பதிவு செய்த நாள்
15ஏப்2016
சமீபத்தில் வெளியான அரசியல்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் பற்றி ரயிலில் சில தொழில்நுட்பத்துறை சார்ந்த இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ''இவர் எந்த ஊரிலே தேர்தலிலே நிக்கிறார் ப்ரோ?'' என்றார். ''டேய், அவரு ஜாம்பியாவிலே நடக்கப் போகிற தேர்தலுக்காக அறிக்கை வெளியிட்டிருக்கார். அங்கதான் நிக்கப்போறார்” என்றார். ஒரே சிரிப்பு.
அந்தத் தேர்தல் அறிக்கை உண்மையில் ஏதோ ஆப்ரிக்க நாட்டின் சர்வாதிகாரி அளிக்கும் செயல் திட்டம் போல் தான் இருந்தது.
இந்தியாவின் குடியரசுக்குள் ஒரு மாநில முதல்வரின் அதிகாரம் என்ன, இங்குள்ள பொருளியல் சூழலில் என்ன செய்யமுடியும் என்று எதைப்பற்றியும் கவலை இல்லாமல் 'அடித்து விட்டிருந்தார்கள்'. படிப்போ, அடிப்படை அறிவோ இல்லாத இளைஞர் கூட்டம் தான் அவர்களின் இலக்கு என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
ஆனால் மற்ற அரசியல்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும், அப்படித்தான் இருக்கின்றன. நம் அரசியல்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை கோயிலில் உள்ள யாளி சிலைகளுடன் ஒப்பிடலாம். சிங்கத்தின் கால்.
கழுகின் சிறகு. பாம்பின் வால். யானையின் துதிக்கை. சின்னக்குழந்தைகள் பார்த்தால் அது என்ன மிருகம் என்று தெரியாமல் திகைக்கும். இந்த தேர்தலறிக்கைகளில் எப்போதும் ஒருபாதி கம்யூனிசம் தெரியும். மறுபாதியில் முதலாளித்துவம். கொஞ்சம் ஜனநாயகம். மிச்சப்பகுதியில் சர்வாதிகாரம். எந்தக்கொள்கை என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாது.
ஆனால் நம் எளிய இளைஞர்கள் இவற்றை 'கொள்கை'கள் என்று நம்புகிறார்கள். மேடையில் ஒரு தலைவர் ஆவேசமாக ஒரு தரப்பை எடுத்து முழக்கமிட்டால் அதை கொள்கைப்பிடிப்பு என்று நினைக்கிறார்கள். அந்தக்கொள்கைகளை அவர்களும் எடுத்துக்கொண்டு பேசுகிறார்கள்.
ஆறே மாதத்தில் அந்தக்கொள்கை தலைகீழாக திரும்பும்போது திகைப்பார்கள். அந்தக் கட்சித்தலைவர் ஏதேனும் விளக்கம் அளிப்பார். அதை நம்பி அடுத்த 'கொள்கையை' எடுத்துக்கொண்டு பேசத்தொடங்குவார்கள்.
ஜனநாயகத்தில் தங்களுக்கு ஒரு கொள்கை இருப்பதாகவும், அதை நிலைநாட்டும் பொருட்டே அரசியல்செய்வதாகவும் அத்தனைபேரும் சொல்கிறார்கள். ஆனால் அதிகாரமே அவர்களின் இலக்கு. அதை அடைவதற்காக அவர்கள் சொல்லும் கொள்கைகளை கைவிட்டுக்கொண்டே முன்னால் செல்வார்கள். இதை நவீன அரசியல் ஆய்வுகளில் பரப்பியம் என்கிறார்கள்; ஆங்கிலத்தில் பாப்புலிசம் [populism] என்பார்கள்.
சோவியத் ரஷ்யாவிலிருந்து வெளிவந்த 'வளர்முக நாடுகளில் பாப்புலிசம்' என்னும் நூல் இந்த விஷயத்தைப் புரிந்து கொள்ள மிக உதவியானது. இன்றைய நம்முடைய அரசியலைப் புரிந்து கொள்ள பரப்பியம் என்ற சொல்லை உணர்வது மிக அவசியம்.
கொள்கைப் பிடிப்பு என்றால் என்ன? அது ஓர் அரசியல் கொள்கையை உறுதியாக நம்பி அதை முன்வைப்பது. அந்தக் கொள்கைக்கு ஒரு பொருளாதார முகம் இருக்கும். சமூகவியல் சார்ந்த ஒரு பக்கம் இருக்கும்.
