Tuesday, April 26, 2016

ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 38 : அனைவருக்குமான அரசு

பதிவு செய்த நாள்

27ஏப்
2016 
04:35




கடந்த, 1987-ல் எம்.ஜி.ஆர்., இறந்து, அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. அடுத்து நடந்த 1989 தேர்தலில்
ஜெயலலிதா அணி, ஜானகி அணி, தி.மு.க., என மும்முனை போட்டி
நிலவியது.
அந்த தேர்தலில், தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமையும், விளைவாக ஒரு
கூட்டணி அரசு பதவியேற்கும் என்று நான் எண்ணினேன். என் ஆசிரியரும், கேரளத்தின் புகழ்பெற்ற சிந்தனையாளருமான பி.கே.பாலகிருஷ்ணன் அவர்களிடம் அதை சொன்னேன்.
உறுதியாக அதை மறுத்தார். ''தமிழகத்தில், இன்னும் கால் நுாற்றாண்டுக்கு தொங்கு சட்டசபையென எதுவும் அமையாது,'' என்றார். ''ஏன்?'' என்று நான் கேட்டேன். ''தமிழர்கள் ஓர் அலைபோல ஒட்டுமொத்தமாக, ஒரு தரப்பிற்கு ஆதரவாக வாக்களிக்கும் பழக்கம் கொண்டவர்கள். இந்த தேர்தலிலும் அவ்வாறே நிகழும். வெல்லும் கட்சி முழுமையான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்,'' என்றார். அவ்வாறே நடந்தது. மு.கருணாநிதி ஆட்சியை கைப்பற்றினார்.
முதிர்ச்சியான ஜனநாயகம்
பின்னர், இதைப்பற்றி பி.கே.பாலகிருஷ்னனிடம், மூன்று அமர்வுகளிலாக விவாதித்திருக்கிறேன். இவ்வாறு, அரசியலில் ஓர் அலை நிகழ்வதென்பது, முதிர்ச்சியான ஜனநாயக முறை இங்கு இல்லை என்பதற்கான ஆதாரம் என்றார் பாலகிருஷ்ணன்.
ஏனெனில், மக்கள் தனிமனிதர்களாக சிந்தித்து முடிவெடுக்கவில்லை என்றும், தனித்தனி பகுதிகளாகக் கூட அவர்கள் சிந்திக்கவில்லை என்றும், அது காட்டுகிறது. மாறாக, அவர்களுக்கு சொந்தமாக எந்த முடிவும் இல்லை என்றும், தேர்தல் நேரத்தில் பிறர் எந்த முடிவுகளை எடுக்கிறார்கள் என்று பார்த்து, அதை தாங்களும் எடுக்கிறார்கள் என்றும் காட்டுகிறது. ஒரு ஆட்சி மோசமானது என்று மக்களில் ஒருசாரார் நம்ப ஆரம்பித்தால், அவர்களை பார்த்து, பிறர் நம்பத் தொடங்கி, ஒட்டுமொத்தமாகவே அந்நம்பிக்கை அனைவரிடமும் பரவிவிடுகிறது.
அனைவரும் இணைந்து ஒற்றைத் தரப்பாக வாக்களிக்கிறார்கள். உண்மையில், இவ்வாறு வாக்களிப்பதற்கு நமது ஊடகங்களும் ஒரு காரணம். அவை ஓர் அலையை உருவாக்கவே எண்ணுகின்றன. அலை என்பது, தேர்தலை ஒரு கொண்டாட்டமாக ஆக்குகிறது. ஒரு திருவிழாவில் உள்ள அனைவரும் ஒரே உணர்வை அடைவது போல, ஒரு களியாட்ட நிலை உருவாகிறது.
தேர்தல் அவ்வாறு கொண்டாட்டமாக ஆகும்போது, உண்மையில், மக்கள் அதை விரும்பி திளைக்கத் தொடங்குகிறார்கள். எதிர்ப்பு அலைகூட களியாட்டமாகவே ஆகிறது. அப்போது, மக்கள் நாளிதழ்களை வாசிக்கத் தொடங்குகிறார்கள். செய்தி இதழ்களை வாங்குகிறார்கள். அது ஊடகங்களுக்கும் மிகவும் நல்லது. பெரும்பாலான அலைகள் ஊடகங்களால் உருவாக்கப்படுபவையே.
பொதுவாகவே நிலையான அரசு தேவை என நாம் நம்புகிறோம். ஆகவே பெரும்பான்மை கொண்ட அரசு உருவாக வேண்டும் என எண்ணுகிறோம். ஜனநாயகத்தில் இதற்கு எந்த அடிப்படையும் இல்லை. சொல்லப் போனால் அது ஜனநாயகத்துக்கே எதிரானது. நாம் அரசர்களையோ, சர்வாதிகாரிகளையோ ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பது தான் அது.
கூட்டணி ஆட்சி முறை தான் ஊழல் குறைவான, மக்கள் நலம் சார்ந்த அரசை அமைக்க முடியும். கூட்டணி ஆட்சி அமையும்போது மட்டுமே, அனைத்து வகையான மக்களுக்கும் அரசியல் அதிகாரம் கிடைக்க முடியும்.
உதாரணமாக, தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ஒரு முக்கியமான அரசியல் கட்சி. தமிழக ஜெயமோகன்

மக்கள் எண்ணிக்கையில் ஏறத்தாழ பதினாறு சதவீதம் வரை இருக்கும் தலித் மக்களின் குரல்,
அந்தக் கட்சி தான். அக்கட்சி அரசு அதிகாரத்தில் பங்கெடுக்கும்போது மட்டுமே, இங்குள்ள அடித்தள தலித் மக்கள் அதிகாரத்தை பெறுகிறார்கள். அவ்வாறு அதிகாரத்தை அவர்கள் அடையும்போது தான் அவர்களின் சமூக பொறுப்பும் அதிகரிக்கிறது.
சிறுபான்மையினரின் கட்சிகள்
ஆனால், ஒரு தருணத்திலும், அக்கட்சியை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும், தங்கள் கட்சியாக வாக்களித்து ஆட்சியில் அமர வைக்கப் போவதில்லை. ஏனென்றால் அது தலித் மக்களின் கட்சியாகவே இன்று உள்ளது. தமிழகத்தில் ஒரு கூட்டணி ஆட்சி ஏற்படாவிட்டால், அக்கட்சி அதிகாரத்தை அடைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவ்வாறு பல கட்சிகள் தமிழகத்தில் உள்ளன. கேரளத்தில், சிறுபான்மையினரின் கட்சிகளின் தலைமையிலேயே ஆட்சிகள் அமைந்துள்ளன.
இடதுசாரிகளின் பங்களிப்புள்ள ஓர் அரசு தமிழகத்தில் அமையும் என்றால், உறுதியாகவே, ஊழலுக்கான ஒரு கண்காணிப்பு அமைப்பு அரசுக்குள்ளேயே இருக்கும் என்பதை, ஐயமின்றி சொல்லலாம். பாரதிய ஜனதாவின் பங்களிப்புள்ள ஓர் அரசு அமையுமானால், அந்த அரசுக்கும் மத்திய அரசுக்குமான ஒரு ஊடகமாக அக்கட்சி செயல்படும் என்று சொல்லலாம்.
நாட்டு நலன் கருதி, வலுவான பெரும்பான்மையுடன் ஒரு அரசு அமைய வேண்டுமென்பது, அரசியல்வாதிகளால் நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் ஒரு பொய். அவ்வாறு அரசு அமைக்கும் அரசியல்வாதிக்கு மட்டுமே அது நன்மை பயக்கும்.
ஏனெனில், ஐந்தாண்டு காலம் எந்த கேள்வியும் கேட்கப்படாமல் அரசாளலாம். அவர்களின் உள் விவகாரங்கள் எதுவும் வெளிவரப் போவதில்லை. அவர்களின் தலைவர் சக்ரவர்த்தியாக ஐந்தாண்டு காலம் அமர்ந்திருப்பார். அனைத்து ஊடகங்களும் அவரது புகழைப் பாடும். ஐந்தாண்டு காலம் அவரைச் சகித்து, பின்பு அவரை வெறுத்து, கசந்து, வாக்கை மாற்றிக் குத்தி, அவரைப்போன்ற இன்னொரு அதிகார மையத்தை நாம் தேர்ந்தெடுப்போம்.
மாறாக, ஒரு தொங்கு சட்டசபை அமைந்து, வலுவான கூட்டணி கட்சிகள் இணைந்து மட்டுமே அரசமைக்க முடியுமென்றால், அங்கு முதல்வரின் வரம்பில்லா அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. ஊழலோ, கட்சி உள்விவகாரமோ, அரசு நிர்வாக ரகசியமோ வெளிவரக்கூடுமென்ற வாய்ப்பு இருக்கிறது. மக்களின் கண் ஒன்று அரசாங்கத்தில் இருப்பதற்கு சமம் அது.
அதனால் ஊழல் முற்றாக ஒழிந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஜனநாயக செயல்பாடுகளின் ஒரு பகுதியாக எப்போதும் ஊழல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால், கூட்டணி
அரசுகள் ஆளும் மாநிலங்களில், ஊழல் மிக மிகக் குறைவு.
லல்லு பிரசாத் யாதவ் பீகாரில் உச்சகட்ட ஊழல் செய்த ஓர் அரச குடும்ப ஆட்சி நடத்தினார். ஆனால், இன்று நிதிஷ்குமார் உடன் இணைந்து நடத்தும் அரசில், அவர் அந்த ஊழலை செய்ய முடியாது.
கேரளத்து அரசுகள், இடதுசாரி ஆட்சியாக இருந்தாலும் சரி, வலதுசாரி ஆட்சியாக இருந்தாலும் சரி, தமிழக அரசுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைவான ஊழல் கொண்டவை. கேரள வாழ்க்கைச் சூழலில் இருக்கும் ஒருவர், அங்குள்ள மக்கள் நலத்திட்டங்களிலும் சரி, அரசு சார்ந்த செயல்பாடுகளிலும் சரி, தமிழகம் போல ஊழல் இல்லை என்பதை அறியலாம். அதற்கு காரணம், கடந்த பல ஆண்டுகளாக அங்கு கூட்டணி ஆட்சிதான் இருக்கிறது என்பது தான்.
கூட்டணி ஆட்சிமுறை காரணமாக, கேரள சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும், எப்போதும் அரசில் ஒரு பங்களிப்பிருக்கிறது. முஸ்லிம் லீக், கேரள கிறிஸ்தவர்களின் கட்சியான கேரள காங்கிரஸ், சில வட்டாரங்களில்
மட்டுமே செல்வாக்குள்ள ஆர்.எஸ்.பி. போன்ற பல கட்சிகள் கூடித்தான் அங்கு ஆட்சி அமைக்கின்றன. அதுவே இங்கும்
நிகழவேண்டும். பலவகையான கட்சிகள் ஆட்சிக்குள் இருக்க வேண்டும்.
ஏகாதிபத்திய அரசியல்
ஜனநாயகமென்பது, நிர்வாக அமைப்பில் உள்ள அனைவரும் ஒருவரை ஒருவர் கண்காணிக்கும் போது மட்டுமே சரியாக செயல்பட முடியும். நீதிமன்றமும், காவல் துறையும் ஒன்றையொன்று கண்காணித்தால் மட்டுமே, சரியான நீதி அமைய முடியும். ஆனால், திருடனும் காவலனும் ஒன்றாக சேர்வது போன்றது இங்குள்ள ஒற்றைக்கட்சி ஏகாதிபத்திய அரசியல்.
இங்கே ஜனநாயகம் வலுப்பெறும்தோறும் அதிகமான மக்கள் பங்கேற்பு அரசியலில் நிகழும். ஒவ்வொருவரும் தங்களுக்குரியதை கேட்பார்கள். வெறும் விசுவாசமும், உணர்ச்சி அரசியலும் இல்லாமலாகும். அதற்கேற்ப கூட்டணி ஆட்சிகளே அமையும்.
தமிழகத்தில், கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்து வரும் வரம்பில்லாத பொதுச் சொத்து சூறையாடலுக்கு, மக்கள் உள்ளிருந்தே ஒரு கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டுமென்றால் இங்கொரு கூட்டணி ஆட்சி அமைவதே வழியாகும்.


நன்றி : தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1510400

ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 37:தனித்து நடப்பவர்கள்

25ஏப்
2016 
22:37

நாகர்கோவிலில் பூமேடை ராமய்யா என்றொருவர் இருந்தார். கொட்டாரத்தில் அவருக்குச் சொந்தமாக இருந்த பெரிய இல்லத்தில், என் இளமைப்பருவத்தில், நாங்கள் வாடகைக்கு
குடியிருந்திருக்கிறோம். காந்திய இயக்கத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு சிறை
சென்ற தியாகி அவர்.


