Thursday, April 21, 2016

ஜனநாயகச் சோதனைச்சாலையில்-18: நடிகர் நாடாளும் போது

  •  ஏப்ரல் 06,2016
  •  
  •  
  • இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தை பற்றியும் பிற மாநிலத்தவருக்கு ஒருவகையான புரிதல் இருக்கிறது. அது பெரும்பாலும் தவறான புரிதல் என்பதில் சந்தேகமில்லை. தங்களை ஓர் உயர்ந்த பீடத்தில் அமர்த்தி, பிறரை குனிந்து பார்க்கும்

    பார்வைதான் அது. ஒருமுறை :கேரளத்தில், ஒரு பல்கலைக்கழக விவாதத்தில், அரசியல் துறை பேராசிரியர் எழுந்து, “தமிழகத்தின் அரசியல் களத்தில் சினிமா நடிகர்களுக்கு இருக்கும் மிதமிஞ்சிய செல்வாக்குக்கு என்ன காரணம்?” என்று கேட்டார். நான், “தமிழகத்தின் அரசியல் களத்தில் மிதமிஞ்சிய செல்வாக்கில் இருக்கும் நடிகர்களின் பெயர்களை வரிசையாக சொல்லுங்கள்,” என்றேன். ''இல்லை, தமிழகத்தின் அரசியலை சினிமாதான் தீர்மானிக்கிறது,” என்று அவர் சொன்னார். ''தமிழக சினிமாவிலிருந்து அரசியலை தீர்மானித்தவர்களின் ஒரு பட்டியலைச் சொல்லுங்கள்,” என்று திரும்பவும் கேட்டேன்.
    “எம்.ஜி.ஆர்” என்றார். “சரி” என்றேன். சற்று சிந்தித்துவிட்டு, ''கருணாநிதி” என்றார். அதன்பிறகு, ''ஜெயலலிதா” என்றார் கடைசியாக, ''விஜயகாந்த்” என்றார். நான் சொன்னேன், “தமிழக அரசியலையே சினிமா தீர்மானிக்கிறது என்று சொல்லிவிட்டு நான்கே நான்கு பெயர்களை தான் உங்களால் சொல்ல முடிகிறது. கேரள அரசியலிலும் நாலைந்து நடிகர்களின் பெயர்களை நான் சொல்ல முடியும்,” நான் மேற்கொண்டு விளக்க ஆரம்பித்தேன்.

    எம்.ஜி.ஆர்., கருணாநிதி இருவரும் சினிமாவை தங்கள் ஊடகமாக கொண்ட அரசியல்வாதிகள். அரசியலின் ஒரு பகுதியாகத்தான் அவர்கள் சினிமாவைக் கையாண்டார்கள். எம்.ஜி.ஆரோ கருணாநிதியோ ஒருபோதும் வெறும் சினிமாக்காரர்களாக தங்களை முன் நிறுத்திக் கொண்டவர்கள் அல்ல. ஜெயலலிதாவை பொறுத்தவரை அவர் எந்த அரசியல் இயக்கத்தையும் தொடங்கி நடத்தி வெற்றி பெற்றவர் அல்ல.

