக சிக்கலான நாடு. ஏற்கனவே ஏராளமான உட்பிரிவுகளும் மோதல்களும் நிறைந்தது. இங்கே எந்த ஒரு பிரிவினைவாதமும் எளிதில் பற்றிக்கொள்ளும். பெரிய அழிவுகளை உருவாக்கும்.
இங்கே வெறுப்புடன் பேசப்படும் ஒவ்வொரு சொல்லும் கொள்ளிக் கட்டைக்கு சமமானது. கூரையை எரித்துவிடும். ஆனால் அறிவுஜீவிகள் வெறுப்பைக் கக்குகிறார்கள். அதைக்கேட்டு சில்லறை அரசியல்வாதிகள் பிரிவினைவாதமும் தீவிரவாதமும் பேசுகிறார்கள்.
இந்தியாவில் இன்றைய சூழலில் எவர் ஒருவர் ஏதேனும் ஒருவகையில் இனம் சார்ந்து, மதம் சார்ந்து, மொழிசார்ந்து, பிரிவினை வாதம் பேசுகிறாரோ வன்முறையை பேசுகிறாரோ அவர் இந்த நாடு வளராமல் இருப்பதற்கான லஞ்சத்தை பெற்றுக் கொண்ட துரோகி என்று எப்போது புரிந்து கொள்வோம். தேர்தல் பேச்சுக்களில் அத்தகைய குரல் எங்கு எழுந்தாலும் அந்த ஐந்தாம்படையை அடையாளம் கண்டுகொள்வோம்.கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு:ஜெயமோகன் jeyamohan.writer@gmail.com www.jeyamohan.in
No comments:
Post a Comment