அதன் பின்னர், நடைமுறை அரசியல் மீது வெறுப்பு கொண்டு, காங்கிரசில் இருந்து வெளியே வந்தார். இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸ் சார்பில் டாக்டர் மத்தியாஸ் போன்ற பெரும் பணக்காரர்கள் தேர்தலில் நிற்க ஆரம்பித்தபோது, அதற்கெதிராக ஒரு கலகக்காரனாக தன்னை மாற்றிக் கொண்டவர் பூமேடை. பூமேடை என்ற சிறிய அரசியல் இதழை நடத்தினார். ஆகவே அப்பெயர் வந்தது.
பின்னர் வாழ்நாள் முழுக்க அரசியல் கட்சிகளுக்கும், அரசு அமைப்புகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் எதிராக குரல் கொடுப்பவராக தன்னை மாற்றிக் கொண்டார். ஒருமுறை, நாகர்கோவிலில், சிறிய மூத்திரச்சந்து ஒன்றில் நான் சிறுநீர் கழிக்க நின்றபோது அதற்குள் சேற்றில் ஏணி வைத்து ஏறி அவரே தன்னுடைய பொதுக் கூட்டத்துக்கான போஸ்டரை ஒட்டிக் கொண்டிருந்தைக் கண்டேன்.

50 போஸ்டர்கள்:நான் ''இங்கே ஏன் ஒட்டுகிறீர்கள்? மையச்சாலையில் ஒட்டலாமே?'' என்றதற்கு ''தம்பி, நான் மொத்தமே ஐம்பது போஸ்டர் தான் அடிப்பேன். மையச்சாலையில் ஒட்டினால் அதை யாரும் கவனிக்க மாட்டார்கள். இங்கு என்றால் சில நிமிடங்களாவது நின்றாக வேண்டுமல்லவா?'' என்றார். நான் சிரித்துவிட்டேன். ஆனால், அதிலிருந்த புத்திசாலித்தனத்தை கண்ட பின்பு தான் அவரை நான் நெருங்கினேன். அவருடைய பல கூட்டங்களை நான் கேட்டிருக்கிறேன். நாகர்கோவிலின் மனசாட்சியின் குரல் என்று அவரை சொல்லலாம். எங்கு அடித்தள மக்களுக்கு எந்த பிரச்னையிருந்தாலும் அவர் கிளம்பி வருவார். சொந்தமாகவே ஒரு மைக்கும் ஒலிபெருக்கியும் வைத்திருந்தார். ஒரு மேஜையை இழுத்துப்போட்டு, பக்கத்து கடையிலிருந்து மின்சாரம் வாங்கி, அந்த மைக்கை வைத்து பேச ஆரம்பித்தால் அதுதான் பொதுக்கூட்டம்.

அவருக்கு எப்போதும் கொஞ்சம் சபையினர் உண்டு. மற்ற அரசியல்வாதிகள் சொல்லத் தயங்கக்கூடிய விஷயங்களை அப்பட்டமாக கூவிச் சொல்வார். பிறர் அஞ்சக்கூடியவர்களை துணிந்து எதிர்ப்பார். அவருடைய பேச்சுக்களால் பலமுறை அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பலமுறை மிகப்பெரிய அளவில் மக்களுக்கு நன்மை நிகழ்ந்திருக்கிறது.

இதே போன்ற இன்னொருவர் கேரளத்தில் இருந்தார். நவாப் ராஜேந்திரன் என்பது அவர் பெயர். நவாப் என்றொரு பத்திரிகை நடத்தினார். சொந்தமாக வீடோ குடும்பமோ இல்லாமல், திருவனந்தபுரத்தின் உயர்நீதிமன்ற வராந்தாவில் தங்கியிருந்தார். சட்ட அறிவு மிக்கவர்.
அரசியல்வாதிகளுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுப்பது அவரது சமூகப்பணி. அவரது வழக்கு காரணமாக கங்காதரன் என்ற அமைச்சர், தனது சிறுமியான மகளுக்குத் திருமணம் செய்தது சட்டபூர்வமாக வெளிப்பட்டு, ஒரு முறை ஆட்சி கவிழ்ந்தது. தண்ணீர் குழாய்கள் பதிப்பதில் உள்ள ஊழலை அவர் வெளிக்கொணர்ந்தார்.

ஒருமுறை, அவரது செயல்பாடுகளால், பொறுமை இழந்த அன்றைய கேரள முதல்வர் கருணாகரன், மிகக்கடுமையான குரலில் அவரை மிரட்டி பேசிய போது; மறுநாள் காலை, உணர்வு ரீதியாக கேரளத்தின் தலைமகன் என்று போற்றப்படும் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், நீதிமன்றத்துக்கு சென்று, நவாப் ராஜேந்திரனின் காலைத் தொட்டு வணங்கி, ஒரு வேட்டி காணிக்கை கொடுத்து வந்தார். தன்னுடையது எந்த அரசியலும் அல்ல, நவாப் ராஜேந்திரன் ஒரு பெரிய மனிதர், அவருடைய வாழ்த்தை பெறவே நான் வந்தேன் என்று, அவர் சொன்னார். அத்துடன், கேரளத்தில், நவாப் ராஜேந்திரனைப் பற்றி இருந்த சித்திரமே மாறியது.

அவர் ஒரு கோமாளியோ பைத்தியமோ அல்ல, ஒரு அரசியல் போராளி என்ற எண்ணம் ஏற்பட்டது. இங்கும் அப்படிப்பட்ட அரசியல் போராளிகள் நம்மிடையே உள்ளனர். மதுவிலக்கு போராட்டத்தில் களத்தில் இறந்த சசி பெருமாள் அவர்கள் ஓர் உதாரணம். அவரை ஒருமுறை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறேன். நீதிமன்றத்தில், பொதுநலன் நாடி, பல்வேறு வழக்குகளை தொடுக்கும் டிராபிக் ராமசாமி இன்னொரு உதாரணம். இவர்கள், ஊடகங்களால், கோமாளிகளாகவும், கிறுக்கர்களாகவும் காட்டப்படுகிறார்கள். நாமும் அதை விரும்புகிறோம். மெத்தப் படித்தவர்கள் கூட அப்படி வாதிடுவதைக் காணலாம்.

மனசாட்சியின் குரல்:ஏனென்றால், இவர்கள் மனசாட்சியின் குரலை எழுப்புகிறார்கள். அரசியல்வாதியின் மனசாட்சி நோக்கி மட்டுமல்ல, நமது மனசாட்சி நோக்கியும் பேசுகிறார்கள். அதை தவிர்ப்பதற்காகத்தான், நாம் இவர்களை கோமாளிகளாக ஆக்குகிறோம். அதன் வழியாக நாம் தப்பித்துவிடுகிறோம்.இப்படி, விசித்திரமானவர்கள் என்று பலர், தேர்தல் நேரத்தில் நமது கண்களுக்கு படுவதுண்டு. எல்லாத் தேர்தலிலும் போட்டியிட்டு, வைப்புத் தொகை இழப்பவர்கள், விதவிதமான மாறுபட்ட கோஷங்களுடன் தேர்தலைச் சந்திப்பவர்கள், வெவ்வேறு வகையான தோற்றங் கொண்டவர்கள். சில இடங்களில், மூன்றாம் பாலினத்தவர் தேர்தலில் போட்டியிடுவதும், அவ்வாறே நம்மால் பார்க்கப்படுகிறது.

இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகவே கோமாளிகள் என்றே வகைப்படுத்துவது நம்முடைய பொதுபுத்தியின் இயல்பு. ஊடகங்களால், தேர்தல் சார்ந்த ஒரு கேளிக்கை மனநிலையின் பகுதியாக இவர்கள் கருதப்படுகிறார்கள்.வெறும் கொண்டாட்டத்துடனும், ஒருவகை ஏளனத்துடனும் நாம் இவர்களை அணுகுகிறோம். அந்த மனநிலையைப் போல, ஜனநாயகத்துக்கு எதிரான பழைமைவாதம் வேறில்லை. உண்மையில் இவர்களுக்கு ஜனநாயகத்தில் மிகப்பெரிய பங்குண்டு.

ஜனநாயகத்தில் இரு பகுதிகள் உள்ளன. ஒன்று அரசு, நீதிமன்றம், நாடாளுமன்றம், கட்சிகள் போன்ற அமைப்புக்கள். இன்னொன்று, மக்களிடம் செயல்படும் அரசியல். இந்த இரண்டும் முரண்பட்டு மோதிக்கொண்டே முன்னகர்வது தான் ஜனநாயகம். அரசையும், பிற அமைப்புகளையும், மக்களிடம் செயல்படும் அரசியல் அடிக்கடி கலைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவை இறுகிப்போய், பழைய மத நிறுவனங்களைப் போல ஆகிவிடும்.

இக்காரணத்தால், ஜனநாயகத்தில் அத்தனை அமைப்புகளுக்கும் வெளியே நிற்பவர்கள் மிகமிக முக்கியமானவர்கள். அமைப்புக்குள் நிற்கும் மனிதர்கள், காலப்போக்கில் அந்த அமைப்பின் உறுப்புகளாக மாறி, சுயமாக ஏதும் சிந்திக்க முடியாமல் ஆகிவிடுகிறார்கள். கட்சி, அரசு எதுவாக இருந்தாலும் சரி, இதுதான் நிகழ்கிறது. வெளியே நின்றிருக்கும் இந்த உதிரிகளிடமிருந்தே உண்மையான மாற்றங்கள் வரமுடியும்.

இந்த உதிரிகளில் பலவகையினர் உண்டு. எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் இத்தகையவர்கள் தான். புரட்சியாளர்களும் கலகக்காரர்களும் இத்தகையவர்களே. சமூக சேவகர்களிலும் பலர் இவ்வியல்பு கொண்டவர்கள். உண்மையிலேயே கோமாளிகளும் இவர்களில் உண்டு தான்.
ஆனால், இவர்களை நாம் கவனிக்காவிட்டால், சமூக மாற்றத்துக்கான கருத்துக்களை செவிகொள்ளாமலேயே போயிருப்போம். இவர்களை புரிந்து கொள்ளாமல், நாம் ஜனநாயகத்தை புரிந்து கொள்ள முடியாது. நம்மில் சாதாரணர்களுக்கு ஒரு மனநிலை உண்டு. நாம் மனிதர்களைவிட அமைப்பை மதிப்போம்.

அற்பத்தனம் காரணம்:ஒருவர் ஏதேனும் சீருடை அணிந்திருந்தாலே, நமக்கு, அவர் கொஞ்சம் முக்கியமானவராகத் தெரிய ஆரம்பிக்கிறார். நாம் பேசிக்கொள்ளும் போதுகூட, நம் சொந்தக்காரர்கள் எங்கெங்கு எந்தெந்தப் பதவிகளில் இருக்கிறார்கள் என்று, பட்டியல் போடுகிறோம். இந்த அற்பத்தனம் காரணமாக, நம்மால் மனிதர்களை பார்க்க முடிவதில்லை, அமைப்புக்களையே
பார்க்கிறோம்.

இந்த மனநிலையே, அமைப்புகளுக்கு வெளியே நின்றிருக்கும் சமூக சேவகர்களை, கலகக்காரர்களை கேலியாகப் பார்க்கச் செய்கிறது. கலகக்காரர்களே, தனித்து நடப்பவர்களே, ஜனநாயகத்தின் ஒளியை முன்னால் கொண்டு செல்லும் வழிகாட்டிகள் என்று மதிப்போம். அவர்கள் நம் சொத்துகள் என்று பாதுகாப்போம். அவர்களுடைய குரலை, ஒவ்வொரு தருணத்திலும் கேட்போம். அது நம் மனசாட்சியின் குரல்.

ஜெயமோகன்கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com
www.jeyamohan.in
நன்றி : தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1509201

Sunday, April 24, 2016

ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 36:நிபுணர்கள் வருக!

25ஏப்
2016 
04:04

எப்போதும் இல்லாதபடி இந்த தேர்தலில் வசந்திதேவி, சிவகாமி ஐ.ஏ.எஸ்., போன்ற படித்தவர்கள் சற்று அதிகமாக போட்டியிடுகிறார்கள். வழக்கமாக தேர்தல்களில் படித்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஒரு தொகுதியை கட்சியரசியல் மூலம் தன் கட்டுப்பாட்டில் ஏற்கனவே வைத்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதே அரசியல் கட்சிகளுக்கு வசதியானது என்று கருதப்படுகிறது. அவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படும்.
அப்படி கட்சி அரசியலில் ஈடுபட்டு ஒரு தொகுதியை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர், தொழில்முறை அரசியல்வாதியாக இருப்பார். மிக இளம் வயதிலேயே ஏதேனும் கட்சிக்குள் நுழைந்து, ஒரு முன்னோடி தலைவரை பின்பற்றி, அவரால் துாக்கிவிடப்பட்டு, அரசியலில் உயர்ந்து வந்திருப்பார். பெரும்பாலும் அந்த துாக்கிவிட்ட அரசியல்வாதியை கவிழ்த்துவிட்டு, பதவியை அடைந்திருப்பார். பல ஆண்டு காலமாக அப்பகுதியில் கட்சிப் பணியிலேயே
அதிகமாக காலத்தை செலவிட்டிருப்பார்.

