Thursday, April 21, 2016

ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 14:யானைநடை

ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 14:யானைநடை

  •  ஏப்ரல் 02,2016
  •  
  •  
காட்டில் சென்று பழக்கமுடையவர்களுக்குத் தெரிந்த ஓர் உண்மை இது. காட்டு யானை நடப்பதைப் போலத்தான் தோன்றும். புதியவர்கள் அது விரைந்து வரவில்லை என நினைப்பார்கள். ஆனால் நாம் முழுமூச்சாக ஓடுவதைவிட விரைவாக வந்து நம்மை அது பிடித்துவிடும். 'கண்களை நம்பாதீர்கள். யானை மிகப்பெரிய விலங்கு. ஆகவே அது ஓடுவதாக நமக்குத் தெரிவதில்லை' என்பார்கள்.
அரசாங்கத்தின் ஏதேனும் ஒரு பகுதியுடன் தொடர்ச்சியான உறவுடையவர்கள் நம்முடைய ஜனநாயக அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள். ஒரு பெரிய பாத்திரத்திற்குள் நுாறு நண்டுகளை பிடித்து போட்டிருப்பது போல. நண்டுகளை யாரும் கட்டிப்போட்டிருக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு நண்டும் இன்னொரு நண்டை பற்றிக் கொண்டிருப்பதனால் அவை அந்த ஜாடியை விட்டு வெளியேற முடியாது.
அதேபோலத்தான் இங்கு ஒவ்வொரு மட்டத்திலும் ஒருவருடைய அதிகாரம் இன்னொருவரால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். நீதிமன்றத்தின் அதிகாரம் பாராளுமன்றத்தாலும், பாராளுமன்றத்தின் அதிகாரம் குடியரசுத் தலைவராலும், குடியரசுத் தலைவரின் அதிகாரம் அரசியல் சட்டத்தாலும், அரசியல் சட்டத்தைக் காக்கும் பொறுப்பு நீதிமன்றத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
மாவட்ட ஆட்சித்தலைவரின் அதிகாரம் மாவட்ட காவல் துறையின் அதிகாரத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விருவரின் அதிகாரத்தை மாவட்ட நீதிபதியின் அதிகாரம் கட்டுப்படுத்துகிறது. இவர்களின் அதிகாரத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம்
கட்டுப்படுத்துகிறது.வெட்டு ஒன்று துண்டு ரெண்டு இவ்வாறு ஒவ்வொரு தளத்திலும், ஒருவருக்கு வரம்பில்லா அதிகாரம் வராதபடி மற்ற அமைப்புகள் கட்டுப்படுத்தும்படியாகத்தான் நமது அரசியல் சட்டம் எழுதப்பட்டுள்ளது. ஆகவே நாம் அரசாங்கத்தின் எந்த ஒரு பகுதியுடன் தொடர்பு கொண்டாலும் அங்கு ஒவ்வொன்றும் மிகச்சிக்கலாக இருப்பதாகவும், எதுவுமே நடக்க முடியாதபடி இருப்பதாகவும்தான் தோன்றும்.பொறுமை இழந்து போய் நாம் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இழப்போம். “ஒரு சர்வாதிகார அரசு வரணும் சார். அப்பதான் இதெல்லாம் சரியாகும்” என்று டீக்கடை விவாதங்களில் யாரேனும் ஒருவர் கண்டிப்பாக சொல்வார்.
உண்மையில், நம் அத்தனை பேருக்குமே வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று விஷயங்களை முடித்து தரக்கூடிய ஆற்றல் மிகுந்த ஒரு சர்வாதிகாரி வரவேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அந்த ஆசையைத்தான் சினிமாக்காரர்கள் அறிந்து தங்கள் படங்களில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒருநாள் முதல்வரின் கதையை சொல்லும் 'முதல்வன்' என்ற திரைப்படம் உதாரணம்.
