Wednesday, April 20, 2016

ஜனநாயக சோதனை சாலையில்-11:உறிஞ்சும் பூச்சிப்படை

டக்ளஸ் ஆடம்ஸ் என்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் அறிவியல் புனைகதைகளை பகடி செய்து நிறைய எழுதி இருக்கிறார். அதில் ஒரு கதையில் அதிபிரம்மாண்டமான ஓர் எந்திரம் வரும். மிகப்பெரிய அளவில் எரிபொருளை செலவழித்து, செவிதுளைக்கும் பேரோசையுடன் அது இயங்கிக் கொண்டிருக்கும். நுாற்றுக்கணக்கான் சிலிண்டர்கள், வால்வுகள், பிஸ்டன்கள், பற்சக்கரங்கள். சரி, அந்த இயந்திரம் எதை உருவாக்குகிறது என்று கேட்கும் போது “இல்லை, அது எதையும் உருவாக்குவதில்லை, சிறப்புற செயல்படுவது மட்டும்தான் அதன் வேலை” என்று சொல்கிறார்கள்.
“அப்படியா எதன் பொருட்டு இது தன்னை இயக்கிக் கொள்கிறது?” என்று கேட்கும்பொழுது மீண்டும், “ஐயா, தன்னை மிகச்சிறப்பான ஒரு எந்திரமாக செயல்படவைக்கும் பொருட்டுதான் இது இயங்கிக் கொண்டிருக்கிறது” என்கிறார்கள்.
நம்முடைய முக்கியமான அரசியல் கட்சிகள் அனைத்துமே இவ்வகைப்பட்டவை. இங்கு ஆட்சி செய்யும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் எடுத்துப்பாருங்கள். அவற்றுக்கு லட்சக் கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். நாமறிந்து பெரும்பாலானவர்களின் முழுநேரத்தொழிலே அரசியல்தான். சிலர் அரசியலில் இருந்து ஈட்டிய பொருளைக் கொண்டு வேறு தொழில்களை உருவாக்கி வைத்திருப்பர். ஆனால் ஒரு தரமான தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி பெறும் சம்பளத்தைவிட அதிகமாக இவர்கள் சம்பாதிக்கிறார்கள்.

அப்படி பார்த்தால் இந்த ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்தியாவில் இருக்கும் டாட்டா, இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ் போன்ற மிகப்பிரம்மாண்டமான நிறுவனங்களுக்கு சமமானவை. அத்தனை ஊழியர்கள் அதற்கு இருக்கிறார்கள். அத்தனை 'சம்பளம்' கொடுக்கப்படுகிறது.
ஆனால் டாட்டாவும் ரிலையன்ஸும் உற்பத்தி செய்கின்றன, வினியோகம் செய்கின்றன. தேசப் பொருளாதாரத்துக்குப் பங்காற்றுகின்றன. இந்த அரசியல் கட்சிகள் எதையும் உற்பத்தி செய்வதில்லை. இவற்றின் ஊழியர்கள் சம்பளம் பெறுவதுடன் சரி.

இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் நோய்க்கட்டிகள் இந்தக் கட்சிகளின் பிரம்மாண்டமான தொண்டர் படைகள். உண்மையில் ஒரு கட்சிக்கு தொண்டர்கள் எதற்காக? இதை நாம் ஒருபோதும் எண்ணிப்பார்த்திருக்க மாட்டோம். தொண்டர்கள் ஒரு கட்சி யின் பலம் என்று நினைக்கிறோம். நிறைய தொண்டர்கள் கொண்டுஇருந்தால் ஒரு கட்சி சிறந்தது என்று கூட நாம் நினைப்பதுண்டு.ஆனால் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் நிறுவனம் அது என்று சிந்தித்து பார்த்தால் இன்னொரு பக்கம் தெரியும்.

