Thursday, April 21, 2016

ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 16: எது நாளைய ஊடகம்?

  • ஏப்ரல் 04,2016
  •  
  •  
இணையத்தில் என் பெயரை அடித்துத் தேடினால், கனிமொழி கருணாநிதி அவர்கள் ஒரு இலக்கிய விவாதத்தில் என்னை மனநோயாளி என்று குறிப்பிட்டதுதான் முதலில் வரும். அதை நான் மாற்றவே முடியாது. ஏனென்றால், அதை அதிகம் பேர் பார்க்கிறார்கள். ஆகவே, அது முதலில் வருகிறது. முதலில் வருவதனால் மேலும் அதிகமாகப் பார்க்கிறார்கள். ஆகவே, அது மேலும் முதலில் வருகிறது.

நான் நுாறு நுால்களை எழுதியிருக்கிறேன். தத்துவம், வரலாறு, இலக்கியம் சார்ந்து, பல நாவல்களையும், திரைக்கதைகளையும் எழுதியிருக்கிறேன். ஆனால், என் பெயர் சொல்லித் தேடினால் அந்தப் பக்கம்தான் கையில் சிக்கும். இதுதான் இணையத்தின் முக்கியமான சிக்கல்.இன்று, இந்தியாவில் நுால்களைப் படிக்கும் பழக்கம் கொண்ட இளைஞர்கள் அரை சதவீதத்திற்கும் குறைவானவர்கள். சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் எடுத்த [ரகசிய] கணக்கின்படி, நாளிதழ்களை வாசிக்கும் இளைஞர்களே ஐந்து சதவீதத்திற்கும் குறைவு என்று தெரியவந்தது. பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்களில் உதிரியாக வந்து சேரும் தகவல்களைத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரபரப்பாகப் பகிரப்படும்போதுதான் முக்கியத்துவம் பெறுகிறது. அதுவே அனைவரிடமும் சென்று சேர்கிறது.

பரபரப்பு செய்திகள்
ஆகவே, இளைஞர்களுக்கு இயல்பாக கிடைக்கும் செய்திகள் என்பவை பரபரப்பூட்டக்கூடிய, கொந்தளிப்பு அடையச்செய்யக்கூடிய செய்திகளாக இருக்கின்றன. அச்செய்திகளை ஒட்டியே அவர்கள் தங்களுடைய சிந்தனைகளை வடிவமைத்திருக்கிறார்கள். விளைவாக அவர்களுடைய எண்ணங்கள் வரலாற்று ரீதியான பின்புலம் கொண்டிருப்பதில்லை. தொடர்ச்சியான தர்க்க ஒழுங்கையும் கொண்டிருப்பதில்லை. அவ்வப்போது காதில் விழும் செய்திகளுக்கு முடிந்தவரை தீவிரமாக எதிர்வினையாற்றுவது என்ற அளவிலேயே அவர்களுடைய அரசியல் புரிதல் உள்ளது.
உதாரணமாக, பி.கெ.சலீம் அவர்களின் கதை. அவர், டில்லி காவல்துறை ஊழியர். ரயில் நிலையத்தில் மிகையான ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் அழுத்தம் ஏற்பட்டு தள்ளாடி நினைவிழந்து விழுந்தார். அதை எவரோ மொபைல்போனில் படம் எடுத்து இணையத்தில் உலவவிட்டனர். 'குடிகார டில்லி போலீஸ் தள்ளாடி விழும் காட்சி' என, தலைப்பு கொடுத்தனர்.
சமூக ஊடகங்களில் இச்செய்தி புயலாகப் பரவியது. இளைஞர்கள் கொந்தளித்தனர். வசைபாடினர். இச்செய்தி புகழ்பெற்றதனால் ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற நாளிதழ்களும் இச்செய்தியை வெளியிட்டன. ஆனால், நாளிதழ்கள் பின்னர் அச்செய்தியை பின்தொடர்ந்தபோது அதன் உண்மை நிலை தெரிந்தது. சலீம் தீவிர சிகிச்சைக்குப் பின் இப்போது பணிக்குத் திரும்பியிருக்கிறார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் அவரிடம் மன்னிப்பு கோரியிருக்கிறது.