இப்படிப்பட்ட அரசியல்வாதிகள், சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சர்களும் ஆகின்றனர். தமிழக அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் தான் அதிகமான அளவுக்கு படித்தவர்கள், நிபுணர்கள் ஆட்சியில் இருந்தனர். தி.சு.அவினாசிலிங்கம், தி.சே.சௌ.ராஜன் சி.சுப்ரமணியம். ஆர்.வெங்கட்ராமன் போன்ற பெரும் படிப்பாளிகள், துறை வல்லுநர்கள் தமிழகத்தில் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.தொழில் மையங்கள்
இன்று திரும்பிப் பார்க்கும்போது தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு, தி.சு.அவினாசிலிங்கம் அவர்களின் பங்கு மிகப்பெரியது என்பதை உணரமுடியும். தமிழகம் மருத்துவ மற்றும் அடிப்படை ஆரோக்கியத் துறைகளில் அடைந்த ஆரம்ப வளர்ச்சி என்பது, தி.சே.சௌ.ராஜன் அவர்களால் உருவாக்கப்பட்டது.

அந்த எல்லையை பிற மாநிலங்கள் அடைவதற்கு, மேலும் பல ஆண்டுகள் ஆயின. தமிழகத்தின் மிக முக்கியமான அணைக்கட்டுகள் உருவாக்குவதில், சி.சுப்ரமணியத்தின் பங்கு மிக முக்கியமானது. ஓசூர், கோவை, சிவகாசி போன்ற தொழில் மையங்கள் உருவாகி வருவதில்
ஆர்.வெங்கட்ராமன் மிகப்பெரிய பங்களிப்பாற்றினார். பின்னர் வந்த ஆட்சிக் காலங்களில் நிபுணர்கள் அமைச்சர்களாவது குறைந்தபடியே வந்தது. கட்சி அரசியலில் ஊறியவர்களே அமைச்சர்களானார்கள். இது நிர்வாக அளவில் மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கக் கூடியது. படிக்காதவர்கள் நாடாளலாமா என்று கேட்டால், அதற்கான தகுதியிருப்பின் உறுதியாக நாடாளலாம். சிறந்த உதாரணம் காமராஜர். ஆனால் படிக்காமல் இருப்பதென்பது தகுதியாவதில்லை. முறையான படிப்போ, நிர்வாக அனுபவமோ இல்லாத ஒருவர் அமைச்சராகும்போது, பெரும்பாலும் அத்துறை சார்ந்த அரசு அதிகாரிகளின் கைப்பாவையாகவே அவர் ஆகிறார் என்பதை, அரசு நிர்வாகத் துறையில் நெருக்கமான நண்பர்கள் பலர் சொல்லி அறிந்துள்ளேன்.

ஓர் அமைச்சர் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, ஆலோசனை சொல்லுமிடத்தில் இருக்கும்போது மட்டும்தான் அத்துறை சிறப்பாகச் செயல்படமுடியும். தமிழக மின்துறையில், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பிறகு அனேகமாக அமைச்சர் என்ற ஒருவரின் பங்களிப்பே இல்லாமல் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது, அத்துறை சார்ந்த அனைத்து நிபுணர்களாலும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. நிபுணர்கள் அமைச்சரவையில் பங்கெடுக்க வேண்டுமென்பதற்காகவே மேலவை உருவாக்கப்பட்டது. ஏனென்றால், அவர்களால் தேர்தலில் நின்று வென்று வர முடியாமல் இருக்கலாம். தமிழகத்தில், எம்.ஜி.ஆர்., மேலவையை ஒழித்தபிறகு
அதற்கான வாய்ப்புகளும் அரிதாகியுள்ளன.

தமிழகத்தில் ஓர் அமைச்சரவை அமையும்போது, வசந்திதேவியைப் போன்ற ஒருவர், கல்வித்துறை அமைச்சராக ஆவாரென்றால், அது மிக முக்கியமான மாற்றத்தை உருவாக்க முடியும். தமிழக சிறுபான்மைத்துறை அமைச்சராக அல்லது சமூக நலத்துறை அமைச்சராக, சிவகாமி ஐ.ஏ.எஸ் வருவாரென்றால், முதன்மையான பங்களிப்பை அவர்கள் ஆற்றமுடியும். ஏனென்றால் அத்துறைகளில் நெடுங்காலம் பயிற்சியும், அனுபவமும் உடையவர்கள் அவர்கள்.
நிபுணருக்கும், மற்ற அரசியல்வாதிக்கும் என்ன வித்தியாசம் என்றால், ஒரு நிபுணர் ஏதேனும் ஒரு துறையில் நுழைந்து, அனைத்து நுண்தகவல்களையும் கற்று, நிர்வாக அனுபவமும் அடைந்து மேலெழுந்து வருபவர். தொழில்முறை அரசியல்வாதி, இளமையிலேயே அரசியலை மட்டுமே அறிந்தவர். அவரால் கட்சியை ஒருங்கிணைக்க முடியும், நிகழ்ச்சிகளை நடத்த முடியும், நிர்வாகத்தை ஆற்ற முடியாது.

மிகப்பெரிய இழிவு:இன்றைய மத்திய அரசில் எரிபொருள் துறை அமைச்சர் பியுஷ் கோயல், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு போன்றவர்கள் நிபுணர்கள், அவர்களின் பணி புகழ் பெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தின் சமீபகால பல அமைச்சரவைகளில் தமிழகம் சற்றேனும் நிறைவுகூரக்கூடிய, தனித்துவம் கொண்ட அமைச்சராக இருந்தவர், தங்கம் தென்னரசு மட்டுமே என்று இதழாளர்கள் சொல்கிறார்கள். பிறகு எவருடைய பெயரும் எவருக்கும் நினைவில் இல்லை. இது நிர்வாக அளவில், மிகப்பெரிய இழிவு என்றே சொல்ல வேண்டும்.

அவ்வகையில் இந்தியாவில் அமைந்த இலட்சிய அமைச்சரவை என்பது, 1956-ல் கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் நின்றபோது, ஈ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடால் அமைக்கப்பட்டது. அதற்கு இருபத்தைந்து ஆண்டுகள் முன்னரே கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரிய போராட்டங்கள் வழியாக, தியாகங்கள் வழியாக ஆட்சிக்கு வந்தது.கட்சியின் அதிதீவிர உறுப்பினர்களால் தான், அந்த தேர்தல் சந்திக்கப்பட்டது. ஆனால், ஆட்சி அமையும்போது திறமையானவர்கள் வரவேண்டும் என்பதற்காகவே, மிகச்சிறந்த கல்வியாளராகிய ஜோசப் முண்டச்சேரியை அத்தேர்தலில் நிறுத்தினார் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு. சட்ட நிபுணராகிய வி.ஆர்.கிருஷ்ணைய்யர் அமைச்சரவைக்கு வந்தார். பல துறைகளிலும் நிபுணர்கள் அடங்கியதாக அந்த அரசு அமைந்தது. அவ்வரசின் குறுகிய கால சாதனைகளை, அதற்குப் பின் கேரளாவில் அமைந்த எந்த அரசும் முறியடிக்கவில்லை. இன்று வரை, கேரளத்தின் பொருளியல் கொள்கைகளைத் தீர்மானித்தது அவ்வரசு தான். குறிப்பாக உண்மையான நிலச் சீர்திருத்தம் செய்யப்பட்டு, இலட்சக்கணக்கான எளியவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது.
நிபுணர்கள் தேர்தலில் நின்று வெல்வதற்கான தடைகள் என்ன? தொழில்முறை அரசியல்வாதி தொடர்ந்து களத்தில் இருந்து கொண்டிருப்பதால், நன்கு அறிமுகமானவராக இருப்பார். நிபுணர் தன்னுடைய தளத்தில்தான் தொடர்ந்து பணியாற்றி இருப்பார். அவரை பிறருக்குத் தெரிந்திருக்காது. நிபுணர் பேசுவது, அத்துறை சார்ந்த அறிவு இல்லாத எளிய மக்களுக்கு
புரிவதில்லை.

அரசியல்வாதி, மக்களிடம் பேசிப் பேசி மக்களுக்கு புரியும் ஒரு மொழியைக் கற்று வைத்திருப்பார். அவரது உடல்மொழிகளும், உணர்ச்சிகளும், மக்களால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளக் கூடியவையாக இருக்கும். பெரும்பாலான நிபுணர்கள், சிறந்த பேச்சாளர்கள் அல்ல. சி.சுப்ரமணியமும், ஆர்.வெங்கட்ராமனும் மேடையில் பேசும் திறனற்றவர்கள். மக்களை வசீகரிக்கும் ஆளுமை இல்லாதவர்கள். காமராஜர் போன்ற ஒரு மக்கள் தலைவரின் நிழலில் தான் அவர்கள் பதவிக்கு வரமுடிந்தது.

ஏன், இந்தியாவெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமான அம்பேத்கர் பெரும்பாலான தேர்தல்களில் படுதோல்வி அடைந்திருக்கிறார். அவருடைய சொந்த மக்களாலேயே தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். அரசியலில் தோற்று மனமுடைந்து இருந்தவரைத்தான், காந்தி, இந்திய சுதந்திரத்தின்போது தன் தனிப்பட்ட செய்தியை அனுப்பி அழைத்து, அன்றைய அரசில் சட்ட அமைச்சராகவும், அரசியல் சட்ட வரைவாளராகவும் பதவியேற்க வைத்தார்.
ஆகவே, ஜனநாயகம் தன்னளவில் நிபுணர்களுக்கெதிரானது. மக்கள் தங்களைப் போன்ற ஒருவரையே விரும்புகிறார்கள். அவர் தங்களை ஆளவேண்டுமென்று நினைக்கிறார்கள். மக்களிடமிருந்து உருவாகி வரும் மக்கள் தலைவர், சிறந்த மக்களாட்சியை தரவேண்டுமென்றால் சிறந்த நிபுணர்களை தன்னுடைய வசீகரத்தால் ஆட்சிக்கு கொண்டு வந்தாக வேண்டும்.

யார் முதல்வர்?நாம் தேர்தலில் எப்போதும், யார் முதல்வராக வேண்டும், எந்தக் கட்சி ஜெயிக்க வேண்டும் என்று தான் முடிவு செய்கிறோம். அதன் அடிப்படையிலேயே வாக்களிக்கிறோம். எவரெவர் அமைச்சராக வேண்டும் என்பதிலும், நமக்கொரு குரல் இருக்க வேண்டும். எந்த துறையானாலும் கல்வி கற்ற நிபுணர் ஒருவர் போட்டியிடுவார் என்றால், அவர் உறுதியாக சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

குறைந்த பட்சம் சுயேச்சையாக நிற்கும்போதேனும் நிபுணர்கள் கணிசமான வாக்கு பெறுவார்கள் என்றால், தொடர்ந்து தங்கள் கட்சி உறுப்பினரை வேட்பாளராக முன் நிறுத்துவதற்கு அரசியல் கட்சிகள் முயற்சி எடுத்துக் கொள்ளும். சென்ற சில ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய வீழ்ச்சி என்பது அரசியலில் இருந்து கல்வி கற்றவர்களும், நிபுணர்களும் முழுமையாகவே மறைந்துவிட்டடனர் என்பதே. இந்தத் தேர்தலில் அவர்கள் திரும்பி வருவதற்கான மிகச்சிறிய வாய்ப்பு தென்படுகிறது. அது வளர வேண்டும்.

-ஜெயமோகன்-
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com
www.jeyamohan.in