பழங்காலத்தில், இன்றைய செய்தி ஊடக முறைகள் எவையும் இல்லாதிருந்த ஒரு சூழலில் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு தொண்டர்கள் தேவைப்பட்டார்கள்.
இந்திய ஜனநாயகம் சுதந்திரப்போராட்டக் காலத்தில்தான் தொடங்கியது. அந்நிய அரசுக்கு எதிராக தொடர்ச்சியான பிரச்சாரங்களுடன் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தொண்டர்கள் தேவைப்பட்டார்கள். 1918ல் இந்தியாவுக்கு காந்தி வரும்போது காங்கிரசுக்கு ஆர்வலர்கள் இருக்கிறார்களேயொழிய தொண்டர்கள் இல்லை என்பதைக் கண்டார்.

1920ல் அவர் தொடங்கிய ஒத்துழையாமைப் போராட்டம் வன்முறையில் முடிந்தது. சவுரி சவுரா என்னுமிடத்தில் ஒரு போலீஸ் நிலையம் தாக்கப்பட்டது. அகிம்சை வழிப் போராட்டம் என்னும் திட்டம் குலைந்தமையால் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
வன்முறையில் இறங்குவது, பிரிட்டிஷ் ராணுவத்திற்கு முன்பாக சாமானிய மக்களைக் கொண்டு சென்று நிறுத்துவது, அதற்கு பிரிட்டிஷாருக்கு வாய்ப்பே அளிக்கக் கூடாது என்று காந்தி நினைத்தார்.

அதன்பின்பு நாடு முழுக்க அலைந்து சேவாதல் என்ற அமைப்பை உருவாக்கினார். முழுநேர ஊழியர்களை பல்லாயிரக்கணக்கில் கட்சியில் சேர்த்து, அவர்களுக்கு அகிம்சை முறையில் போராடவும் காங்கிரசின் கருத்துக்களை மக்களிடம் எடுத்துக் கொண்டு செல்லவும் பயிற்சியளித்தார்.இவ்வாறுதான் இந்தியாவில் முதல்முறையாக மிகபிரம்மாண்டமான அரசியல் தொண்டர் படை உருவாயிற்று. இன்றைக்குக்கூட எந்த அரசியல் இயக்கத்திற்கும் அவ்வளவு பெரிய படை இல்லை.

அன்று இளைஞர்கள் மிகக்குறைந்த ஊதியத்திற்கு ஊழியர்களாக வந்து சேவாதலத்தில் சேர்ந்தார்கள். பெரும்பாலானவர்கள் உயர்கல்வி பெற்றவர்கள், மிகப்பெரிய பதவியில் அமரும் தகுதி கொண்டவர்கள்.தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து அவர்கள் காங்கிரசுக்காக பணியாற்றினார்கள். சின்னஞ்சிறு கிராமங்களுக்கெல்லாம் சென்று அரசியல் மாற்றத்தின் செய்தியை பரப்பினார்கள். சொல்லப்போனால் இந்தியாவின் பல கிராமங்களுக்கு வெளியிலிருந்து வந்த முதல் அரசியல் செய்தியே சேவாதலத் தொண்டர்களால் கொண்டு செல்லப்பட்டதுதான்.
கிராம சீரமைப்பு, கைத்தொழில் வளர்ச்சி, தாழ்த்தப்பட்டோர் நலம், குடி எதிர்ப்பு ஆகியவற்றிற்கு தங் களை அர்ப்பணித்து பணியாற்றியது சேவாதல். காந்தியின் போராட்டங்கள் அனைத்தையும் அவரது அகிம்சை தொண்டர்கள் தான் முன்னால் நின்று நடத்தினார்கள்.
ஆகவே தான் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டபோதும் கூட வன்முறை வெடிக்காதவை யாக காந்தியப் போராட்டங்கள் அமைந்தன. அவை பிரிட்டிஷ்காரர்களுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை உருவாக்கின.

இந்தியாவை விடுதலைப் பாதையில் கொண்டு வந்தார்கள் சேவாதலத்தின் தொண்டர்கள்.
உண்மையில் காந்தி தனக்கே உரிய தீர்க்க தரிசனத்தால் சுதந்திரத்துக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை ஓரளவுக்கு கணித்திருந்தார். அந்நிய ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை முன் நின்று நடத்தவும், செய்தி ஊடகங்கள் இல்லாமல் இருந்த காலகட்டத்தில் ஜனநாயகச் செய்திகளை இந்தியா எங்கும் கொண்டு சென்று சேர்க்கவும் தொண்டர் படை தேவைப்பட்டது.