இலக்கிய நிலைப்பாடுகள் இருக்கும். கல்வி, கலை எல்லாவற்றிலும் அதற்கு அந்தக்கொள்கை சார்ந்த ஒரு நிலைப்பாடு இருக்கும். அந்தக்கொள்கைக்கு ஒரு மையம் இருக்கும். அது தத்துவம் சார்ந்ததாக இருக்கும்.
கம்யூனிஸ்டுக் கட்சிகள் கம்யூனிஸ்டுக் கொள்கை கொண்டவை. பாரதிய ஜனதா இந்துத்துவக் கொள்கை கொண்டது. தங்கள் கொள்கைகளின் அடிப்படையில் அவர்கள் அரசியல், சமூகம், நிர்வாகம் அனைத்துத் தளங்களிலும் செயல்படுகிறார்கள். நாம் அவர்களுடன் விவாதிக்கலாம். ஏற்றுக்கொள்ளலாம்; அல்லது கடுமையாக நிராகரிக்கலாம்.
ஆனால் பரப்பிய இயக்கங்களுக்கு [Populist movements] அப்படி ஒரு நிலையான கொள்கை இருப்பதில்லை. அவர்களுக்குத் தேவை அதிகாரம். அந்த அதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கு மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அந்த ஆதரவைப் பெற மக்களைக் கவர விரும்புகிறார்கள். ஆகவே மக்களுக்கு என்ன பிடிக்குமோ அதை அவர்கள் தங்கள் கொள்கை என்று முன்வைப்பார்கள்.
மேலோட்டமாகப் பார்க்கையில் பரப்பிய அரசியல்வாதிகள் பேசுவதும் கொள்கைபோலத்தான் தெரியும். ஆனால் அது அவர்களின் கொள்கை அல்ல. நமக்கு அது பிடிக்கும் என்பதனால்தான் அதை அவர்கள் பேசுகிறார்கள்.
கொள்கையரசியல் பேசுபவர்கள் தங்களுக்கு என்று சொந்தமாக தத்துவம் கொண்டவர்கள். அந்த தத்துவத்திலிருந்து அவர்கள் தங்கள் கொள்கைகளை அடைகிறார்கள். அதை நம்மிடம் பிரச்சாரம் செய்கிறார்கள். பரப்பியம் பேசுபவர்களுக்கு மையத் தத்துவம் என ஏதும் இல்லை. அதிகாரத்தை அடைவது மட்டும்தான் இலக்கு.
பரப்பியம் பேசுபவர்கள், நமக்குப்பிடித்ததை நம்மிடம் பேசி, நம்மை மகிழ்விக்கிறார்கள். கொள்கை பேசுபவர்கள் நம்மை மாற்ற முயற்சி செய்கிறார்கள். பரப்பியம் பேசுபவர்கள், நமக்கு ஏற்ப அவர்கள் மாறிக்கொள்கிறார்கள். கொள்கைவாதிகளை நோக்கி நாம் செல்லவேண்டும். பரப்பியவாதிகள் நம்மை நோக்கி அவர்களே வருவார்கள்.
பரப்பியம் பேசுபவர்கள் எப்படிச் செயல்படுவார்கள்? அவர்கள் கொள்கையரசியல் பேசுபவர்களைத்தான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள். கொள்கைவாதிகள் பேசிப்பேசி கொஞ்சம் கொஞ்சமாக மக்களை மாற்ற ஆரம்பிக்கும்போது அதே கொள்கைகளை மேலும் ஆவேசமாக இந்த பரப்பியம் பேசும் கூட்டம் பேச ஆரம்பிக்கும்.
அவர்கள் உருவாக்கிய அதே வார்த்தைகளை இவர்கள் எடுத்துப் பயன்படுத்துவார்கள். அதே உணர்ச்சிகளை இன்னும் நாடகத்தனமாக இவர்கள் வெளிப்படுத்துவார்கள்.
அதோடு மக்களுக்குப் பிரியமான விதத்தில் அந்த கொள்கைகளை கொஞ்சம் வளைத்தும் நெளித்தும் கொடுப்பார்கள். ஆகவே மக்களுக்கு இவர்கள்தான் இன்னும் தீவிரமான கொள்கை கொண்டவர்கள் என்று தோன்றும். தேர்தல்களில் இவர்களுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், அதிகாரத்துக்கு வந்ததும், இவர்கள் அந்த கொள்கைகளை தூக்கி தூரவீசிவிடுவார்கள்.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிச கொள்கைகள் மேல் மக்களுக்கு பெரிய ஈடுபாடு உருவாகியது. காரணம் உலகமெங்கும் பஞ்சமும் வேலையில்லா திண்டாட்டமும் இருந்தன. இரண்டு உலகப் போர்கள் நடந்து முடிந்தபின் மேலும் வறுமை பெருகியது.