நன்றி : தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1508770

Saturday, April 23, 2016

ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 35: துலாக்கோலின் முள்

மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டு நான் எழுதும் வெண்முரசு என்னும் தொடர் நாவலில் எனக்கு பிடித்த ஒரு வரி வரும். 'அத்தனை போர்வீரரும் பூமித்தாயுடன் தான் போர்புரிகிறார்கள்'.ஏனென்றால் தொடுக்கப்படும் அம்புகளில் நுாற்றில் ஒன்றுதான் எதிரியை கொல்கிறது. பிற அனைத்தும் குறிபிழைத்து மண்ணில் தான் வந்து தைக்கின்றன. ஆகவே போரிடும் இரு தரப்புமே பூமாதேவியைத்தான் அம்பால் துளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் பிரசாரங்களையும், விவாதங்களையும் பார்க்கையில் அதேபோல் ஒரு வரி தோன்றுகிறது. 'அத்தனை அரசியல் கட்சியினரும் நடுநிலையாளர்களிடம் தான் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்'. பேஸ்புக் விவாதங்களை சென்று பாருங்கள். மிக அதிகமாக அடிவாங்குபவர்கள் நடுநிலையாளர்கள் தான் என்பதை காணமுடியும்.
ஏதேனும் ஒரு அரசியல் தரப்பை எடுத்து பேசுபவர்களுக்கு, நடுநிலை எடுக்கும் வாக்காளர்கள் மீது கடும் காழ்ப்பு இருக்கிறது. பொதுவாக, தீவிர சார்புநிலை கொண்டவர்களை பொறுத்தவரை, தன்னுடைய தரப்பை எடுக்காதவர்கள் எல்லாருமே தன் எதிரி தரப்பை சேர்ந்தவர்கள் என்பதே இயல்பான உணர்ச்சி நிலையாக உள்ளது.
குடும்ப அரசியல்
உண்மையான எதிர் தரப்பை அவர்கள் கடுமையாக தாக்குவார்கள். ஆனால், உள்ளூர அவர்களுக்கு தெரியும், எதிர் தரப்பும் தன்னை போன்றதே என்று. ஆகவே, எதிர்க்கட்சி சொல்லும் எல்லா வாதங்களையும், மாற்று கட்சியால் முறியடிக்க முடியும்.
இவர்களுக்கு, அவர்களாலும் பதில் சொல்ல முடியும். எப்படியோ இருதரப்பும் சமானமானவர்கள் தான். ''நீங்கள் மட்டும் என்ன யோக்கியமா?'' என்ற ஒரு
கேள்வியால், எந்த அரசியல் கட்சியும்
இன்னொரு கட்சியை மட்டம் தட்டிவிட முடியும்.
ஊழல், அணி மாறல், கொள்கைகளைக் கைவிடுதல், குடும்ப அரசியல் எல்லாமே எங்கும் உள்ளவை தான் இல்லையா? ஆனால், நடுநிலையாளர்களின் கேள்விகளை இருசாராரும் எதிர்கொள்ள முடியாது. அவர்கள் எந்த தரப்பையும் எடுக்கவில்லை என்பதனாலேயே நியாயமான வினாக்களை எழுப்புவார்கள்.
நியாயமான வாதங்களின் வலிமை, புத்திசாலித்தனமான வாதங்களுக்கு ஒருபோதும் கைவருவதில்லை. ஆகவே நடுநிலையாளர்களை எதிர்கொள்வதற்கு மிகச்சிறந்த வழி என்பது அவர்களை தங்கள் எதிர் தரப்பாகவே காட்டிவிடுவது தான்.
எதிர் தரப்பினர் நடுநிலையாளர்களாக பாவனை செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டி, எதிர்த்தரப்பின் மீதுள்ள எல்லா குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மேல் ஏற்றிவிடுவது. உதாரணமாக, அ.தி.மு.க., குறித்து எந்த குற்றச்சாட்டை சொன்னாலும், ''நீ தி.மு.க., அனுதாபி. தி.மு.க., மட்டும் யோக்கியமா?'' என்று பேச தொடங்குவார்கள். தி.மு.க., மீது, நம் விமர்சனங்களை சொன்னால், ''நீ அ.தி.மு.க.,வின் ரகசிய ஆதரவாளர்,'' என்பார்கள்.
ஆகமொத்தம், இருசாராருமே எதிரிகளாக நினைப்பது நடுநிலையாளர்களை தான். அரசியலில் நடுநிலை என்ற ஒன்று சாத்தியமே இல்லை என்று வாதிடக் கூடிய சிலர் இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு தரப்புக்கு நீங்கள் வாக்களித்தே ஆகவேண்டும். ஆகவே, நீங்கள் அந்த தரப்பை சேர்ந்தவர்கள் என்று அவர்கள் சொல்வார்கள். இப்படியெல்லாம் ஏதாவது ஓங்கிச்சொல்வது, ஒருவகையில் சிந்தனையாளன் என்னும் போலி தோரணையையும் அவர்களுக்கு அளிக்கிறது.
நடுநிலை என்பது என்ன?
ஏதேனும் ஒரு தரப்பை சார்ந்து, தீவிரமான சார்பு நிலையை எடுப்பதற்கு எதிராக இருப்பதே நடுநிலை தான். நான் ஒரு கட்சிக்கு வாக்களிக்கலாம். ஆனால், அதற்காக நான் அந்த கட்சியின் ஆதரவாளனாக இருக்க வேண்டும் என்பது இல்லை.
இரண்டையும் சீர்துாக்கிப்பார்த்து, இப்போதைக்கு இந்த கட்சிக்கு நான் வாக்களிக்கிறேன். இன்னொரு தருணத்தில் வேறு வகையில் வாக்களிக்கவும் கூடும்
என்று, ஒரு நிலைப்பாட்டை எடுப்பது
சரியான நடுநிலைமை தான். அது சார்புநிலை ஆகாது.
வாக்காளர்களில், கட்சி சார்புள்ளவர்கள் மிகக்குறைவாக இருக்கும் போது மட்டும் தான், உண்மையான மக்கள் நல அரசியல் நிகழும். ஏனென்றால், கட்சி சார்புள்ளவர்கள், அந்த கட்சி எதை செய்தாலும் அதை நியாயப்படுத்துவார்கள். அந்த கட்சி தன்னை தானே அழித்துக் கொள்ளும் நிலைப்பாட்டை எடுத்தாலும்கூட அதை ஆதரிப்பார்கள். அங்கே தர்க்கமோ நியாயமோ செயல்படுவதில்லை. விசுவாசம் மட்டும் தான் இருக்கும்.
அத்தகையவர்களால் எந்த ஒரு கருத்தையும் நியாயமான முறையில் புரிந்துகொள்ளவோ எதிர்கொள்ளவோ முடியாது. கண்மூடித்தனமான உணர்ச்சி மட்டுமே அவர்களை இயக்கும். அதுவும், தேர்தல் போன்ற காலகட்டத்தில், ஒரு தீவிரமான போர் உச்சகட்டத்தை நெருங்குவது போல, ஒரு மிகையான உணர்ச்சி வேகம் தென்படுவதனால் எதையுமே பேசமுடியாத சூழல் இருக்கும்.
நம்முடைய சூழலில், பெரும்பாலானவர்கள் கட்சி சார்புள்ளவர்கள் என்பதனால், எங்கும் எந்த நியாயத்தையும் பேசமுடிவதில்லை. தமிழக தேர்தல் சூழலை எடுத்துப் பார்த்தால் மக்களின் தரப்பை பேசக் கூடியவர்கள், மக்கள் நலனுக்காக தங்கள் திட்டங்களை எடுத்துச் சொல்லக் கூடியவர்கள் என்று சில கட்சிகளே உள்ளன.
மற்ற அனைத்து கட்சிகளுமே, தங்களின் எதிரியை குற்றம் சாட்டுவது, அவர்களின் குறைகளை அப்பட்டமாக்குவது, அவர்களை கேலி செய்வது, அவதுாறு செய்வது என்ற அளவிலே தங்கள் பிரசாரத்தை வைத்துக் கொள்கின்றன.
ஒரு தேர்தல் என்பது, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த நாட்டை யார் ஆளவேண்டும், இந்த மக்களின் தலைவிதியை யார் தீர்மானிக்க வேண்டும் என்பதை, முடிவு செய்யும் களம். அந்த களத்தில், மக்களின் ஒரு பிரச்னை கூடப் பேசப்படவில்லை என்பதும், மாறி மாறி குற்றம் சாட்டும் கட்சிகளே ஓங்கி ஒலிக்கின்றன என்பதும், மிகப்பெரிய இழிவு.
இதை அகற்றுவதற்கு ஒரே வழி என்பது, மக்கள் ஒரு தருணத்திலும், ஒரு கட்சி சார்ந்தும் நிலைப்பாடு எடுக்காமல் இருப்பதே. அப்போது தான் நியாயம் நம் கண்ணில் படும். நாம் நியாயத்தின் பொருட்டு வாக்களிக்க முடியும். எல்லா கட்சியையும் சந்தேகத்துடனும் எதிர்பார்ப்புடனும் அணுகுவது முக்கியம்.
அத்தனை கட்சிகளின் கோஷங்களையும் கோரிக்கைகளையும் நோக்கி, எது சிறந்ததென்று பார்த்து வாக்களிப்பதுதான் நடுநிலைமை. அப்படி ஒரு நடுநிலைமை என்று ஒன்று சாத்தியமா என்று கேட்டால் நீதியுணர்ச்சியில் வேரூன்றிய ஒருவருக்கு நடுநிலைமை மட்டுமே சாத்தியம் என்பது மட்டுமே பதிலாக இருக்கமுடியும்.
இந்தியாவில் படிக்காத எளிய மக்களில் மிகப்பெரும்பாலானவர்கள் எப்போதும் அரசியல் நடுநிலைமையுடன் தான் இருக்கிறார்கள். ஆகவே தான் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாறி மாறி அமைகிறது. நடுநிலைமையே இல்லை, எல்லாருமே கட்சி சார்பானவர்கள் என்றால் மாற்றம்
எப்படி நிகழும்?
அதிதீவிர சார்பு நிலை
ஓரளவு படித்தவர்கள்தான் அதிதீவிரமான கட்சிச் சார்பு நிலைகளை நோக்கிப் போகிறார்கள். அரசியலையும், பொருளியலையும் ஆழ்ந்து கற்றவர்கள் மீண்டும் நடுநிலைக்கு திரும்புகிறார்கள்.
உண்மையில் இந்த கட்சிச் சார்புநிலைகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்று பார்த்தால் தான் அரசியலே புரிய ஆரம்பிக்கும்.
பெரும்பாலும் ஒரு சுயஅடையாளம் சார்ந்துதான் சார்பு நிலை எடுக்கப்படுகிறது. 'எனது ஜாதி, எனது மதம்,
எனது இனம் சார்ந்து நான் இக்கட்சியை ஆதரிக்கிறேன்' என்பதுதான் பெரும்பாலும் சார்பு நிலைக்கான காரணம். அந்த அடையாளத்துக்கு எதிராக இருப்பவர்கள் மேல் உள்ள வெறுப்பாலும் சார்புநிலை உருவாகும்.
உதாரணமாக, இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா மீதுள்ள கடும் காழ்ப்பு காரணமாகவே அவர்கள் அதற்கு எதிரான ஒரு கட்சியுடன் ஆழ்ந்த சார்புநிலை எடுப்பதைப் பார்க்கலாம்.
கடைசியாக, சுயநலம் சார்ந்த சார்பு நிலை. ஒரு கட்சி வென்றால் தனிப்பட்ட முறையில் தனக்கு இன்னின்ன லாபங்கள் இருக்கும் என்று எண்ணி அதனுடன் தன்னை இணைத்துக் கொள்வது. பலர் நாவின் எச்சில் தெறிக்க கட்சி நிலைப்பாட்டை எடுத்து வாதிடுவது இத்தகைய காரணங்களால் தான்.
கொள்கைரீதியான சார்புநிலை இருக்கலாம். ஆனால் அது மிகமிகக் குறைவு. அப்படி மாறாத கொள்கை கொண்ட எந்தக் கட்சி இப்போதுள்ளது? சாமானியர்களுக்கு இந்த இரு காரணங்களும் இல்லை. அவர்களிடம்
இருப்பது அவர்களுடைய வாழ்க்கை சார்ந்த தேவைகள்.
அவ்வாழ்க்கைக்கு அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு இந்த ஆட்சி எவ்வாறு உதவ முடியும் என்பதே அவர்களின் நிலைப்பாட்டுக்கான காரணமாக இருக்க முடியும்.
அதில் எந்தப் பிழையும் இல்லை. 'எனக்கு என்ன செய்வாய்?' என்று அரசியல் கட்சிகளிடம் மக்கள் கேட்பதே இயல்பானது. ஜனநாயகத்தில் பொது
மக்களின் உள்ளம் தராசின் முள் போலிருப்பதே சிறந்தது. தராசின் முள்ளுக்கு தனக்கென நிலைப்பாடு ஏதுமில்லை. அது சற்று ஊசலாட்டத்துடன் தான் இருக்கும். இரு தட்டுகளும் எந்தெந்த அளவுக்கு எடை கொள்கின்றன என்பதை ஒட்டித்தான் அது தன்னுடைய நிலைப்பாட்டை
தீர்மானிக்கும்.
பொதுமக்கள் நடுநிலைமையுடன், சார்புநிலைகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு தாங்கள் என்ன செய்வோம் என்பதை அரசியல் கட்சிகள் யோசிக்கும். அவர்கள் சார்பு நிலை எடுக்கத் தொடங்கினால் அவர்களுடைய உணர்ச்சிகளை விசிறிவிட்டு எதிர்தரப்பை வசைபாடும் அரசியலை நடத்தி வென்று கொண்டே இருப்பார்கள்;
ஒருபோதும் அவர்களுக்கான திட்டங்களை முன்னெடுக்க மாட்டார்கள். ஆகவே நடுநிலை என்பது ஒரு பாவனை அல்ல, அதுவே முதிர்ச்சியான அரசியல் நிலைப்பாடு.