நாளிதழ்களுக்கு ஓர் அமைப்பு உள்ளது. ஆசிரியர் குழு உள்ளது. ஆகவே செய்திகளுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். சமூக ஊடகத்திற்கு எவரும் பொறுப்பல்ல. ஒரு குழு திட்டமிட்டு முயன்றால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எவரைப் பற்றியும் எதையும் பரப்பி அவரை அழிக்க முடியும். எந்த வகையிலும் ஆதாரமில்லாத வதந்திகளே சமூக ஊடகங்களில் அதிகம். இளைஞர்கள் அதிகம் வாசிப்பதும், நம்புவதும் அதைத்தான்.

இன்னொரு உதாரணம், டில்லி அருகே, காவலர், தலித் பெண்களின் உடைகளை சாலையில் வைத்து உருவி அவமதிப்பதாகவும், அவர்களின் கணவரை அடிப்பதாகவும் சொல்லி ஒரு காணொளி சமூக ஊடகங்கள் வழியாக ஒரேநாளில் லட்சக்கணக்காகப் பரவியது. 'இந்தியாவின் முகத்தில் காறித்துப்புகிறேன்', 'இந்தியா அழியவேண்டும்' என்ற வகையில் கருத்துக்கள் குவிந்தன.
முழு காணொளியும் சில நாட்களில் வெளிவந்தது. ஒருவர், தன் மனைவியையும், தங்கையையும், நடுத்தெருவில் ஆடை களைந்து அவமதிப்பதை, காவலர்கள் தடுத்து இழுத்துச் செல்வதுதான் அந்தக்காட்சி. சிலர் மன்னிப்பு கோரினர். ஆனால் அது உருவாக்கிய வசைகள் அங்கேதான் இருந்தன.

இன்னொன்று, பேஸ்புக். மிக அதிகமான இளைஞர்கள் பேஸ்புக் வழியாகத்தான் பெரும்பாலும் வாசிக்கிறார்கள். அங்கே அவர்கள் நிபுணர்களின் கருத்துக்களையோ, ஆய்வாளர்களின் பார்வைகளையோ வாசிப்பதில்லை. ஏனென்றால், பேஸ்புக்கின் அமைப்பே ஒருவருக்கு அவரைப்போன்ற அவரது நண்பர்களின் தொடர்புகளை உருவாக்கித் தருவதுதான். நண்பர்களைத் தேடுவதற்காகவே அது வடிவமைக்கப்பட்டு உள்ளது.

'மீம்ஸ்' கேலிகள்
விளைவாக, இன்றைய இளைஞர்களுக்கு அவரைப் போலவே அரசியலோ, வரலாறோ சரிவரத்தெரியாத ஒருவரின் சொற்கள்தான் மீண்டும் மீண்டும் வந்து சேர்கின்றன. அவர் பேசுவதுதான் அவரது நண்பர்களுக்குச் சென்று சேர்கிறது. பேஸ்புக்கில் அரசியல் சார்ந்து நடக்கும் விவாதங்கள் மிகப் பெரும்பாலும் வெறும் வதந்திகள், அவதுாறுகள், போகிறபோக்கிலான
அபிப்பிராயங்கள் தான்.

இன்னும் வருந்தத்தக்கது, 'மீம்ஸ்' எனப்படும் படக்கேலிகள். சினிமாக்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட பகுதிகளில் வரிகளை எழுதிச்சேர்த்து தலைவர்களை நக்கலடிக்கிறார்கள். கேலிச் சித்திரங்கள் உலகமெங்கும் அரசியல் விவாதத்தின் பகுதியாக இருந்துள்ளன. ஆனால், இந்த படக்கேலிகள் அரசியல் விவாதங்களே இல்லாமல் வெறும் நக்கலையும், கிண்டலையும் மட்டும் முன்வைக்கின்றன.

இத்தகைய படக்கேலிகளை எனக்கு அனுப்பிக் கொண்டே இருந்த இளைஞர் ஒருவரை நான் மின்னஞ்சல் தடை செய்தேன். சில நாட்களுக்கு பின் அவரை நேரில் சந்தித்தேன். அவர் அந்தப் படக்கேலிகளை ஒவ்வொன்றாகச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தார்.