    எம்.ஜி.ஆருக்கு அணுக்கமானவர் என்ற அடையாளத்துடன் அ.தி.மு.க.,வின் தலைமைப் பொறுப்புக்கு அவர் வந்தார். அப்படிப் பார்த்தால் சீனாவின் புரட்சியாளராகிய மா சே துங்குக்கு பிறகு அவரது காதலியாகிய ஜியாங் க்விங் (Jiang Qing) என்ற நடிகை, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பதவிக்கு வந்திருக்கிறார். அமெரிக்காவில் ரொனால்ட் ரீகன் அதிபராக பத்து வருடம் இருந்திருக்கிறார்.
    விஜயகாந்த் அரசியலுக்கு வந்தாலும் மிகக்குறைவான செல்வாக்கை தான் தமிழக அரசியலில் அவரால் உருவாக்க முடிந்திருக்கிறது. அதற்கு அவருக்கு இருக்கும் தெலுங்கு ஜாதிப் பின்புலம் ஒரு காரணம். மற்றபடி தமிழக சினிமாவில் ஓங்கி உயர்ந்து நின்ற பல ஆளுமைகள்
    அரசியலில் வெற்றி பெற்றதில்லை.
    சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், பாக்யராஜ், டி.ராஜேந்தர் தொடங்கி என்று ஒரு நீண்ட பட்டியலையே
    சொல்லலாம்.
    வடமாநிலங்களில் சினிமா நடிகர்கள் அரசியலில் குறைவாகவே வெற்றி பெற்றார்கள். அதற்கான காரணத்தை வடமாநிலங்களில் நீங்கள் பயணம் செய்தால்
    அறியலாம். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் போன்ற பகுதிகளில்
    திரையரங்குகளே மிகக்குறைவு. நகரங்களில் மட்டும்தான் சினிமாவே உள்ளது.
    சினிமாப் பாடல்களைக் கூட இன்றும் நாட்டுப்புறங்களில் அதிகமாக கேட்க முடியாது. நாட்டுப்புற இசைதான் எங்கும் ஒலிக்கும். ஒட்டுமொத்தமாக வடமாநிலங்களில், இந்தி சினிமா சென்றடையும் பகுதிகள் மிகக் குறைவானவை.
    அங்கே சாதாரண மக்கள் அனைவரையும் சென்றடையும் ஊடகமென்பது தொலைக்காட்சிதான். ஆகவே, தொலைக்காட்சி நட்சத்திரங்கள் அரசியலில் வெல்கிறார்கள். சிறந்த உதாரணம் இன்று கல்வி அமைச்சராக இருக்கும் ஸ்மிரிதி இரானி. தமிழகம் திரைப்படத்துக்கு பின்னால் ஓடுகிறது என்பது உண்மை. ஆனால், திரைப்
    படக்காரர்கள் அனைவரையும் அரசியலுக்குத் தமிழர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது பொய்.
    இவ்வாறு விளக்கியபின் மேலதிகமாக ஒன்றை சேர்த்துச் சொன்னேன். அரசியல்வாதிகள் சினிமா ஒரு படி கீழானது என்று சொல்லும் எந்த தகுதியும் அற்றவர்கள். ஒரு சினிமா நடிகர் உண்மையான அரசியல் ஈடுபாடும், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கமும் கொண்டிருந்தார் என்றால் மற்றவர்களை விட அவர் சிறந்த அரசியல்வாதி தான்.
    ஏனென்றால், பிற அத்தனை அரசியல்வாதிகளும் சாதியுடனும் மதத்துடனும் சம்பந்தப்பட்டவர்கள். அந்த வட்டத்தைச் சாராத பிறரால் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள். நடிகர்கள் எப்படியோ சாதி, மத அடையாளத்துக்கு அப்பால் இருப்பவர்களாக இருப்பதனால் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தலைவர்களாக இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஒரு சிறந்த உதாரணம்.
    மேலும் சிறந்த உதாரணம், என்.டி.ராமராவ். எண்பதுகளில் நான் ஆந்திராவில் பயணம் செய்தபோது ஆந்திரா வறுமை வாய்ப்பட்டு, 100 ஆண்டுகளுக்குப் பின்னால் துாங்கிக் கிடப்பதாகத் தோன்றியது. சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து அங்கு காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. மாநில முதல்வர்களை காங்கிரசின் மத்திய தலைமை தீர்மானித்தது.