ஜெயமோகன்

நன்றி : தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1508148

Friday, April 22, 2016

ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 34 சுயேச்சைகளின் அரசியல்

பதிவு செய்த நாள்

23ஏப்
2016 
00:19
பல ஆண்டுகளுக்கு முன் நான், சாத்தான்குளம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட மறைந்த காந்தியவாதியான நெல்லை ஜெபமணி அவர்கள் ஓட்டு சேகரித்துக் கொண்டிருப்பதை பார்த்தேன். கொதிக்கும் வெயிலில் நான் நின்றிருந்த டீக்கடைக்கு வந்து அவர் ஓட்டு கேட்டார்.
“ஐயா இந்த வெயிலிலே ஏன் வர்றீங்க? வயசாச்சில்ல?” என்றார் கடையில் நின்றிருந்தவர் பரிவுடன். 
“நீங்க ஓட்டு போடுங்க ஐயா” என்று கேட்டுவிட்டு அவர் சென்றார். “பாவம் நல்ல மனிதர் வெயிலில் இப்படி அலைந்து கஷ்டப்படுகிறார்,” என்றார் அங்கு நின்றிருந்த ஒருவர். “காமராஜர் காலத்திலிருந்தே அரசியலில் இருக்கிறார். எந்த ஊழலுக்கும் அப்பாற்பட்டவர். தொகுதிக்கான எல்லா விஷயத்துக்கும் ஓடி முன்நிற்பார். நிறைய நல்ல விஷயங்கள் பண்ணியிருக்கார்,” என்றார் இன்னொருவர்.
அந்தக் கடையிலிருந்த எவருக்கும் அவர் மேல் சிறுவிமர்சனம் கூட இல்லை. அவர்கள் நினைத்திருக்கும் லட்சிய அரசியல்வாதி அவர் தான். “அப்படியென்றால் அவர் தான் ஜெயிப்பாரா?” என்று கேட்டேன். “அதெப்படிங்க? அவருக்குத்தான் ஆதரவு இல்லையே?” என்றனர் ஒரே குரலில்.
வலிமையான வேட்பாளர்“நீங்கள் எல்லாரும் அவர் நல்லவர் என்றுதானே சொல்கிறீர்கள்? நீங்கள் ஓட்டு போட மாட்டீர்களா?” என்றேன். 
''அவர் ஜெயிக்க வாய்ப்பில்லையே. ஜெயிக்க வாய்ப்புள்ள வேட்பாளருக்குத்தான் போடுவோம்,” என்றனர். நான், ''ஐயா, நீங்கள் ஓட்டளித்தால் அல்லவா அவர் ஜெயிக்க முடியும்?” என்றேன். 
“இல்லை, இப்போதிருக்கும் வேட்பாளர் வலிமையானவர். அவரை தோற்கடிக்கும் அளவுக்கு வலிமையானவருக்கே ஓட்டளிக்க வேண்டும். நாம் ஓட்டளிக்கும் வேட்பாளர் ஜெயிக்க வேண்டும்; இல்லையென்றால் நம் ஓட்டு வீணாகிவிடும்,” 
என்றனர்.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவர்களிடம் விவாதித்த போதும் கூட, நான் நினைப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு சிறந்த வேட்பாளருக்கு ஓட்டளிப்பது தான் வாக்காளராகிய நம் கடமை. 
எவ்வளவு கீழ்மகனாக இருந்தாலும், வெற்றி பெறும் ஒரு வாக்காளருக்கு நம் ஓட்டை போட்டோம் என்ற நிறைவு நமக்கு ஏற்பட வேண்டும் என்பது, எந்த வகையிலும் ஜனநாயகத்துக்கு பொருத்தமில்லாத முற்றிலும் அசட்டுத்தனமான நம்பிக்கை. ஆனால், படித்தவர்களிடமும் இது உள்ளது.
இன்னொரு தவறான நம்பிக்கை, வலுவான ஒருவரை இன்னொரு வலுவானவரே வெல்ல முடியும் என்பது. அப்படியென்றால் ஒரு ரவுடி நமக்கு சட்டசபை உறுப்பினராக வந்தால், இன்னொரு மேலும் வலிமையான ரவுடி தான் அவரை ஜெயிக்க முடியும். அவரை இன்னொரு ரவுடி தான் ஜெயிப்பார். ஆக, நமக்கு ரவுடிகள் மட்டுமே கடைசி வரை சட்டசபை உறுப்பினர்கள் இல்லையா?
கேரளத்தில் நாராணத்து பைத்தியம் என்றொரு சித்தர் இருந்தார். அவருக்கு வலது காலில் மிகப்பெரிய யானைக்கால் வீக்கம் இருந்தது. அவரை பார்த்தவர்கள் எல்லாம், “நீங்கள் பெரிய சித்தராயிற்றே, இந்த நோயை அகற்ற முடியாதா?” 
என்றனர். 
'முடியுமே' என்று சொல்லி மறுநாள் தன் இடதுகாலுக்கு அந்த வீக்கத்தை மாற்றிக் கொண்டார். “அடேய், தலையெழுத்தை இடமாற்றம் மட்டுமே செய்ய முடியும்,” என்று அவர் சொன்னாராம். தமிழகத்தில் நாம் தலையெழுத்தை இட வலமாக மாற்றுகிறோம். மாற்றி எழுதுவதே இல்லை. 
ஜனநாயகத்தில் மிக முக்கியமான இடம் வகிப்பவர்கள் சுயேச்சை வேட்பாளர்கள். உண்மையில் பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் தொகுதிக்கு நல்லது செய்ய முடியுமென்பதை போன்ற அபத்தமான மாயை பிறிதொன்றுமில்லை.
அப்படி எந்த சட்டசபை உறுப்பினர் தன் தொகுதிக்கு மிகப்பெரிய சேவைகளை செய்திருக்கிறார் என்று கேட்டால், ஒரு இடத்தில் கூட நிறைவான பதிலை பெற முடியாது. இன்னும் சொல்லப் போனால், அமைச்சர்களின் தொகுதிகளில் அவர்கள் எட்டிப் பார்ப்பதே இல்லை என்பது தான் உண்மை.
ஏனென்றால் ஒரு கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ., முதன்மையாக அந்தக் கட்சிக்குத்தான் கட்டுப்பட்டவர். அதிலும் கொள்கையோ, செயல் திட்டமோ இல்லாத இன்றைய அரசியல் கட்சிகள் பெரும்பாலும் கண்மூடித்தனமான அடிமைகளையே வேட்பாளராக நிறுத்துகின்றனர். அவர்கள் வென்று சட்டசபைக்குச் சென்றாலும் அத்தலைமைக்கு சேவை செய்வரே ஒழிய, மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. 
தகுதி,திறமைமாறாக தகுதியும், திறமையும் கொண்டவராயின், ஒரு சுயேச்சை சட்டசபை உறுப்பினர் தன் தொகுதிக்கு மிகப்பெரிய பணிகளை ஆற்ற முடியும். ஏனென்றால், ஒரு எம்.எல்.ஏ.,வின் பணி என்பது மிகப்பெரிய திட்டங்களைக் கொண்டு வருவதோ, ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியை பெருக்குவதோ ஒன்றும் அல்ல. அவை, மத்திய - மாநில அரசுகளின் கடமைகள்.
ஒரு மாநிலம் முழுமைக்குமான திட்டங்களைத்தான் அரசுகள் நிறைவேற்ற முடியும். அந்த ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஒரு பகுதி, ஒவ்வொரு தொகுதிக்கும் மக்களுக்கும் கிடைக்கும். எம்.எல்.ஏ.,வின் தனிப்பட்ட சேவை என்பது, அந்த தொகுதியில் உள்ள ஒவ்வொருவரும் எளிதில் அணுகக்கூடியவராக இருப்பது.
மக்கள் பிரச்னையை அரசின் கவனத்திற்கும், சட்டசபை கவனத்துக்கும் கொண்டு செல்வது. அரசாங்கத்தை அதன் பொருட்டு எதிர்க்கவும் தயாராக இருப்பது. பெரும்பாலான ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு எந்த வகையிலும் எதிர்மறையான பிம்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, தங்கள் தொகுதியின் அனைத்து பிரச்னைகளையும் மறைப்பதைத் தான் நாம் பார்க்கிறோம். 
எந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாலும் மக்கள் நலம் பெற்றதில்லை என்பது தான், கடந்த பல ஆண்டுகளாக நாம் கண்ட உண்மை. இருந்தாலும், எப்போதோ எவரோ சொல்லி நம்பவைக்கப்பட்ட ஒரு பொய்யை நாம் ஏற்றுக் கொண்டு ஓட்டளிக்கிறோம். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., நம் தொகுதிக்கு அமையுமென்றால் அவர் நம் தொகுதியை, உள்ளங்கையில் மணி போல் வைத்துக் காப்பார் என்று நாம் நம்புகிறோம்.
ஜெயிக்கிறவருக்கு ஓட்டு என்னும் அசட்டுத்தனம் இப்படித்தான் வருகிறது. திமிராக, “சரியானவருக்குத்தான் போட்டேன்,” என்று சொல்வதே உண்மையான ஜனநாயக மனநிலை.
ஒற்றைப்படையான அதிகாரம், ஒற்றைப்படையான ஆட்சி முறை என்பதே ஜனநாயகத்துக்கு எதிரானது. ஜனநாயகம் என்ற அமைப்பு இருப்பதே, பல்வேறு வகையான குரல்கள் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவும், அக்குரல்களிடையே ஒரு ஒத்திசைவு உருவாகி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தான்.
ஒவ்வொரு தொகுதிக்கும் உரிய பிரச்னைகளும், மனப்போக்குகளும் வெவ்வேறானவை. ஆகவே, பெரிய அமைப்புகளைச் சார்ந்த சட்டசபை உறுப்பினர்களை விட, எப்போதும் அந்தத் தொகுதியில் வாழ்ந்து, அவர்களில் ஒருவராகச் செயல்படும் சட்டசபை உறுப்பினர்களே அவர்களின் பிரதிநிதியாக இருக்க முடியும்.
பழைய மன்னராட்சிக் காலத்திலேயேகூட அப்படித்தான் இருந்தது. குலத் தலைவர்களும், ஊர்த் தலைவர்களும் மக்களிடமிருந்தே உருவாகி வந்தனர். மக்கள் நடுவே வாழ்ந்தனர். இதைப் புரிந்து கொண்டால் சுயேச்சைகள் தான் முதன்மையான வேட்பாளர்களாக இருக்க முடியும் என்பதை அறியலாம்.
சுயேச்சை வேட்பாளர் என்னும் போது, ஒரு பகுதியை தன் பொருளாதாரச் செல்வாக்கினாலும், ஜாதி அல்லது மதம் சார்ந்த செல்வாக்கினாலும் அல்லது ஆலயம் போன்ற பழமையான அமைப்புகள் மீதான செல்வாக்கினாலும், கையில் வைத்திருக்கும் ஒரு குட்டி சிற்றரசரை அத்தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நான் குறிப்பிடவில்லை.
அரசியல் அதிகாரம்எவர் அத்தொகுதியின் குரலாக ஒலிக்கிறாரோ அவர் தேர்ந்தெடுக்கப்படுவதைப் பற்றி சொல்கிறேன். உண்மையில் அவர் மக்களை விட கொஞ்சம் சாதாரணமானவராக இருப்பதே நல்லது. பணக்காரர்களும், அதிகாரம் மிக்கவர்களும் சாதாரணமாகவே மக்களுக்கு அன்னியர்கள். அவர்களுக்கு அரசியலதிகாரமும் வந்தால் 
அணுகவே முடியாது.அப்படிப்பட்ட ஒருவர் எங்கள் தொகுதியில் இல்லை என்று ஒருவர் சொல்லலாம். தமிழகத்தில், 234 தொகுதிகளிலும் உறுதியாக அப்படி ஒருவரேனும் போட்டியிட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர் என்பதே உண்மை. ஒரு தேர்தலில், 10 சுயேச்சைகள் அவ்வாறு வெல்ல முடியுமென்றால், வரும் தேர்தல் அனைத்திலுமே மேலும் மேலும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட முன்வருவர்.
சுயேச்சைகளின் அரசியல் உருவாகுமென்றால், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் நிற்கக்கூடும். நமக்கு பல வகையான வேட்பாளர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு அமையும்.
உதாரணமாக, தென்குமரியின் கடற்கரைப் பகுதிகளில் மிக அதிகமாக நெத்திலி போன்ற மீன்கள் கிடைப்பது மழைக் காலத்தில். வெயில் இல்லாமையால் அவற்றில் விற்காமல் எஞ்சியவற்றை உலரச் செய்து கருவாடாக ஆக்க முடிவதில்லை. செயற்கை மீன் உலரகம் அமைக்க வேண்டும் என்னும் கோரிக்கை பல ஆண்டுகளாக மீனவர்களிடம் உள்ளது.
மீன்வள விஞ்ஞானியும், சமூகச் செயல்பாட்டாளருமான வறீதையா கன்ஸ்டண்டீன் இதை விரிவாக எழுதியிருக்கிறார். மீனவர்களின் பிரச்சினைகளைப் பற்றி பல நுால்களை எழுதிய அவர், மீனவர்களின் எம்.எல்.ஏ., ஆகமுடியும் என்றால் அவரைப் போல சிறந்த மக்கள் பிரதிநிதி எவர் இருக்க முடியும்? அப்படி ஒரு, 100 பேர் நம் அரசியலுக்குள் நுழைந்தால் எப்படி இருக்கும்!
ஜனநாயகத்தில் தகுதி உள்ள ஒருவருக்கு அளிக்கப்படும் ஓட்டு மட்டுமே மக்களுக்கு அதிகாரமானது. தகுதியற்ற ஒருவருக்கு அளிக்கப்படும் ஓட்டு, மக்கள் தங்களுக்கு எதிராக போட்டுக் கொள்ளும் ஓட்டு தான்.
கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com 
www.jeyamohan.in
நன்றி:தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1507484

Thursday, April 21, 2016

ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 33 : புரட்சி வரவேண்டும்!ஜெயமோகன்

