Wednesday, April 20, 2016

ஜனநாயக சோதனை சாலையில்-3:குற்றவாளிகள் யார்?

22மார்
2016 
04:21

பதிவு செய்த நாள்
மார் 21,2016 21:52


சில ஆண்டுகளுக்கு முன், பேருந்தில் என்னருகே பயணம் செய்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஒரு தொழில் முறைக் குற்றவாளி என்று அவர் குற்றம் சாட்டினார். பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். கட்டப்பஞ்சாயத்து செய்பவர். நில மோசடிக்கு புகழ் பெற்றவர். அவருக்கும் பிறிதொருவருக்குமான சண்டையில், நேரில் அடிதடிக்கு அவர் களம் இறங்கியதையே தான் பார்த்ததாக சொன்னார். 
நான் கேட்டேன்: ''அந்த தொகுதி மக்களில் பெரும்பான்மையினர் அவரைப் போன்ற குற்றவாளிகள் என்றுதானே இதற்கு பொருள்,'' கோபத்துடன், ''அதெப்படி சொல்ல முடியும்?'' என்றார் அவர். ''ஏராளமான குடும்பப் பெண்களும், தாய்மார்களும் ஓட்டளித்து தானே அவர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்? அவர்களெல்லாம் தங்கள் வாழ்நாளில் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடக்கூடியவர்கள் அல்ல. மானசீகமாக எந்த குற்றத்தையும் ஒப்புக் கொள்ளக்கூடியவர்களும் அல்ல.''

பொதுவாகவே தமிழ் சமுதாயம் என்பது குற்றத்திற்கு எதிரான மனநிலை கொண்டது. எனக்குத் தெரிந்த காவல் உயரதிகாரி ஒருவர் ஒருமுறை சொன்னார்: உலகத்திலேயே காவலர்-, பொதுமக்கள் விகிதம் மிகக்குறைவாக இருக்கும் நாடு இந்தியா தான். ஏறத்தாழ முப்பதாயிரம் மக்களுக்கு ஒரு காவலர் என்றிருக்கிறார்.

ஆனால், இங்குள்ள மக்கள் தொகையையும் மக்கள் வாழும் அடர்த்தியையும் பல்வேறு வகையான ஜாதி -இனப் பிரிவுகளையும் பார்க்கும் போது இங்கு நிகழும் குற்றச்செயல்கள் மிகவும் குறைவு என்றார். நான் அதற்கான காரணம் என்ன என்று கேட்டேன். ''காவலர்களுக்கு பயந்து இந்தக் குற்றங்கள் கட்டுக்குள் நிற்கவில்லை,'' என்றார் அந்த மேலதிகாரி. ''இங்குள்ள மக்களுக்கு குற்ற செயல்கள் மேல் இயல்பாகவே ஒரு கசப்பு உள்ளது. ஒருவன் திருடன் என்றால், கொலைகாரன் என்றால் அவனுக்கு ஒரு பெரும் சமூக புறக்கணிப்பு உள்ளது. அதன்பின் அவன் குடும்பத்துடன் இருக்க முடியாது. தன் உற்றார், உறவினருடன் சேர முடியாது. தன்னைப்போன்ற பிற குற்றவாளிகளின் உலகுக்குள் தான் அவன் சென்றாக வேண்டும். அங்குதான் அவனுக்கு நட்பும், சுற்றமும் அமையும்.

“அவ்வாறு அவன் சென்ற அந்த உலகத்தை மட்டும் கண்காணித்தால் போதும். புதிய குற்ற வாளிகளைப் பிடித்து விடலாம். இங்கு குற்றவாளிகள் ஒரு தனி சமுதாயமாகத்தான் வாழ்கின்றனர். ஆகவே, அவர்களைக் கண்காணிப்பது எளிது. இக்காரணத்தால் தான் இங்கு குற்றப்புலனாய்வே இவ்வளவு எளிதாக நடக்கிறது,” என்றார் அந்த அதிகாரி.