அந்த தருணத்தை கண்டுகொண்ட சோவியத் ருஷ்யா பெரும்பணம் செலவழித்து கம்யூனிச கொள்கைகளை உலக நாடுகள் முழுக்க கொண்டுசென்றது. குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இளைஞர்கள் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டனர்.
உடனே இங்கெல்லாம் பரப்பியம் பேசும் இயக்கங்கள் உருவாகிவந்தன.
இந்த பரப்பியம் பேசும் கூட்டம் அதே இடதுசாரிக் கொள்கைகளை மேலும் தீவிரமாக பேசியது. கண்ணீர் மல்க நடித்தனர். அடுக்குமொழி பேசினர். 'நாங்கள் இன்னும் தீவிர கம்யூனிஸ்டுகள்' என்றனர். லெனின், ஸ்டாலின், மார்க்ஸ் போன்ற பெயர்களைச் சூட்டிக்கொண்டனர்.
உண்மையான இடதுசாரிகள் இனவெறி, சாதிப்பற்று, மொழிப்பற்று போன்றவற்றை எதிர்த்து பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் பரப்பியவாதிகள் இடதுசாரி கொள்கைகளுடன் அவற்றையும் சேர்த்துக்கொண்டனர். விளைவாக மக்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்தனர்.
அதோடு இடதுசாரி கொள்கைகளை கைகழுவிவிட்டு, அப்பட்டமான முதலாளித்துவ அரசியல் செய்தனர். மிகப்பெரிய முதலாளிகளாக தாங்களே ஆனார்கள்.
இந்தியாவில் மட்டும் அல்ல. இந்தோனேசியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்று நம்மைச்சூழ்ந்துள்ள நாடுகளிலும் இதுதான் நடந்தது. இதனால் உண்மையான வலதுசாரிகளும் இல்லாமலானார்கள்.
நம் நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை என்னும் களை வளர்கிறது. அது நீரில் உள்ள ஆக்ஸிஜனை இல்லாமலாக்கி நீரில் உயிர்கள் வாழமுடியாமல் மாற்றும். நீர் சாக்கடையாக ஆகும். அதேபோல ஜனநாயக அரசியலை சாக்கடையாக்குவது பரப்பியம். அது உண்மையான எந்த விவாதமும் நிகழாமல் ஆக்கிவிடுகிறது. பொய்யான கொள்கைகளால் சூழலை மலினப்படுத்திவிடுகிறது.
உதாரணமாக புரட்சி என்னும் வார்த்தை. அது பாரதியால் உருவாக்கப்பட்டது. Revolution என்ற சொல்லின் மொழிமாற்றம். ஒரு சமூக அமைப்பை ஒட்டுமொத்தமாக நேர்த்தலைகீழாக ஆக்கும் மாற்றத்தைக் குறிக்கும் சொல் அது. புரட்டிப்போடுவதே புரட்சி.
இன்றைய தமிழ்ச்சூழலில் அச்சொல்லின் அர்த்தம் என்ன? ஒரு சொல் பொருளிழந்தால் அது எதைக்குறிக்கிறதோ அந்த விஷயமே பொருளிழந்ததாகத்தான் அர்த்தம். அந்த விஷயத்தைப்பற்றிப் பேசவே முடியாமலாகிறது அல்லவா?
கொள்கைக்கு என ஓர் ஒழுங்கு இருக்கும். கம்யூனிஸ்டுகளின் அறிக்கையில் உள்ள ஒரு விஷயத்தை பாரதிய ஜனதாவின் அறிக்கையில் நாம் எதிர்பார்க்கவே முடியாது. பாரதிய ஜனதாவின் அறிக்கையிலுள்ள ஒன்றை நாம் கம்யூனிஸ்டுகளின் அறிக்கையில் காணவே முடியாது.
ஆனால், இந்த பரப்பிய கட்சிகளின் அறிக்கையில் எதுவேண்டுமானாலும் இருக்கும்.
இப்படி ஒரு மனிதன் பேசினால் அவனை வேளைக்கொன்றை பேசுபவன், வீணன் என்று ஒதுக்குவோம். ஆனால் அப்படிப்பேசும் அரசியலியக்கத்தை நாம் ஆதரிக்கிறோம்.
காரணம் அது அந்த தருணத்தில் நமக்கு பிடித்ததை பேசுகிறது. எப்போது கொள்கைக்கும் பரப்பிய இயக்கத்தின் வெற்றுக் கூச்சலுக்கும் இடையே நமக்கு வேறுபாடு தெரிகிறதோ அதன்பின்னரே நாம் அரசியலை புரிந்துகொள்ளத் தொடங்குகிறோம்.கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com

நன்றி : தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1501944
No comments:
Post a Comment