பதிவு செய்த நாள்

22ஏப்
2016 

ஓர் எழுத்தாளனாக, இளைஞர்களையும் மாணவர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். அரசியல் குறித்த எந்தப் பேச்சையும் அவர்கள், 'ஒரு புரட்சி வரணும் சார்!' என்று தொடங்குவதைப் பார்க்கிறேன். புரட்சி எவ்விதம் எங்கு நிகழ வேண்டும் என்பதில், அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம், ஆனால் புரட்சி வந்தே தீரவேண்டும் என்பதில் மாற்றமில்லை.
நானும் அவ்வாறே இருந்தவன் 
என்பதால், எனக்கு அதில் வியப்போ எதிர்ப்போ இல்லை. ஆனால் என் இளமையில் புரட்சி போன்ற உருவகங்களை, வரலாற்று ரீதியாக புரிந்து கொள்ள நான் முயன்றேன். அவற்றின் இன்றைய பெறுமதி என்ன என்பதையும், காலப்போக்கில் புரிந்து கொண்டேன். 
புரட்சி என்பது தலைகீழான, ஒட்டுமொத்த மாற்றம் என்பதைக் குறிக்கிறது. உண்மையில் எந்தத் துறையிலாவது அப்படிப்பட்ட மாற்றம் சாத்தியமா? ஆம், 
சாத்தியம் தான்.நம்மை சூழ்ந்து அப்படிப்பட்ட தலைகீழ் மாற்றங்கள் நடந்தபடியே தான் உள்ளன. உதாரணமாக இன்றைக்கு, 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஆ.மாதவய்யா போன்றவர்கள் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தபோது, தமிழகம் முழுக்க அது, அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியது.
வீட்டு மிருகங்கள்
வீட்டு மிருகங்களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னால் இன்று நமக்கு என்ன அதிர்ச்சி வருமோ அதைப் போன்றது அது. ஆனால் இன்று அந்த வரி, ஒரு காலத்தில் சொல்லப்பட்டது என்று ஆச்சரியமூட்டும் அளவுக்கு, பெண் கல்வியில் நாம் முன்னால் வந்து கொண்டிருக்கிறோம். இது தான் தலைகீழான மாற்றம்; இது தான் புரட்சி.
ஆனால், இந்த மாற்றம் நிகழ்வதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு வேண்டி இருக்கிறது. ஒரு மரம் வளர்ந்து கனி அளிப்பதற்கு, எவ்வளவு காலம் தேவைப்படுமோ அவ்வளவு காலம். கூடையை கவிழ்த்து எடுத்த உடனேயே, மாங்காய் மரமாகி கனி தரும் என்பது, மோடி மஸ்தானின் 
வாய்ஜாலமாகவே இருக்க முடியும்.
சமூகத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு மனநிலையும் பலநுாறு ஆண்டுகளாக, சிறிது சிறிதாக உருவாகி வந்தவை. அப்படி இருக்க, அவை ஒரே கணத்தில் எப்படி மாற முடியும்? சமூகம் மாறினாலும் மனநிலைகள் மாறவேண்டாமா? அதற்கேற்ப, வாழ்க்கையின் போக்கையே மாற்ற வேண்டாமா? 
அப்படி என்றால் புரட்சி என்ற கருத்து உலகில் எப்படி உருவாயிற்று? பதினாறு, பதினேழாம் நுாற்றாண்டுகளில், ஐரோப்பாவில் மன்னராட்சிக்கும், சர்வாதிகார ஆட்சிக்கும் எதிராக மக்களின் உள்ளம், ஜனநாயகத்தை நோக்கி வந்துவிட்டிருந்தது. ஆனால் பழங்கால ஆசாரங்களின் பலத்திலும், இராணுவ ஆதரவின் அடிப்படையிலும், அங்கே மன்னர்களும் சர்வாதிகாரிகளும் அரசுகளில் நீடித்தனர்.
மக்கள் எழுச்சி கொண்டு அவ்வரசுகளை துாக்கி வீசி, ஜனநாயக அரசுகளை அமைத்தார்கள். இதையே ஒட்டுமொத்த மாற்றம் என்ற அர்த்தத்தில், புரட்சி என்று அழைத்தார்கள்.
பிரான்ஸிலும், ரஷ்யாவிலும், இத்தாலியிலும் நிகழ்ந்தது எல்லாம் இத்தகைய புரட்சிகள் தான். ஆகவே இக்கால கட்டத்தில் ஒட்டுமொத்த மாற்றம் அல்லது புரட்சி என்ற கருத்தின் மேல், சிந்தனையாளர்களுக்கு மிகப் பெரிய ஈர்ப்பு 
உருவானது.
உண்மையில் மன்னராட்சி முடிந்து ஜனநாயக ஆட்சி நிகழும் போது, அந்த மாற்றம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தை மட்டும் வைத்து பார்த்தால், ஒட்டுமொத்த சமுதாயமே, தலைகீழாக திருப்பப்பட்டு விட்டது போல ஒரு பிரமை நமக்கு ஏற்படும்.
ஆனால், மக்கள் மன்னராட்சி மனநிலையில் இருந்து விடுபட்டு ஜனநாயக கருத்துகளை ஏற்றுக் கொண்டு, அந்த தருணம் வரைக்கும் வந்து சேர்ந்தடைவதற்கு, நீண்ட காலம் தேவைப்பட்டிருக்கிறது. அதையும் சேர்த்து பார்த்தால், அது உடனடியாக நிகழ்ந்த ஒரு மாற்றம் அல்ல என்பது, நமக்கு தெரியும்.
துரதிர்ஷ்டவசமாக, புரட்சி என்ற கருத்து, அன்றைய ஆங்கிலக் கல்வி மூலம், ஐரோப்பாவிலிருந்து உலகம் முழுக்க சென்று சேர்ந்தது. இளைஞர்கள் அந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்கான அழைப்பை, வெறியுடன் ஏற்று கொண்டனர்.
அநேகமாக உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் அரசுக்கு எதிராக இளைஞர்களின் கிளர்ச்சிகள் நிகழ்ந்தன. ஐரோப்பாவில், 19ம் நுாற்றாண்டில் பல புரட்சிகள் நிகழ்ந்தன. ஆசிய நாடுகளில், 20ம் நுாற்றாண்டில் இப்புரட்சி நிகழ்ந்தன. 
கியூபாவில் புரட்சி
மக்கள் எந்த வகையிலும், சிந்தனை அளவில் அந்த மாற்றங்களை அடையாத நிலையில் அரசை மாற்றுவதற்காக மக்களின் சார்பில் புரட்சிகளில் ஈடுபட்ட அனைவருமே தோற்கடிக்கப்பட்டனர்.
சே குவேரா, புரட்சியின் பிம்பம். ஆனால் அவர் ஈடுபட்ட புரட்சிகளில் கியூபா என்னும் சிறிய நாட்டில் மட்டுமே, ஆட்சி மாற்றம் வந்தது. காங்கோ, பொலிவியா போன்ற நாடுகளில், அவர், இளைஞர்களின் அழிவுக்கே காரணமாக அமைந்தார். மக்கள் அவரை ஆதரிக்கவில்லை.
இந்தியாவில் நக்சலைட் புரட்சி, 1960களின் இறுதியில் வெடித்து, அரை லட்சம் பேர் இறக்கக் காரணமாக அமைந்தது. 1971ல் இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனா என்னும் அமைப்பின் புரட்சியால், ஒரு லட்சம் பேர், அரசால் கொல்லப்பட்டனர். இந்தோனேசியாவில், தாய்லாந்தில் என அண்டை நாடுகளில் எல்லாம் புரட்சியின் பெயரில், பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர். 
இவ்வாறு தொடர்ந்து புரட்சிகள் அனைத்தும் தோல்வியுறுவதைக் கண்டபின் தான், புரட்சி என்பதன் அடிப்படைகள் என்ன என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள, ஐரோப்பிய சிந்தனையாளர்கள் தயாராகினர். இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவரும், முசோலினியின் சிறையில் வாடியவருமான, அண்டோனியோ கிராம்ஷி என்பவருடைய சிந்தனைகள், அவர்கள் கவனத்துக்கு வந்தன. அவை மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுக்க சென்றன. 
கிராம்ஷியின் சிந்தனைகளை மிகச்
சுருக்கமாக இப்படி சொல்லலாம். ஓர் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் அனைவரையும் கொன்று விட்டால், அந்த அரசாங்கம் மாறுமா? அந்த அரசாங்கத்தின் அதிகாரிகள் அனைவரையும் அழித்தால், அந்த அரசாங்கம் மாறுமா? மாறாது.
அதே போன்றவர்கள் திரும்பவும் வருவார்கள். அதாவது வேர் உள்ளே இருக்கையில், மேலே தெரியும் முளையை வெட்டுவது போன்றது அது. அந்த வேர் என்ன? அது பொதுமக்களிடம் இருக்கும் கருத்து தான். மக்கள் எந்த வகையான 
அரசாங்கத்தை விரும்புகிறார்களோ அந்த அரசாங்கம் தான் உருவாகி வரும்.
கிராம்ஷி அந்த அரசாங்கத்தை நடத்தும் அனைவரையும் ஒட்டு மொத்தமாக, 'அரசியல் சமூகம்' என்று சொன்னார். மக்களை குடிமைச் சமூகம் என்றார். குடிமைச் சமூகத்திலிருந்து அவர்களின் பிரதிநிதியாக சிலர் கிளம்பி வந்துதான் அரசாங்கத்தை அமைக்கிறார்கள். 
பாலில் நெய் போல, அதிகாரம், குடிமைச் சமூகத்தில் கலந்திருக்கிறது. குடிமைச் சமூகத்தின் எண்ணத்தை மாற்றாமல் அரசாங்கத்தை மாற்ற முடியாது. ஆகவே, புரட்சி என்பது அடிதடிக் கலவரம் அல்ல. மக்களின் கருத்தை மாற்றுவதற்கான நிதானமான போராட்டம்தான்.
அவ்வாறு மக்களை மாற்றுவது என்பது எளிதல்ல. மக்களின் உள்ளமென்பது அவர்கள் பிறந்து வாழ்ந்த சூழலில் இருந்து உருவாவது. அதற்கு பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் உள்ளது. மதம், பண்பாடு பழக்க வழக்கங்கள் என பல தளங்களில் மக்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். ஆகவே மிகத்தீவிரமான செயல்பாடுகள் மூலம் மிக மெதுவாகவே மக்களிடம் 
மாற்றத்தை உருவாக்க முடியும். 
மாற்றத்தை உருவாக்க...
அரசியலில் மட்டுமல்ல, சிந்தனையின் எந்தத் தளத்திலும் சிறு மாற்றத்தை உருவாக்குவதற்கு நீடித்த நெடுங்கால அர்ப்பணிப்புள்ள உழைப்பு தேவை. மக்களிடையே ஒரு கருத்தை கொண்டு சென்று, அதற்கு மக்கள் அளிக்கும் எதிர்ப்பை புரிந்து கொண்டு, அவர்களின் கருத்தை ஏற்று, அக்கருத்தை இன்னும் கூர்மைப்படுத்தி, சலிக்காமல் தொடர்ந்து முயல வேண்டும். ஒரு சிறிய வியாபாரத்தைச் செய்தாலே இதைப் புரிந்துகொள்ள முடியும்.
ஓராண்டுக்கு முன் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்னால் நரிக்குறவர்களின் உரிமைப் பேரணி ஒன்றை பார்த்தேன். கடந்த முன்னுாறாண்டுகளாக அவர்கள் இங்கே வாழ்கிறார்கள். தங்களுக்கென்று அரசியல் உரிமையும் உண்டு என்பதே அவர்களுக்குத் தெரியாது. இன்று அவர்கள் அரசாங்கத்தின் முன்வந்து நின்று தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் என்பதே ஒரு பெரிய புரட்சி.
நமக்குப் புரட்சிகள் வேண்டும். ஆனால் அவை சோப்பு நுரை போல ஊதி பெருக்கப்பட்டு காற்றடித்தால் உடைந்து கலைந்து விடக் கூடியவையாக இருக்கக்கூடாது. கல் கட்டடங்களை போல, ஒவ்வொரு கல்லாக எடுத்துக் கட்டி எழுப்பக் கூடியவையாக இருக்க வேண்டும். 
வெறுமே வாயால் புரட்சிக் கூச்சலிடுபவர்கள் பயனற்றவர்கள். சீராக, தொடர்ச்சியாக மக்களின் எண்ணங்களில் மாற்றத்தை கொண்டு வருபவர்களே உண்மையான் புரட்சியாளர்கள்.
ஒரு ஜனநாயகத்தில் ஒவ்வொரு தேர்தலும், மக்களிடம் கருத்துக்களை கொண்டு செல்லும் வாய்ப்பை அளிக்கிறது. உண்மையான புரட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளிக்கவும் வாய்ப்பாக அமைகிறது. கல்வி, தொழில், மருத்துவம் என பல தளங்களில் நமக்குத் தேவையான பல புரட்சிகள் இன்றுள்ளன.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com 
www.jeyamohan.in
நன்றி : தினமலர் http://www.dinamalar.com/news_detail.asp?id=1507004

ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 32 : மதமும் தேசியமும்






இப்போது அடிக்கடி கேட்கப்படும் கேள்வி ஒன்று உண்டு. காந்தி ஏன் நேருவை முன் நிறுத்தினார். உண்மையில் காந்தியின் பொருளாதாரக்
கொள்கைகளுக்கு, மிகவும்
நெருக்கமானவர் பட்டேல் தான். நேரு, காந்தியின் கிராம சுயராஜ்ய சிந்தனைகளை முழுமையாக நிராகரித்தவர். காந்தியின் எளிமை, நேருவைக் கவர்ந்ததில்லை. காந்திக்கும் நேருவுக்கும் இடையே, 1947 வாக்கில் சுதந்திரம் கிடைத்த பிறகு, எந்த வகையான அரசு இங்கே அமைய வேண்டுமென்பதில் கடுமையான கடித வாக்குவாதங்கள் நடந்தன. காந்தியின் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு, நேரு செவி சாய்க்கவில்லை. இருந்தும், நேருவையே தனது வாரிசாக காந்தி சுட்டிக் காட்டினார். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தலில், காந்தியின் வாரிசாக தன்னை முன் நிறுத்திக் கொண்டதால் தான், வரலாறே வியக்கும்படியாக பெரும்பான்மையைப் பெற்று நேரு ஆட்சி அமைத்தார். இந்தியாவுக்கு வலுவான ஓர் அரசியல் சட்டத்தை, பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அளித்தார்.
ஏன் காந்தி நேருவை முன்னிறுத்தினார் என்பதற்கான காரணம் ஒன்றே ஒன்று தான். நேரு சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட மதச்சார்பின்மை கொண்டவர். பட்டேல் மீது அந்த நம்பிக்கை, இந்தியாவில் இருந்த
இஸ்லாமியர்களுக்கு இருக்கவில்லை.
ஒருவகையில் காந்தி அளித்த செய்தியே அதுதான். இந்த தேசம் மதச்சார்பின்மையையே அதன் அடிக்கட்டுமானமாகக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் இங்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் என்று பலமதத்தினர் வாழ்கிறார்கள். இது அனைத்து மதத்தினருடைய நாடாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே நாம் சிறந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்ல முடியும்.
சுதந்திரத்தை ஒட்டி இந்தியா முழுக்க இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே ஏற்பட்ட மதக்கலவரங்களும், அதன் விளைவான கசப்புகளும், அவநம்பிக்கைகளும் தான் காந்தியை பிற அனைத்தையும் விட முதன்மையாக மதச்சார்பின்மை என்ற எண்ணத்தை நோக்கித் தள்ளின.
ஐரோப்பாவில் நவீனத் தேசியம் என்பது கத்தோலிக்க மதத்தின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தொடங்கியது. எனவே ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து முதலிய நாடுகள், மதத்திற்கு எதிரான ஒரு பண்பாட்டுத் தேசியத்தை அங்கே உருவகித்துக் கொண்டிருந்தன. அது மொழியைச் சார்ந்திருந்தது.
மொழிவழித் தேசியம் அங்கு மொழிச் சிறுபான்மையினரிடத்து அச்சத்தையும் விலக்கத்தையும் ஏற்படுத்தியதால் அதையும் உதறி, எந்தவிதமான பழைமையான பண்பாட்டையும் அடிப்படையாகக் கொள்ளாத நவீனத் தேசியத்தை நோக்கி அவர்கள் வந்தனர்.
ஆனால் நவீனத் தேசியம் என்னும் கருத்து, ஐரோப்பாவில் இருந்து ஆசியாவிற்கு வந்தபோது அனைத்து இடங்களிலுமே மதம் அதில் ஒரு முக்கியமான பங்கு வகித்தது.
ஏனெனில் மதத்தின் அடிப்படையில் மக்களைத் திரட்டுவது எளிது. மக்களை ஒன்றாகத் திரட்டும் குறியீடுகளை மதத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே மக்கள் ஒன்றாகத் திரளும் அமைப்புகளும், விழாக்களும் மதத்தில் இருக்கும்.
ஐரோப்பியர்கள் அரேபியாவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய போது, அரேபியா மத அடிப்படையில்தான் எதிர்த்தது. அங்கிருந்து மத ரீதியாக ஒருங்கிணைந்து அரசியல் எதிர்ப்பை உருவாக்கும் போக்கு வலுவாக உருவாகியது.
இந்தியாவில் நேரடியாக மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தும் போக்கு சுதந்திர போராட்டம் தொடங்கிய போதே உருவானது. இந்தியாவின் சுதந்திர போராட்டமே இந்து மதச்சீர்திருத்த இயக்கங்களான பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், ராமகிருஷ்ண மடம் போன்றவற்றின் தொடர்ச்சியாக உருவானது தான். ஆகவே மதத்தில் இருந்த பல்வேறு குறியீடுகளை எடுத்து பயன்படுத்தினர். பாரத் மாதா என்ற உருவமும் சரி, வந்தே மாதரம் என்ற கோஷமும் சரி, மதத்தில் இருந்து வந்தவை.
கிலாபத் இயக்கம் இந்தியாவில் மதத்தில் இருந்து கிளைத்த ஓர் அரசியல் இயக்கம். அதன்பின், 1924-ல் முஸ்லீம் லீக் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கடுத்த வருடமே நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்., ஆரம்பிக்கப்பட்டது.
இந்தியாவில் மதம் சார்ந்த தேசிய உருவகங்கள் வலுப்பெறத் தொடங்கின. இதே போக்கையே இலங்கையில் நாம் காண்கிறோம். அநகாரிக தம்மபாலா என்பவர் சிங்கள இன பௌத்தத்தை அங்குள்ள தேசியத்தின் அடிப்படையாக முன் வைத்தார். பௌத்தத்தின் அரசியல் முகம் அப்படித்தான் ஆரம்பமாகியது.
எப்போது மதம் தேசியத்தின் அடிப்படையாக அமைகிறதோ, அப்போதே அதற்குள் உள்ள பிற மதங்கள் எதிர்நிலை எடுக்க ஆரம்பிக்கின்றன. அந்தத் தேசியத்தை எதிர்க்கும் அன்னிய சக்திகள் அப்பிரிவினையை பயன்படுத்திக் கொள்ள
ஆரம்பிக்கின்றன.
1918ல் இந்தியாவுக்குத் திரும்பி காங்கிரஸ் அரசியலில் ஈடுபட ஆரம்பித்த காந்தி, இங்கிருந்த தேசியப் போராட்டத்தில் இருந்த மத அம்சத்தை கூர்ந்து நோக்கினார். திலகர் போன்றவர்கள் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி உருவாக்கிய சுதந்திர போராட்ட நிகழ்வுகள் சிறுபான்மையினரை அன்னியப்படுத்தி விடும் என எண்ணினார்.
அந்த எல்லையை உடைத்து, இந்து - முஸ்லிம் இருவரும் இணைந்த ஒரு தேசிய உணர்வு இங்கே பிறக்க வேண்டுமென்று காந்தி விரும்பினார். ஆகவே அவர் இங்கே உருவாகி வந்த முதல் இஸ்லாமிய அரசியல் இயக்கமான கிலாபத் அமைப்பை ஆதரித்தார். இந்து - முஸ்லிம் அவநம்பிக்கையை பிரிட்டிஷார் பயன்
படுத்திக் கொள்ளக் கூடாது என்று அவர் எண்ணினார்.
ஆனால், கிலாபத் இயக்கத்தில் இருந்து இந்தியாவில் இஸ்லாமிய மதவாதம் எழுந்தது. அதற்கு எதிர்வினையாக இந்து தேசியவாதம் எழுந்தது. இஸ்லாமிய தேசியவாதம் பிரிட்டிஷாரால் வளார்க்கப்பட்டு கடைசியில் தேசத்தை உடைத்தது. சுதந்திரத்திற்கு பின், இந்தியாவில் இரண்டு வாய்ப்புகள் நமக்கு இருந்தன. நவீன ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசியம். அது எதிர்காலத்தை நோக்கியது. இன்னொன்று மதத்தை நோக்கிய தேசியம். இறந்தகாலத்தை
நோக்கியது அது.
சென்ற சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் இஸ்லாமியத் தீவிரவாதம் வலுவாக வேரூன்றி வருகிறது. சௌதி அரேபியாவை மையமாகக் கொண்ட வஹாபி, சலாபி இயக்கங்கள் இஸ்லாமிய மதத்தை வெறுமொரு அரசியலாகக் குறுக்கி அதைக் கொண்டு உலகத்தை வென்று ஆதிக்கம் செலுத்த முனைகின்றன. அவை மனிதாபிமானம் அற்ற தீவிரவாதத்தை தங்கள் வழியாகக் கொண்டுள்ளன. இஸ்லாமிய தீவிரவாதத்துக்கெதிராக உலகெங்கும் உருவாகும் கோபத்தை இங்குள்ள இந்துத் தேசியம் தனக்காக பயன்படுத்திக் கொண்டுள்ளது. விளைவாக அது இங்கு வளர்ந்து ஆட்சியை பிடித்துள்ளது
இஸ்லாமியர்களின் ஓங்கி ஒலிக்கும் குரல்கள் அனைத்துமே இந்த வஹாபி, சலாபி இயக்கங்களோடு தங்களை இணைத்துக் கொள்பவையாக உள்ளன என்பதே இங்கே இந்து தேசியம் மேலும் மேலும் வளர வழியமைக்கிறது. ஆக, காந்தி எதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தாரோ அந்தப் போக்கு மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது.
ஏன் மதம் தேசியத்தின் அடிப்படையாக இருக்கக் கூடாது? ஒன்று, பெரும்பான்மையினரின் மதத்தை சார்ந்து தேசியம் அமைக்கப்படுமென்றால் சிறுபான்மையினர் அதற்குள் இயல்பாக இருக்க முடியாது; அவர்கள் அந்நியப்படுவார்கள்.
மிகச் சிறுபான்மையினர் என்றாலும் அனைவருக்கும் இடமுள்ள ஜனநாயகமே நவீன வாழ்க்கைக்கு உரியது. அது பெரும்பான்மையினரின் பெருந்தன்மையாலோ, கருணையாலோ அளிக்கப்படுவதாக இருக்கக் கூடாது. அது இயல்பான அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும்.
அப்படி உணரப்படவும் வேண்டும்.
அத்துடன் மதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும்போது அந்த மதத்தின் நிறுவனங்களையும் நம்பிக்கைகளையும் கட்டுப்படுத்துபவர்களின் அதிகாரம் அரசுக்குள் ஊடுருவுகிறது. எந்த மதமாக இருந்தாலும் மதத்தின் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் எப்போதும் பழமையானவர்களாகவே இருப்பர். ஏனெனில் அமைப்பின் பழமையைக் கட்டிக் காப்பதே அவர்களது பொறுப்பு. ஆனால் ஓர் அரசு முற்போக்கானதாகவும் எதிர்காலத்தை நோக்கி செயல்படக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதில் பழமைவாதிகளின் செல்வாக்கு இருக்குமென்றால் தேசம் அழியும்.
அரேபிய தேசங்களில் நாம் பார்ப்பதும், பாகிஸ்தானில் நாம் காண்பதும் மதப் பழமைவாதிகள் அரசைக் கட்டுப்படுத்துவதால் விளையும் பின்னடைவுகளையே.
இறுதியாக, எந்த ஒரு மதமும் தொடர்ச்சியாக தன்னை புதுப்பித்தபடியே வரவேண்டும். ஒவ்வொரு மதத்திற்குள்ளும் மதச்சீர்திருத்தவாதிகள் எழுந்து ஏற்கனவே இருக்கும் நம்பிக்கைகளையும், ஆதாரங்
களையும் உடைக்க முயலவேண்டும். நாம் இன்று வழிபடும் நாராயணகுரு, வள்ளலார் போன்றவர்கள் பெரும் மதச்சீர்திருத்தவாதிகளே. மதமும் அரசாங்கமும் ஒன்றாக இருக்கும்போது மதப்பழமைவாதிகள் எதிர்க்க முடியாத ஆற்றல் பெறுவர். மதத்துக்குள் புதுச்சீர்திருத்தவாதிகள் எழமுடியாமல் போகும். விளைவாக அந்த மதமே தேங்கி நிற்க நேரும். இதுவும் அரேபிய நாடுகளில் நாம் காண்பது.
இக்காரணத்தால் தான் எதன் பொருட்டும் மதம் அரசியலாகக் கூடாது. எக்காரணத்தாலும் மத அடிப்படையிலான தேசியம் அமையக் கூடாது. தேசியம் என்பது வளர்ச்சியின் அடிப்படையில், ஒத்துப்போவதின் அடிப்படையிலேயே அமைய வேண்டும். காந்தி, இந்தியர்களுக்கு அளித்துச் சென்ற பொறுப்பு அதுதான். ஓட்டளிக்க கையில் ஓட்டுச்சீட்டை ஏந்தும் ஓர் இந்தியன், காந்திக்கு அந்த வாக்குறுதியை அளிக்கிறான்.

கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com www.jeyamohan.in

நன்றி : தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1506267&Print=1

ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 31 : பல குரல்களின் மேடை

தமிழகத்தின் புகழ்மிக்க தொழிலதிபர்களில் ஒருவரான அமரர் சக்தி நா.மகாலிங்கம் அவர்களிடம் எனக்கு பதினைந்து ஆண்டுகள் தொடர்பு இருந்தது. நான், 'சொல் புதிது' என்னும் இதழ் நடத்த அவர் உதவி செய்தார். எனது, 'இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள்' என்னும் நுாலை, அவருக்கு 
சமர்ப்பணம் செய்திருக்கிறேன். ஒருமுறை, உரையாடலில் தன் தொழிற்குழுமத்தில் உள்ள ஒருவரை குறிப்பிட்டு, ''அவர் கூறும் எந்தக் கருத்தும் எனக்கு உடன்
பாடானது அல்ல,'' என்றார்.''அப்படியென்றால் ஏன் அவரை வைத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டேன். ''அவர் என்னை எதிர்ப்பதற்காகத்தான்,'' என்று சிரித்தபடி சொன்னார். அவரது பிரம்மாண்டமான தொழிற்குழுமத்தில் ஒவ்வொரு சிறு முடிவும் மிகப்பெரிய எதிர்
விளைவுகளை உருவாக்கக்கூடும். 
ஆகவே, அனைத்து கோணங்களிலும் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது. அதற்கு பல்வேறு தரப்புகளில் நின்று பேசக்கூடியவர்கள் அவரை சுற்றி தேவை.
அவர்கள், அவரை ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், அவரை கடுமையாக மறுப்பவர்கள் தான் அவருடைய திட்டங்களை மேலும் கூர்மையாக்குகிறார்கள். அவருடைய தவறுகளை சுட்டிக் காட்டி, அவருடைய செயலை மேலும் வெற்றிகரமாக ஆக்குகிறார்கள்.
ஒரு தொழிற்குழுமத்திற்கே இத்தகைய மாற்றுக்குரல்கள் உள்ளே இருக்க வேண்டுமென்றால், தமிழகம் போன்ற ஒரு மாபெரும் நிலப்பரப்பை ஆளும் கட்சிக்குள் எப்படி இருக்க வேண்டும். ஒரு மாற்றுக் குரல் கூட எழாது, ஒருவர் இந்த மாநிலத்தை ஆள்வார் என்றால் அது எத்தகைய ஆட்சியாக இருக்கும்?
உண்மையில் காமராஜர் ஆட்சிக்குப்பின் தமிழகத்தை ஆண்ட அனைத்து முதல்வர்களும் சர்வாதிகாரிகளே. காமராஜர் ஆட்சியில், அவருக்கு சமானமான, அவரை மறுக்கக்கூடிய முக்கியமான அமைச்சர்கள் இருந்தனர். சி.சுப்ரமணியம், ஆர்.வெங்கட்ராமன் போல. 
பிறகு வந்த முதல்வர்கள், மிதமிஞ்சிய வகையில், தங்களை முன் நிறுத்திக் கொள்கிறார்கள். கட்சி, அரசு அனைத்துமே அவர்களின் தனிப்பட்ட சொத்து. ஆகவே விசுவாசிகளே கட்சியிலும் அரசிலும் இருக்கிறார்கள்.
தமிழகத்தின் பெரும் பகுதியை ஆண்ட மன்னர்கள் என்றால், ராஜராஜ சோழன் மற்றும் திருமலை நாயக்கர். ராஜராஜ சோழனின் அவையில் கடம்பூர் சம்புவரையர், கொடும்பாளூர் வேளார், பழுவேட்டரையர், முத்தரையர் போன்ற பல சிற்றரசர்கள் இருந்தனர். அவர்கள் ராஜராஜனுக்கு பெண் கொடுத்தவர்கள், அவர் குடும்பத்தில் பெண் எடுத்தவர்கள். ஆகவே, அரசனுக்கு நிகரான அதிகாரம், அன்று அவர்களுக்கு இருந்தது. 
திருமலைநாயக்கர் அவையில் எழுபத்திரண்டு பாளையக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள், மன்னனுக்கு ஆலோசனை சொல்லி இடித்துரைக்கும் அந்தஸ்து கொண்டவர்களாக இருந்தார்கள். அவ்வாறு தான் இந்த பெரிய நிலம் வெற்றிகரமாக ஆளப்பட்டது.
உண்மையில், அவ்வாறு பலதரப்புகள் சேர்ந்து விவாதித்து, ஆட்சி செய்யும் முறையை, மேலும் அதிகரிக்கும் பொருட்டே இங்கு ஜனநாயகம் கொண்டு வரப்பட்டது. 
பல தளங்களை சேர்ந்த நிபுணர்கள் ஓர் அரசில் இடம்பெற வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டு, கருத்துகளை தெரிவிக்க வேண்டும். பல்வேறு இடங்களை சேர்ந்த, பல்வேறு மக்கள் குழுக்களை சேர்ந்த, பல்வேறு தொழில்களை சேர்ந்த அரசியல்வாதிகள் அந்த அரசில் இருக்க வேண்டும். இவர்கள் அனைவரும் கூடி விவாதித்து, ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஒரு குரல் கூட ஒலிக்காமல் இருந்துவிடக் கூடாது என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை. ஒரு குரல் மட்டும் ஒலிப்பது என்பது சர்வாதிகாரம் மட்டுமே.
சுதந்திரத்துக்கு பின், இந்தியாவை ஆண்ட நேருவின் அமைச்சரவை ஒரு முன்னுதாரணமான ஜனநாயக தன்மையோடு இருந்தது. நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மை பெற்று, வென்றவர் நேரு. ஆனால், அவரது அரசில், நேருவுக்கு நிகரான அதிகாரத்துடன் பட்டேல் இருந்தார். 
நேரு, நகர்மயமாக்கலையும் தொழில் மயமாக்கலையும் ஆதரித்தபோது, கிராம தொழில்களையும் கிராமங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியையும் பட்டேல் 
முன்நிறுத்தினார். 
நேருவுடன் எப்போதும் முரண்படும், ரஃபீக் அகமது கித்வாய் போன்ற, அமைச்சர்கள் அவரது அமைச்சரவையில் இருந்தார்கள். தனது ஒவ்வொரு திட்டத்தையும், நேரு, அவர்களிடம் பேசி, அவர்களை நிறைவுறச் செய்து, அதன் பின்னரே கொண்டு வரமுடிந்தது. 
பலமுறை, நேரு கடும் கோபம் கொண்டு, அமைச்சரவையிலிருந்து இறங்கிச் சென்றிருக்கிறார் என்று, பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 
ஆனால், அந்த கூட்டு அமைச்சரவை, ஒரு பதினைந்து ஆண்டு காலத்தில், இந்தியாவுக்கு செய்த பங்களிப்பை, அதன் பிறகு எந்த இந்திய மைய அரசும் செய்யவில்லை.
நேர்மாறாக, இந்திரா காந்தி, அவரது கட்சியையும், அரசையும் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். நெருக்கடி நிலை காலத்தில், 'இந்திராவே இந்தியா! இந்தியாவே இந்திரா' என்ற கோஷமே, தேவகாந்த் பருவா என்ற அமைச்சரால் முன்வைக்கப்பட்டு, அக்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்தியாவின் முக்கியமான ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் ஆற்றல் இழந்தன.
இந்திராவின் ஆட்சி காலத்தில் தான், இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. ஆலைகள் மூடப்படுவதும் அதற்கிணையாகவே பெருகியது. வேளாண் துறையிலும் பொது துறை உற்பத்தியிலும் பெருவீழ்ச்சி ஏற்பட்டது. 
வேலையில்லா திண்டாட்டத்தால் உருவான நக்சலைட் கிளர்ச்சி, இந்தியாவை உலுக்கியது. கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் இளைஞர்களை சுட்டுக் கொன்று, அப்போராட்டத்தை இந்திரா காந்தி நசுக்கினார். காரணம், மாற்றுக்குரலே இல்லாமல் இருந்தமையால் அந்த பிழைகளை எவரும் சுட்டிக் காட்டவில்லை. தொடர்ந்து, நெருக்கடி நிலையை கொண்டு வந்து வீழ்ச்சியடைந்தார் இந்திரா.
இந்திராவை தோற்கடித்து, ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாயின் அரசில், ஒருபக்கம் இடதுசாரிகளான ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றவர்களும், மறுபக்கம் வலதுசாரிகளான அடல் பிகாரி வாஜ்பாய் போன்றவர்களும் இருந்தனர். 
இந்தியாவின் கலப்பு பொருளியலை, அவர்கள் முன்னெடுத்துச் சென்றனர். இந்திய ஜனநாயகத்தில், மொரார்ஜியின் ஆட்சி காலம் ஒரு பொற்காலம். 
ஆனால், அவர்களுக்கிடையே நிகழ்ந்த விவாதங்களை, 'சண்டைகள்' என்று மக்கள் புரிந்துகொண்டனர். அந்த ஆட்சி கவிழ்ந்தது. போர்க்காலங்களிலும் நெருக்கடி நேரங்களிலும், உறுதியான தலைமைக்கும் ஒற்றைக்கும், ஓர் இடம் உண்டு. ஏனெனில் அங்கு தாமதம் கூடாது. 
ஆனால், ஜனநாயகம் தாமதமாக மட்டுமே செயல்பட வேண்டும். எந்த முடிவும் அவசரமாக எடுக்கப்பட்டு, அதன் விளைவாக பெரிய அழிவுகளை உருவாக்கிவிடக் கூடாது. பெரும்பான்மையினருக்கோ வலிமை வாய்ந்தவர்களுக்கோ சாதகமாக எடுக்கப்படும் முடிவால், எங்கோ தங்கள் குரல் ஒலிக்காமல் இருக்கும் எளியவர்கள் பாதிப்படையக் கூடாது. உடனடியாக ஒரு தேவைக்காக எடுக்கப்படும் முடிவு, நீண்ட கால அளவில், பின்னடைவை 
உருவாக்கிவிடக் கூடாது.
இந்த கவனத்துடன் செயல்படும் ஒரு அரசு, அனைத்து துறைகளிலும் இருந்து விவாதங்களை தான் எதிர்கொள்ளும்.இந்தியாவின் சாமான்ய மக்களாகிய நாம், ஜனநாயகத்தின் இந்த விவாத தன்மையை புரிந்து கொள்ளவில்லை. எனவே, யார் மூர்க்கமாகவும் தீவிரமாகவும் பேசுகிறார்களோ, அவர்களே வலிமையான தலைவர் என்று எண்ணுகிறோம். 
எவருக்கு தன் கட்சிக்குள்ளும் அரசுக்குள்ளும் மாற்றுக் குரலே எழவில்லையோ, அவரே அனைத்தையும் சாதிக்கும் திறனுடையவர் என்று எண்ணுகிறோம். இங்கிருந்து தான் பிரச்சினைகள் 
ஆரம்பமாகின்றன.
இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி, ஒப்பு நோக்க, ஜனநாயக குணம் கொண்டவராக இருந்தார். அவரது அரசில், அவருக்கு நிகரான அதிகாரத்துடன், அருண் நேரு, அருண் சிங், வி.பி.சிங் ஆகியோர் இருந்தார்கள். சாம் பிட்ரோடா போன்ற தொழில்நுட்ப நிபுணர்கள் இருந்தனர்.
அவ்வாட்சி காலத்தில் தான், இந்திரா காந்தி காலத்தின் தேக்க நிலையிலிருந்து, இந்தியா மீள்வதற்கான முயற்சிகள் செய்யப்பட்டன. இன்றுள்ள பொருளாதார வளர்ச்சியின் முதல் அசைவு அப்போது தான் தொடங்கியது.
தமிழகத்தில், அப்படி பலகுரல் தன்மையுடன் இருந்த கடைசி அரசு காமராஜருடையது.
அவரது அரசில், ஆர்.வெங்கட்ராமனும், சி.சுப்ரமணியமும், அவருடன் முரண்பட்டு விவாதிக்கக் கூடியவர்களாக இருந்தனர். தமிழகத்தில், இன்றுள்ள அத்தனை பொருளியல் வளர்ச்சிக்கும் காரணம், காமராஜரின் அந்த அமைச்சரவை செய்த பெரும் அடிப்படை பணிகள் தான்.
ஆக, இந்திய வரலாறு நமக்கு காட்டுவது இது, எப்போது ஓர் அரசிலும், கட்சியிலும் வலுவான மாற்றுக்குரல்களுக்கு இடமிருக்கிறதோ, தொடர்ந்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறதோ, அப்போது தான் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகிறது. 
ஒற்றைக்குரல் என்பது கட்டுப்பாடு அல்ல. அதை உருவாக்குவது நிர்வாகத்திறன் அல்ல. உண்மையில், நிர்வாகத்திறன் இல்லாத ஒருவர், பயந்து போய், தன் எதிரிகளை அடக்கி வைத்திருப்பது தான் அது. ஜனநாயகம் விவாதங்களால் மட்டுமே செயல்பட முடியும்.

கட்டுரையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com 
www.jeyamohan.in

நன்றி : தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1505499