நான் இயல்பாக அவரிடம் பேசிக்கொண்டே, தமிழக அரசியலில், சென்ற இருபத்தைந்தாண்டுக் காலத்தில் நிகழ்ந்த எதைப்பற்றியாவது அவர் மேலோட்டமாகவேனும் அறிந்திருக்கிறாரா என்று பார்த்தேன். உண்மையில் நான் நினைத்திருந்ததை விட அதிர்ச்சியாக இருந்தது. அவர் சி.என்.அண்ணாதுரை அ.தி.மு.க.,வை நிறுவியவர் என்று சொன்னார். தி.மு.க.,வை கருணாநிதி நிறுவினாராம்.

காமராஜர்? அவர், தமிழகக் காங்கிரசை நிறுவியவர். பக்தவத்சலம், ராஜாஜி ஆகியோரை கேள்விப்பட்டதே இல்லை. இந்த அழகில் கட்சிகளின் கொள்கைகளையோ பொருளியல் திட்டங்களையோ அவர் அறிந்திருப்பார் என எதிர்பார்ப்பதில் பொருளே இல்லை. இருந்தாலும் கேட்டேன்.

நீளமாக எழுதினால்...
அவ்விளைஞர் கட்டுமானத் துறையில் இருப்பவர், பொறியியலாளர். மத்திய அரசின் சமீபத்திய கட்டுமானத் திட்டங்கள் மீதான கட்டுப்பாடுகளைப் பற்றி அவரது கருத்தைக் கேட்டேன். அவர் அவற்றைக் கேள்விப்பட்டிருக்கவே இல்லை. அவருடைய சொந்த வாழ்க்கையையே அடுத்த ஒரு வருடத்தில் மாற்றியமைக்கப் போகும் கட்டுப்பாடுகள் அவை!

பேஸ்புக் செய்திகளின் இன்னொரு இயல்பு அவை மிகச்சுருக்கமானவை என்பதே. அவற்றில் வாதங்களை முன்வைக்கவோ, தரவுகளை அளிக்கவோ முடியாது. அவற்றின் அமைப்பே ஓரிரு வரிகளில் சொல்ல முயல்வது தான்.

நீளமாக எழுதினாலும் எவரும் வாசிப்பதில்லை என்று எழுதுபவர்கள் சொல்கிறார்கள். விளைவாக ஒற்றை வரிகளே ரசிக்கப்படுகின்றன. அவற்றில் துடுக்குத்தனமோ, மூர்க்கமான வேகமோ வெளிப்பட்டாக வேண்டும் என்னும் நிலை உள்ளது. இன்றைய சூழலில் பொறுப்பான அரசியல் விவாதம் என்பது வேறுவழியில்லாமல் அச்சு ஊடகங்களைச் சார்ந்தே உள்ளது என்பது தான் நடைமுறைஉண்மை. அரசியல் விவாதங்களுக்கு தேவையான இரு அடிப்படைகள் அச்சு ஊடகங்களில் தான் உள்ளன. ஒன்று,
வரலாற்றுணர்வு.
ஒவ்வொரு அரசியல் செய்தியையும் விரிவான வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும் அணுகுமுறை. இந்தியாவின் பொது வரலாற்றை, இந்தியச் சமூக வரலாற்றை, அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டு பேசும் தன்மை. இரண்டு, ஒவ்வொன்றையும் தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் பார்வை.

இரண்டுமே இணைய ஊடகங்களால் அளிக்கப்படவில்லை. சென்ற தலைமுறையில் கல்லுாரிச் சூழலிலேயே அரசியலறிமுகம் சாத்தியமாகியது. அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞர்கள், இடது அல்லது வலதுசாரி சிந்தனைகளை நுால்களிலிருந்து கற்றுக்கொண்டார்கள். பல்வேறு அரசியல்மாற்றங்களுக்கு இங்கே மாணவர்களே காரணமாக அமைந்திருக்கிறார்கள். இன்று வெற்று பரபரப்பையே அரசியலாக அறிந்திருக்கிறார்கள் இளைஞர்கள். அரசியல் விவாதம் என்பது வரலாற்றுப்பூர்வமானதாக, நிதானமான தர்க்கம் கொண்டதாக அமையவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டாக வேண்டும்.
நன்றி : தினமலர்
http://election.dinamalar.com/detail.php?id=6294

No comments:

Post a Comment