    மத்திய தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் சுருக்கெழுத்தாளர்களோ, அந்தரங்கச் செயலர்களோ ஆந்திராவின் முதல்வர்களை துாக்கியடித்தார்கள். ஆகவே, ஆந்திர முதல்வராக அமர்ந்தவர்கள் ஆந்திராவுக்கு எதுவுமே செய்ய நினைக்கவில்லை. மத்திய தலைமையை மகிழ்விப்பதில் மட்டும் தான் குறியாக இருந்தார்கள். இது தான் ஆந்திராவை தேங்கி அழிய வைத்தது.
    அச்சூழலில் தான் அங்கு என்.டி.ராமராவ் ஆட்சிக்கு வந்தார். ஆந்திர முதல்வராக இருந்த அஞ்சய்யா என்பவரை, 1982ல் காங்கிரஸ் பொது செயலர் ராஜீவ் காந்தி விமான நிலையம் ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில் கன்னத்தில் அறைந்தார். அந்தச் செய்தி ஆந்திராவில் உருவாக்கிய அவமான உணர்வுதான் என்.டி.ஆரை ஓர் அரசியல் சக்தியாக மாற்றியது.
    தெலுங்குதேசம் அவர் ஆரம்பித்த கட்சி. அது ஆந்திராவுக்கு மிகப்பெரிய புத்துணர்வு உருவாகியது. அவர் நினைத்தால் வட்டார உணர்வுகளைத் துாண்டியிருக்கலாம்.
    ஆந்திராவில் பெரிய பொருளாதார சக்தியாக உள்ள தமிழர்களுக்கு எதிரான கசப்புகளை வளர்த்திருக்கலாம். எதையும் அவர் செய்யவில்லை. தமிழர்களை நண்பர்கள் என்றே சொன்னார். தேசிய நோக்கையே முன்வைத்தார். ஆனால், ஆந்திரா என்னும் தன்மதிப்பை அங்குள்ளவர்களிடம்
    உருவாக்கினார்.
    இன்று ஆந்திராவுக்கு செல்லும்போது துாங்கிக் கொண்டிருந்த ஒரு பூதம் கண் விழித்து எழுந்தது போல பிரமிப்பு எழுகிறது. என்.டி.ராமராவின் சாதனைகள் இரண்டு. ஒன்று, நெடுங்காலமாக ஆந்திராவை ஆட்டிவைத்த இடதுசாரி தீவிரவாதிகளின் வன்முறையை அவர் தீர்த்து வைத்தார். இரண்டு, தெலுங்கு கங்கா என்ற மாபெரும் பாசனத் திட்டம் வழியாக ராயலசீமா என்ற வறண்ட பகுதிக்கு நீர்வசதி செய்து கொடுத்தார். அவ்விரு செயல்களாலும் ஆந்திரா மிகப்பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி அடைந்து இன்று இந்தியாவின் மிகப்பெரிய சக்தியாக மாறி உள்ளது.
    இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆந்திர மாணவர்கள் முதலிடம் வகிக்கிறார்கள். விவசாய உற்பத்தியில், தொழில், மின்சார உற்பத்தியில் ஆந்திரா முதலிடம் வசிக்கும் மாநிலமாக மாறிக்
    கொண்டிருக்கிறது.
    இவை அனைத்திற்கும் வழி வகுத்தவர் ஒரு நடிகர். அரசியல்வாதிகளின் எந்த எதிர்மறை அம்சமும் இல்லாதவர். முழுக்க முழுக்க மக்களை நம்பியவர். மக்கள் முன் அவர் நடித்தார் என்பதில் ஐயமில்லை. ஆனால், மக்கள் வாழ்க்கையை மலரச்செய்தார்.
    என்.டி.ஆர்., நடிகர் என்பதாலேயே அவர் ஆண்ட காலம் முழுக்க இந்தியாவில் உள்ள ஆங்கில ஊடகங்களில் ஒரு கோமாளியாக அவர் சித்தரிக்கப்பட்டார். அறிவு
    ஜீவிகளால் கேலி செய்யப்பட்டார். ஆனால் அவரளவுக்கு ஒரு மாநிலத்திற்கு மிகப்
    பெரிய பங்களிப்பாற்றிய அரசியல்வாதிகள் இந்தியாவில் குறைவே.
    அப்படியென்றால் நடிகர்களை குறை சொல்வதற்கு பத்திரிகையாளர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு ஏதேனும் தகுதியிருக்கிறதா? நடிகர்கள் தங்கள் புகழை அரசியலுக்கு செலவிட்டு பணமும் அதிகாரமும் அடைவது கீழ்மையானதுதான்.
    ஆனால், தனக்கிருக்கும் செல்வாக்கைக் கொண்டு ஜனநாயகத் தேர்தல் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று ஒரு நடிகர் முன்வந்தால் அனைத்து வகையிலும் அது
    வரவேற்கத்தக்கதே. ஜெயமோகன்
    கட்டுரையாளர், எழுத்தாளர்
    தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com
    www.jeyamohan.in
    நன்றி : தினமலர்
    https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/1495402

    No comments:

    Post a Comment