- ஏப்ரல் 03,2016
குமரி மாவட்டத்தின் பொருளியலை தீர்மானிக்கும் முக்கியமான சக்தியாக விளங்குவது ரப்பர். சென்ற சில ஆண்டுகளாக ரப்பரின் விலை இறங்குமுகமாக இருந்து இப்போது தரைமட்டமாகி விட்டது. இப்போது, பெரும்பாலானவர்கள் ரப்பர் பாலெடுப்பதையே விட்டு விட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்திருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் ரப்பர் மரங்கள் பயனின்றி நின்று கொண்டிருக்கின்றன. ஏராளமான குடும்பங்கள் வருமானமின்றி நிற்கின்றன.
இதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ஒருவர் தன்னுடைய சொந்த இழப்புகளைப் பற்றி விரிவாக சொல்லி கண்ணீர் மல்கினார். அவர் அரசியலில் இருப்பவர், மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர். ''அரசியல் ரீதியாக இதற்கு என்ன தீர்வு காண முயல்கிறீர்கள்?” என்று கேட்டேன். ''வெவ்வேறு இடங்களில் மனு கொடுத்திருக்கிறோம். அரசாங்கம் பார்த்து எதையாவது செய்ய வேண்டும்,'' என்று அவர் சொன்னார்.
நான் சொன்னேன், ''மனு கொடுப்பதென்பது, பிரச்னையை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவது மட்டும் தான். அதை அரசு கவனித்தே ஆகவேண்டும் என்பதற்கான கட்டாயங்கள் எதை உருவாக்கினீர்கள்?'' நான் என்ன சொல்கிறேன் என்று அவருக்குப் புரியவில்லை.
நாம் இன்னமும் நம்முடைய அரசுகளை, மன்னராட்சி காலத்து சபைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். மன்னராட்சிக்கும், மக்களாட்சிக்கும் அடிப்படையான வேறுபாடுகள் என்ன என்று நம் மக்களிடம் கேட்டால், ஒரு புரிதலுடன் பதில் சொல்பவர்கள் மிகக்குறைவாகவே இருப்பார்கள்.
நல்லவராக இருந்தால்...மன்னர், வரம்பில்லாத அதிகாரம் கொண்டவர். அவரை நியமிக்கவும், நீக்கவும் மக்களுக்கு அதிகாரமில்லை. கொள்கைப்படிப் பார்த்தால், அவர், மக்களின் தந்தை போன்றவர். பிறப்பாலேயே அவருக்கு அந்த அதிகாரம் வந்து விடுகிறது. அவர் நல்லவராக இருந்தால், மக்களின் குறைகளை புரிந்து கொண்டு கருணை உள்ளத்துடன் அவர்களுக்குரிய நன்மைகளை செய்து கொடுப்பார். அவரிடம் தங்கள் குறைகளை தெரிவிப்பது மட்டும் தான் மக்களால் செய்யக்கூடியது.
மக்களாட்சியின் தலைவர் அப்படிப்பட்டவர் அல்ல; அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர். மக்களால் அவரை நீக்கவும் முடியும். மக்கள் பல்வேறு வகையில் பிரிந்து கிடக்கிறார்கள். வட்டாரம் சார்ந்து, செய்தொழில்கள் சார்ந்து அவர்கள் பல குழுக்களாக பிரிந்து இருக்கின்றனர். அப்படியென்றால் எவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அந்த ஆட்சியாளர்? அவர் யாருக்கு கட்டுப்பட்டவர்? அத்தனை குழுக்களுக்கும் கட்டுப்பட்டவர் என்று தான் சொல்ல வேண்டும். அந்தக் குழுக்களிடையே ஒரு சமரசத்தை உருவாக்கி அதன் வழியாக தன் அதிகாரத்தை நிலைநாட்டி ஆட்சியில் இருக்க வேண்டியவர் அவர்.
ஆகவே தான் ஜனநாயக அரசு என்பது ஒரு தராசின் முள் போன்றது என்பார்கள்.
எந்தப்பக்கம் சாய வேண்டும் என்பதை அந்த முள் தீர்மானிக்க முடியாது. எந்தப்பக்கம் எடை இருக்கிறதோ அந்தப் பக்கம் அது தாழும். பல்லாயிரம் தராசுத் தட்டுகளுக்கு நடுவே நிற்கும் ஒரே முள் என்று ஒன்றைக் கற்பனை செய்ய முடியுமென்றால் அதுதான் ஜனநாயக அரசு. ஒரு நாட்டில் அதிகாரத்தை தனக்குச் சாதகமாக செயல்படுத்திக் கொள்ள விழையும் பல சக்திகள் இருக்கும். அது தவறல்ல, அப்படி இருப்பது தான் ஜனநாயகத்தின் வலிமை.