அரசாங்கத்தைப் பற்றித் தெரிந்த அனைவருக்குமே ஒரு முதல்வர் ஒரு நாளில் அத்தனை முடிவுகளை எடுக்க முடியாதென்றும், அப்படி எடுத்தாலும் அது வெறும் காகித உத்தரவுகளாகத்தான் இருக்குமென்றும், எவையுமே நடைமுறைக்கு வரமுடியாதென்றும் நன்கு தெரிந்திருக்கும். காரணம், முதல்வரின் அதிகாரம் வேறு பல அரசியல் அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்துக்கும் மேலாக இந்தியாவின் ஒட்டுமொத்த நிர்வாகத்தின் ஒரு பகுதிதான் தமிழக முதல்வர். ஆனால் அப்படி ஒரு சர்வாதிகார ஆட்சியாளர் வேண்டுமென்று நமது ஆசை அந்தப்படத்தை நம்மை ரசிக்க வைக்கிறது. உண்மையில், இந்தியாவைச் சுற்றியுள்ள கணிசமான நாடுகளில் சர்வாதிகார ஆட்சிதான் உள்ளது. ஒப்புக்கு சில இடங்களில் தேர்தல் நடத்தப்படுகின்றன, அவ்வளவுதான். அந்தச் சர்வாதிகார நாடுகளனைத்தும் நம்மைவிட வலிமையான அரசுகளாக இருக்கின்றனவா என்ன? அல்லது அங்குள்ள மக்கள் நம்மைவிட மேலான வாழ்க்கை வாழ்கிறார்களா? வாய்ப்பே இல்லை. ஏன்?ஒரு சர்வாதிகாரி மிக மிக நல்லவராக இருக்கட்டும், மக்களுக்காக உயிரையே கொடுப்பதற்கு தயாரானவராக இருக்கட்டும். ஆனால் அந்த நாட்டை முழுக்க கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஆதரவாளர் வட்டம் ஒன்று இல்லாமல் அவரால் எப்படி அதிகாரத்தை பெற முடியும்? அவர் சொல்வதை நடைமுறைப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்ட ஒரு அரசாங்க அமைப்பு அவருடன் இல்லாமல் அவரால் எப்படி ஆட்சி அமைக்க முடியும்? அதாவது ஒரு சர்வாதிகாரி என்பவர் ஒரு தனிமனிதர் அல்ல, அவர் ஓர் ஆட்சியாளர் கூட்டத்தின் தலைவர்.
அரைநுாற்றாண்டு காலம்:அந்தக் கூட்டம் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், எதை வேண்டுமானாலும் செய்யும் அதிகாரத்துடன், ஆட்சிக்கு வந்தால் அவர்கள் பிற மக்களுக்கு நன்மைதான் செய்வார்கள் என்று யார் சொன்னது? அவர்கள் தங்கள் நலனைத்தான் பாதுகாத்துக் கொள்வார்கள். இத்தனை கட்டுப்பாடுகளும், கண்காணிப்புகளும் இருந்தும் கூட இங்கே ஆளும் வர்க்கம் ஊழலிலும் கேளிக்கையிலும் திளைத்துக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்டுப்பாடும் இல்லையென்றால் அங்கே என்ன நடக்கும்?
ஆகவே, நன்மை செய்யும் சர்வாதிகாரி என்று எவரும் இல்லை. நன்மை செய்யும் எண்ணத்துடன் ஆட்சிக்கு வந்த சர்வாதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து அவர்களால் நன்மை செய்ய முடியாது. அவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காகவே தங்கள் ஆதரவாளர்களுடன் சமரசம் செய்து கொள்வார்கள். அவர்களை கொள்ளையடிக்க அனுமதிப்பார்கள். காலப்போக்கில் ஒரு கொள்ளை கூட்டத்தலைவராக மாறி அந்த நாட்டை அழிப்பார்கள்.
உண்மை, சர்வாதிகார ஆட்சியில் முடிவுகள் மிக விரைவாக எடுக்கப்படும். ஒவ்வொன்றும் சீக்கிரம் நிகழும். ஆனால் அடிப்படையில் அந்த வேகம் தவறானது. சமூகத்திலும் சரி, பொருளாதாரத்திலும் சரி, ஒரு விஷயம் உருவாகி வந்து நிலை பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிறது. ஒரு சாதாரணமான கிராமச் சந்தையை எடுத்துக் கொண்டால் கூட, ஒரு கூறிப்பிட்ட இடத்தில் அந்தச் சந்தை அமைவதற்கு அரைநுாற்றாண்டு காலம் கூட ஆகும். அங்கு அந்தச் சந்தை நீடிப்பதற்கான மறைமுகமான காரணங்கள் ஏராளமாக இருக்கும். அத்தனை காரணங்களையும் எந்த பெரிய நிபுணரும் கண்டடைந்துவிட முடியாது.