இந்த அளவுக்குக் குற்றங்களை வெறுக்கக்கூடிய ஒரு சமுதாயம், ஏன் கொடுங் குற்றவாளிகளை தன்னுடைய அரசியல் பிரதிநிதிகளாக தேர்ந்து அனுப்புகிறது?
என் அருகே பேருந்தில் வந்த நபர் சொன்னார்: ''அதுக்கு நாம என்ன செய்வது சார்? கட்சியிலிருந்து அவரைத்தான் எங்கள் தொகுதிக்கு நிறுத்துகின்றனர். மாநில அளவில் நமக்கு பிடிச்ச ஒருத்தர் முதல்வராக பதவிக்கு வரவேண்டுமென்று நினைத்தால், இவருக்கு தான் ஓட்டு போட வேண்டியிருக்கிறது. அல்லது நாம் விரும்பாத ஒருவர் முதல்வராக வந்துவிடுவார். வேறு வழியில்லாமல் தான் இந்த மாதிரி குற்றவாளிகளுக்கு நாம் ஓட்டளிக்கிறோம்.”

சரி, அப்படியென்றால் அந்த அரசியல் கட்சிகள் ஏன் குற்றவாளிகளை நிறுத்துகின்றன? குற்றவாளிகளிடம் குற்றம் மூலம் சேர்த்த பணம் இருக்கிறது என்பது முதல் காரணம். அவர்கள் தங்களைப்போன்ற குற்றவாளிகளைத் தேர்ந்து எடுத்து, ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்கி வைத்திருக்கின்றனர். தேவை ஏற்பட்டால் ஒரு கலவரத்தை உருவாக்கவோ, ஒரு கடையடைப்பை நிகழ்த்தவோ அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது என்பது இன்னொரு காரணம்.
கடைசியாக, எந்த மனசாட்சித் தடையுமில்லாமல் ஊழல் செய்து மேலிடத்திற்கு கப்பம் கட்ட அவர்களால் முடியும்.

ஆக, வேறு வழியில்லாமல், மத்தியிலோ, மாநிலத்திலோ ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதற்காக நாம் குற்றவாளிகளுக்கு ஓட்டளித்துக் கொண்டிருக்கிறோம். குற்ற வாளிகள் தேர்தலில் வெல்லும் தோறும் நேர்மையானவர்களால் அரசியலில் நீடிக்க முடியாமல் ஆகிறது. ஏனென்றால், நேர்மையான ஒருவர், ஒரு குற்றவாளியை அரசியல் களத்தில் சந்திப்பதே மிகக்கடினம். அவரும் குற்றத்தை கையிலெடுக்க வேண்டியிருக்கலாம்.

குற்றவாளிகளின் வெற்றி பிற குற்ற வாளிகளுக்கு ஊக்கமூட்டுகிறது. தாங்களும் ஜெயித்து விடலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர். அரசியல் அதிகாரம் கைக்கு வரும்போது, தாங்கள் செய்த குற்றங்களை எளிதாக மறைக்கலாம் என்று திட்டமிடுகின்றனர். ஆரம்பத்தில் உத்தர பிரதேசத்திலும், பீஹாரிலும் தான் குற்ற வழக்கு பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் வென்று வருவது அதிகமாக இருந்தது. அதன் பிறகு இந்தியா முழுக்க அந்தப்போக்கு வலுப்பெற்றது. இன்றைக்கு தமிழ்நாட்டில் ஏறத்தாழ உத்தர பிரதேசம், பீஹார் அளவுக்கே அரசியல் குற்றவாளிகளின் புகலிடமாக மாறியுள்ளது.

எந்தக் காரணத்தின் பொருட்டும் ஒரு குற்ற வாளியை அரசியலில் ஓட்டளித்துத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்ற உணர்வு நமக்குத் தேவை. நமது ஓட்டு வீணாகிப்போகும் என்றாலும் சரி, நாம் விரும்பிய ஒருவர் பதவிக்கு வரமாட்டார் என்று நாம் நினைத்தாலும் சரி, எக்காரணம் கொண்டும் குற்றவாளிக்கு ஓட்டளிக்க கூடாது என்ற உணர்வு வேண்டும்.