கரும்பு உற்பத்தியாளர்கள் அவர்களுடைய பொருளாதார நலன்களை பேண விரும்புவார்கள். பனைவெல்லம் உற்பத்தியாளர்களும் அவர்களின் நலன்களை பேண விரும்புவார்கள். சர்க்கரை ஏற்றுமதியாளர்கள் தங்கள் நலனை பேண விரும்புவார்கள். இதில் யார் தரப்பில் ஓர் அரசன் இருக்கவேண்டும்? எவருடைய தரப்பு நியாயமானதோ அதன் சார்பில் நிற்க வேண்டும் என்று சொல்லலாம்.
ஆனால், அரசாங்கத்தை தீர்மானிப்பது நியாயங்கள் அல்ல, அதிகாரம் தான். உண்மையில் தேசத்திற்கு எது நன்மையோ, அதை ஒரு ஆட்சியாளன் தன் முடிவாகக் கொள்ள வேண்டும். ஆனால், அவன் முன் இந்த அதிகார தரப்புகளில் எது வலுவாக சென்று நிற்கிறதோ அதை அவன் சார்ந்து கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். இக்காரணத்தால் தான் ஜனநாயக அரசியலில், 'லாபியிங்' எனப்படும் குழு சேர்ந்து பேரம் பேசுதல் அனுமதிக்கப்படுகிறது.
அதை திண்ணை பேரம் என்று சொல்லலாம் :சொல்லப்போனால் சிறந்த முறையில் திண்ணை பேரம் நிகழாவிட்டால் ஜனநாயகம் சரியாக செயல்படாது. கரும்பு உற்பத்தியாளர்கள் தங்களுடைய நியாயங்களை முறையாக தொகுத்துக்கொண்டு, அவற்றை அரசிடம் கொண்டு சென்று சேர்க்கும் சரியான அமைப்புகளை உருவாக்கி, அவ்வமைப்புகளுக்குப் போதுமான அளவுக்கு பண பலத்தை அளித்து, தொடர்ந்து செயல்பட்டாக வேண்டும்.
அமைப்புகள் உருவாக்கம்: அவர்களுக்கு சமானமான ஆற்றலுடன் சர்க்கரை ஏற்றுமதியாளர்கள் செயல்படுவார்கள். இவர்கள் இருவருக்கும் நடுவே பனைவெல்ல உற்பத்தியாளர்கள் அரசாங்கத்தின் கருணையை எதிர்பார்த்து இருப்பார்கள் என்றால் அவர்களுக்கு ஏதாவது ஆறுதல் கொடைகள் தான் கிடைக்கும். அவர்களும் தங்கள் திண்ணைப் பேரத்திற்குரிய அமைப்புகளை உருவாக்கியாக வேண்டும்.
வட இந்தியாவில், முக்கியமான பெருந்தொழில்களாகிய சீனி, பருத்தி போன்றவை மிக வலுவான திண்ணை பேர அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. அவை தங்களுக்குரிய அரசியல்வாதிகளையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் கூட கொண்டுள்ளன. ஆம், அவை அவர்கள் தேர்தலில் வெல்வதற்கு பணமளிக்கின்றன. தங்களுக்கு சாதகமாக பேசுபவர்களை நிறுத்தி ஜெயிக்க வைக்கின்றன. பாராளுமன்றத்திலும், நாடாளுமன்றங்களிலும் அவர்கள் தங்களுக்காக பேசும்படி செய்கின்றன. அதனால் தங்கள் நலன்கள் பேணப்படுவதை உறுதி செய்து கொள்கின்றன.
தூத்துக்குடி ஸ்பிக் உர ஆலையும் வட இந்தியாவின் உர ஆலைகளும் ஒரே சமயம் நிறுவப்பட்டன. தமிழகம் சார்ந்து வலுவான திண்ணை பேர அமைப்பு இல்லாததனால் ஸ்பிக்குக்குச் சாதகமாக ஏதும் நிகழாமல் அது தலையெடுக்காமல் போயிற்று என ஓர் அரசியல்வாதி என்னிடம் சொன்னார். தமிழகத்தில் பல தொழில் வட்டாரங்கள் உள்ளன. உதாரணமாக, திருப்பூர் தமிழகத்தின் மிக முக்கியமான தொழிற்பேட்டை. திருப்பூர் தொழில் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் வரி வருகிறது. ஆனால், தங்களுக்கென்று சட்டசபையிலோ நாடாளுமன்றத்திலோ குரலெழுப்ப அவர்களுக்கு என எவரும் இல்லை.