திடீரென்று ஒரு மாவட்ட அதிகாரி வந்து எவரையும் கலந்தாலோசிக்காமல, ஒரே நாளில் அங்கு சென்று சந்தையை இன்னொரு இடத்திற்கு மாற்றினால் மொத்த வணிகமும் அழிந்து போகலாம். அப்படி ஒரு சந்தையே இல்லாமல் ஆகக்கூடும். ஆகவே, ஒரு சந்தையை இடமாற்றம் செய்வதென்றால் அச்சந்தையுடன் சம்பந்தப்பட்ட அனைவருடைய கருத்தையும் கேட்டு, வெவ்வேறு வகையில் அனைவரையும் நிறைவு செய்து, சிறிது சிறிதாக இடம் மாற்றம் செய்வதே சரியானது. அவ்வாறு இடம் மாற்றம் செய்யும்போது வரக்கூடிய சிறிய சிக்கல்களையெல்லாம் சரிசெய்து மேலே செல்ல வேண்டும். அதுவே ஜனநாயக வழிமுறை.
ஜனநாயகத்தில் எந்த ஒரு விஷயத்திலும் உடனடியாக முடிவெடுக்க முடியாது. சிறிய அளவில் சோதனை பார்த்து அதிலுள்ள பிரச்னைகளை சரிசெய்த பின்னரே அடியெடுத்து வைக்க முடியும். ஏதாவது ஒரு தொழிலை, ஒரு வணிகத்தைச் செய்து பார்ப்பவர்களுக்கு இது உடனடியாகப் புரியும். ஆனால் அனுபவமற்ற இளைஞர்கள் அவர்கள் இளமை காரணமாக ஒவ்வொன்றும் விரைவாக நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். விரைவாக நடக்கவில்லை என்றால் பொறுமை இழக்கின்றனர்.
இன்றைக்கு நம்முடைய வாக்காளர்களின் மூன்றில் ஒரு பங்கினர் முதல்முறை வாக்களிக்கும் இளவயதினர். ஆகவே அவர்களின் பொறுமையின்மையை வளர்த்து தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளும் அரசியல்வாதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். அனைத்தையும் பத்து நாளில் சரிசெய்வதை பற்றியும், ஒருவருஷத்தில் உலகையே மாற்றுவதைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நவீன ஜனநாயகத்தைப் புரிந்து கொண்ட இளைஞர் அவர்களிடம் இதை சொல்ல வேண்டும். ''நண்பரே, ஜனநாயகம் என்பது மெதுவாக மட்டுமே செயல்படக்கூடிய அமைப்பு. எந்தக் காடும் ஒரே நாளில் உருவாகிவிடுவதில்லை. எந்த வயலும் ஒரே நாளில் விளைவதும் இல்லை.
ஜனநாயகம் என்பதே அனைத்து மக்களுக்கும் நியாயம் செய்யக்கூடிய செயல்கள் மட்டும் நிகழும் ஓர் அமைப்பு. ஆகவே, அனைத்து மக்களுடைய குரலையும் கேட்டு அனைவருக்கும் பொதுவான ஒரு குரலை ஒட்டிதான் அது செயல்பட முடியும் அதற்கு தவிர்க்க முடியாத ஒரு நிதானம் தேவை.”
அத்தகைய நிதானம் இல்லாவிட்டால் ஜனநாயகம் அழியும். ஜனநாயகம் அழிந்தால் யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ யார் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்களுடைய நியாயம் மட்டுமே நிகழும். மற்றவர்கள் ஒடுக்கப்படுவார்கள். ஆகவே யார் ஒருவர் வேகம் வேகம் என்று கத்துகிறார்களோ அவர்கள் ஜனநாயகத்துக்கு எதிரிகள். அவர்கள் உண்மையில் ஆக்கத்தை பற்றி பேசவில்லை, அழிவைப்பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
-ஜெயமோகன்-
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com
www.jeyamohan.in
நன்றி : தினமலர்
http://election.dinamalar.com/detail.php?id=6152

No comments:

Post a Comment