ஏனென்றால், ஒரு குற்றவாளியை, அரசியலில் வெற்றி பெறச்செய்வதன் வழியாக, நம் குழந்தைகளுக்கு நாம் மிக மோசமான ஒரு முன்னுதாரணத்தை அளிக்கிறோம். நேர்மை மேலும், அறம் மேலும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் ஆக்குகிறோம். ஏதோ ஒரு தருணத்தில் அவர்களுக்கு நம் மீதும், நமது பாரம்பரியத்தின் மீதும் அவநம்பிக்கை ஏற்படும்.

அன்று பேருந்தில் இருந்து மதுரை யில் இறங்கி ஒரு நண்பரை பார்த்து பேசிக்கொண்டிருந்த போது, அவர் அவருடைய சொந்த பிள்ளைகளால் எப்படி வஞ்சிக்கப்பட்டார் என்று சொன்னார். அவருக்கு கிராமத்தில் மிகப்பெரிய அளவு நிலமும், வீடும் இருந்தது. அவரது நான்கு பிள்ளைகளும் வெவ்வேறு நகரங்களில் குடியிருந்தனர். அந்த நிலத்தை விற்று பணமாக மாற்றி கொண்டு செல்ல அவர்கள் எண்ணினர். தன்னுடைய கடைசி காலம் வரைக்கும் தன் முன்னோர்கள் வாழ்ந்த அந்த வீட்டில் வாழ வேண்டுமென்பது அவருடைய ஆசையாக இருந்தது. மிகக்கடுமையாக உழைத்து தன் பிள்ளைகளை படிக்க வைத்து அனுப்பியவர் அவர்.

ஆனால், பிள்ளைகள் பலவகையிலும் நெருக்கடி கொடுத்தனர். ஒரு கட்டத்தில் அவர் இறந்தால் இறுதிச் சடங்கு கூட செய்ய மாட்டேன் என்றனர். அவர் உறுதியாக மறுத்து விட்டார். அவர்கள் இணைந்து அவரது கையெழுத்தை மோசடி செய்து, அவரறியாமல் அவரது நிலத்தையும், வீடையும் விற்று விட்டனர். ஒருநாள் வீட்டை வாங்கிய வன் வந்து வெளியேறச் சொன்னபோது தான் அவருக்கே அது தெரிந்தது.

சொந்தப் பிள்ளைகளுக்கெதிராக நீதிமன்ற வழக்கை அவர் விரும்பவில்லை. அதற்கான பணமோ, பின்புலமோ அவருக்கில்லை. ஆகவே, எஞ்சிய சேமிப்புடன் மதுரைக்கு வந்து, தனியாக தன் மனைவியுடன் ஒரு சிறு இல்லத்தில் தங்கியிருந்தார். இந்தக் கதையை சொல்லும்போது அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

பேருந்தில் வந்த போது ஒருவர் சொன்னதையும், இதையும் உடனடியாக என் மனம் இணைத்து பார்த்தது. பொது வாழ்வில் எந்த அறமும் இல்லாத ஒருவருக்கு ஓட்டளித்து சட்டமன்றத்துக்கு அனுப்பும் நாம், நம்முடைய சொந்த பிள்ளைகள் மட்டும் அறத்துடனும் ஒழுக்கத்துடனும் இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அந்த முன்னுதாரணத்தை நாம்தானே உருவாக்கி நம் பிள்ளைகளுக்கு அளிக்கிறோம்.

அந்தப் பிள்ளைகளுக்கு மோசடியும், அநீதியும் தான் வெற்றிக்கான வழி என்பதை மறைமுகமாக நாம் கற்பிக்கிறோம் இல்லையா? அதன்பின்பு நம்மிடம் நியாயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் எதிர்பார்க்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?
எக்காரணம் கொண்டும், கட்சி, மதம், சாதி எந்த பின்னணியான, குற்றவாளிகளுக்கும் ஓட்டளிப்பதில்லை என்ற உறுதி நமக்குத் தேவை. இது நம் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் நாம் அளிக்கும் வாக்குறுதி.கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு:-ஜெயமோகன்-

jeyamohan.writer@gmail.com
www.jeyamohan.in
நன்றி : தினமலர் http://www.dinamalar.com/news_detail.asp?id=1483665


No comments:

Post a Comment