ஆகவே, எப்போதுமே திருப்பூரை பாதிக்கக்கூடிய சட்டங்கள் மிக எளிதாக நிறைவேறி விடுகின்றன. திருப்பூர் தொழிலுக்கும் வேறொரு வட்டாரத்தை சார்ந்த தொழிலுக்கும் இடையே போட்டி இருக்குமென்றால் திருப்பூருக்கு எந்தவிதமான ஆதரவும் இல்லாமல் ஆகிறது.
ரப்பர் தோட்ட 'லாபி': தமிழகத்திலும், கேரளத்திலும் மட்டுமே உள்ள ரப்பர் தோட்ட தொழிலாளர்களும் ரப்பர் தோட்ட உரிமையாளர்களும் அடங்கிய ஒரு லாபி, கேரளத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் பொதுவாக ஏன் உருவாகக்கூடாது. ஏன் குமரி மாவட்டப் பிரச்னையை தமிழக அரசியலுக்குள் வைத்து மட்டுமே பார்க்கவேண்டும்? ஒரு ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு சட்டசபை உறுப்பினர்களும் அவர்களுக்கென இருப்பார்கள் என்றால் அவர்களின் குரலை எந்த அரசாவது புறக்கணித்துவிட முடியுமா?
இன்னமும் கூட ஜனநாயகத்தில் லாபி அரசியலின் தேவையென்ன, பயன்கள் என்ன என்பதை நமது மக்கள் புரிந்து கொள்ளவில்லை. தங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் முக்கியமான விஷயங்களைக்கூட நவீன ஜனநாயகம் அளிக்கும் வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அழுத பிள்ளையே பால் குடிக்குமென்று பழமொழி சொல்கிறது.
ஜனநாயகத்தில் எந்த பகுதி தாங்கள் கோரிக்கையை உரத்து ஒலிக்கிறதோ அதைக் கட்டாயப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்கிறதோ அதுதான் வெல்லும். மோடியோ, ஜெயலலிதாவோ அரசர்கள் அல்ல, மக்களின் பணியாளர்கள் அவர்கள். அவர்கள் முன்னால் கருணை கோரி கெஞ்சி நிற்பது அல்ல உரிய வழி. அவர்களை கட்டாயப்படுத்தி தங்களுக்காக பணியாற்ற வைப்பது தான்.
இந்த ஒவ்வொரு தொழிலும் தங்களுக்கென ஒரு லாபியைக் கொண்டிருக்கும் என்றால், இந்த லாபிகள் அனைத்தையும் இணைத்து தமிழகத்துக்கென தொழில் உற்பத்தியாளர்களின் லாபி இருக்குமென்றால், இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் ஒரு லாபி இருக்குமென்றால், ஒட்டுமொத்தமாக இவர்கள் தமிழக அரசாங்கத்திடம் கோரிகைகளை முன்வைக்க முடியும். ஜனநாயகத்தில் மக்கள் நேரிடையாக அதிகாரம் செலுத்துவது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிக்கும் போது மட்டும் தான். ஆனால், அந்த ஐந்தாண்டுக் காலமும் இத்தகைய பல்வேறு அமைப்புகள் மூலமாக அரசாங்கத்திடம் பேரம் பேசவும் தங்கள் நலன்களை அடையவும் முடியும்.
லாபியிங் என்பது திரைமறைவு வேலையாகவோ, அரசியல் குற்றமாகவோ கருதப்பட வேண்டியதில்லை. வெளிப்படையாக நிதி வசூல் செய்து சட்டபூர்வமாக செய்யப்படலாம். அது ஜனநாயகம் அளிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. இவ்வாய்ப்பை முதலிலேயே புரிந்து கொண்ட மும்பை குஜராத்தி தொழிலதிபர்கள் தமிழகத்தை விட முன்னர் சென்று விட்டனர். இனிமேலாவது தமிழகம் இவ்விஷயத்தில் விழித்துக் கொள்ள வேண்டும். தேர்தல் அதற்கான ஒரு தருணம்.
ஜெயமோகன்கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com
www.jeyamohan.inநன்றி : தினமலர்
http://election.dinamalar.com/detail.php?id=6222
No comments:
Post a Comment