அந்நிய ஆட்சி மறைந்து, நவீனச் செய்தித்தாள்கள் வானொலி முதலியவை உருவான பிறகு, அந்த மாபெரும் தொண்டர் படை தேவையற்ற ஒன்றாக ஆகிவிடும் என்று காந்தி எண்ணினார். தேவையற்ற ஒரு அமைப்பு உடனடியாக அழுகி நாறுவதை தவிர்க்க முடியாது.
ஆனால் நேரு இந்தியாவின் ஜனநாயக அமைப்பை கட்டிக்காக்க அந்தத் தொண்டர்படை தேவை என நினைத்தார். இந்தியாவின் முதல் தேர்தல் 1951--52ல் மிக வெற்றிகரமாக நிகழ சேவாதல் உதவியது என்பதை மறுக்க முடியாது.

ஆனால் காலப்போக்கில் காங்கிரசின் பிரம்மாண்டமான தொண்டர் படைதான் அதன் பலவீனமாக மாறியது. அத்தனை தொண்டர்களுக்கும் வாழ்வாதாரத்தை உருவாக்கி கொடுப்பதற்காக படிப்படியாக காங்கிரஸ் ஊழலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், தொண்டர் அரசியல் இந்தியாவில் வேரூன்றியதால் எல்லா கட்சியும் தங்களுக்கான தொண்டர்களை உருவாக்கிக் கொண்டன. இன்று இந்தியாவில் எல்லா அரசியல் கட்சியிலும் சேர்த்து வைத்திருக்கும் தொண்டர்களின் எண்ணிக்கை ஒரு வேளை மத்திய அரசின் ஊழியர் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கலாம்.
இந்தியாவில் அரசியல் கட்சிகள் செய்யும் ஊழலின் பெரும் பகுதித் தொகை இங்கு தொண்டர்களுக்கு சென்று சேர்கிறது. ஆளும்கட்சித் தொண்டர்கள் ஆட்சிக்காலம் முழுக்க ஊழலில் ஈடுபட்டு கொள்ளையடிக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது சேர்த்து வைக்கும் பணம் தேர்தல் காலத்தில் தொண்டர்களுக்கு வருகிறது.

தேர்தல் என்பதே தொண்டர்களுக்கு பணம் அளிக்கும் ஒரு திருவிழாவாக ஆகிவிட்டது. இன்று அரசியல் தொண்டர்கள் நாட்டின் மிகப்பெரிய ஒட்டுண்ணிக்கூட்டம்.
மிகப் பிரம்மாண்டமான தொண்டர் படையை வைத்திருக்கும் கட்சி என்ன தான் வாக்குறுதி கொடுத்தாலும் ஊழல் செய்யாமல் ஆட்சிக்கு வரவோ, ஆட்சியில் நீடிக்கவோ முடியாது. எதிர்காலத்தில் இந்த வகையான தொண்டர்கள் இல்லாமல் நேரடியாக கட்சித்தலைமை மக்களிடம் பேசி, நேரடியாக வாக்குகள் பெற்று ஆட்சிக்கு வரக்கூடிய ஓர் ஆட்சி முறை வருவதைத் தவிர்க்க முடியாது.ஏனென்றால் ஜனநாயக முன்னோடிகளான ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் அதுதான் நிகழ்ந்தது. அதற்குக் காரணம் ஊடகங்கள்.

இன்று எந்த ஆட்சியாளர் தொண்டர்களை குறைக்கிறாரோ அவரே தேவையானவர் மக்களுக்கு நன்மை செய்வதற்கும் வாய்ப்புள்ளவர். எவருக்கு மாபெரும் தொண்டர்பலம் இருக்கிறதோ அவரால் உண்மையில் நினைத்தாலும் எந்த நன்மையும் செய்யமுடியாது.

-ஜெயமோகன்-
கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com
www.jeyamohan.in

நன்றி : தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1489704

No comments:

Post a Comment