Wednesday, April 20, 2016

ஜனநாயக சோதனை சாலையில்-5: பேச்சுரிமை எது வரை?

  • மார்ச் 24,2016
  •  
  •  
  • சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் நண்பர்களுடன் மலேசியா சென்றிருந்தேன். அங்கு பினாங்கு நகரை சுற்றிப் பார்த்துவிட்டு, கொலாலம்பூருக்கு திரும்பும் வழியில் அப்பகுதியில் இருக்கும் சீன நாட்டு வழிபாட்டிடங்களை பார்த்துவிட்டு செல்லலாம் என்று திட்டமிட்டேன். என்னுடன் வந்த நண்பர் வழக்கறிஞர் கிருஷ்ணன் இந்தியாவிலிருந்தே விரிவான பயணத் திட்டம் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார்.
    ஆனால் அதைச் சொன்னபோது, மலேசியாவில் எங்களுக்குத் துணை வந்த ஓட்டுநர் பதறிப்போய் ''இல்லை நான் வரமாட்டேன். பினாங்கு கொலாலம்பூருக்கு மையச்சாலை வழி உள்ளது அதன் வழியாகத்தான் வருவேன்'' என்றார். ''ஏன்? நாங்கள் வந்ததே இந்தப்பகுதிகளை சுற்றிப்பார்க்கத்தானே? எதற்காகப் பயப்படுகிறீர்கள்?'' என்றோம். ''இல்லை அதற்கு நீங்கள் முன்னரே அனுமதி பெறவில்லை'' என்றார் அவர்
    ''சரி, நாங்கள் அனுமதி பெறுகிறோம். அதற்கு என்ன செய்ய வேண்டும்?'' என்றோம். மலேசியாவில் உள்ள சுற்றுலா மையத்தில் எழுதிக் கொடுத்தால் அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்றார் ஓட்டுநர். ஆவணங்களை அளித்து, முறைப்படி அனுமதி பெற்றோம். ஆனால் அப்போதும் ஓட்டுநரும், அவருடன் வந்த மலேசிய குடிமக்களான இரு நண்பர்களும் பதறிக் கொண்டே வந்தனர். அவர்களில் ஒருவர் தொலைபேசியில் மலேசிய அரசின் நிர்வாகத் துறையினர் பலரிடம் பேசியபின் வந்து சற்றே நிம்மதி பெற்றவராக ''சரி, நாங்களும் வருகிறோம்'' என்றார்.
    ''சரி, என்ன செய்தீர்கள்?'' என்று கேட்டேன். மலேசியாவின் நிர்வாக மேல்மட்ட குழுவில் உள்ள ஒருவரிடம் பேசியதாகவும், நாங்கள் செல்லுமிடங்கள் அனைத்திலும் இந்தியக் கடவுச்சீட்டு எண்களை பதிவு செய்தபடிச் செல்லலாம் என்றும், நாளை ஏதாவது விசாரணை வந்தால் அவர்கள் எங்களுக்கு துணை வந்ததாக எழுதிக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அலுவலகத்தில் ஆலோசனை சொல்லப்பட்டதாக சொன்னார் மலேசிய நண்பர்.
    வியப்பாக இருந்தது. ''எதற்காக இத்தனை தூரம் அஞ்சுகிறீர்கள்?'' என்றேன். ''நாங்கள் செல்லும் அனைத்து பயணங்களும் எங்கெங்கோ பதிவாகும். வழக்கத்துக்கு மாறான இந்தப் பாதையில் நாங்கள் ஏன் சென்றோம் என்ற கேள்வி எப்போது வேண்டுமானாலும் எழக்கூடும். அதற்கு நாங்கள் எழுத்து மூலமாக ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். இல்லையேல் ஆபத்து'' என்றார் அந்நண்பர்.
    காரில் செல்லும்போது நண்பர் கிருஷ்ணன், ''என்னிடம் ஜனநாயகம் என்றால் என்ன என்று இப்போதுதான் தெரிகிறது சார்'' என்று முணுமுணுத்தார்.இந்தியாவில் நாங்கள் பல பயணங்களை செய்திருக்கிறோம். ஒரு முறை சென்னையிலிருந்து கிளம்பி காரில் எட்டாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து, காசி வழியாக கல்கத்தா சென்று, விசாகப்பட்டினம் வழியாக சென்னைக்கே திரும்பி வந்தோம். சென்னையை விட்டு கிளம்பும்போது ஒரு காவலர் எங்கள் ஓட்டுநர் உரிமத்தை சோதனை செய்து அனுப்பினார். திரும்பி நள்ளிரவில் சென்னைக்கு வந்தபோது ஒரு காவலர் ''எங்கிருந்து வருகிறீர்கள்?'' என்று கேட்டார். நடுவே ஒரு சோதனை கூட கிடையாது. ஓர் இடத்தில் கூட நாங்கள் தடுத்து நிறுத்தப்படவில்லை.
    இந்த சிறிய சோதனைகள்கூட சென்ற இருபதாண்டுகளாகத்தான். தீவிரவாதம் உருவானபின்னர் ஏற்பட்ட விழிப்புணர்வு இது. என் இளமைப்பருவத்தில் நான் வீட்டை விட்டுக் கிளம்பி மாதக்கணக்கில் இந்தியாவில் அலைந்து திரும்பியிருக்கிறேன். எங்கும் எந்த கேள்வியும் கேட்கப்பட்டதில்லை. முற்றிலும் அந்நியனாக புதிய கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள மக்களுடன் அவர்கள் வீட்டிலேயே தங்கி, ஏதாவது வேலை செய்து சாப்பிட்டுவிட்டு மறுபடியும் கிளம்பி சென்றிருக்கிறேன். அந்நியர்களை இன்முகத்துடன் வரவேற்பதும், அவர்களை நண்பர்களாக நினைப்பதும் இந்தியாவின் பண்பாடாக இருக்கிறது. இன்னமும் கூட இந்தியாவின் பெரும்பாலான கிராமப்பகுதிகளில் மனநிலை அது. அந்த மனநிலை தான் இந்தியாவின் ஜனநாயகத்துக்கு அடித்தளமாக இருந்து கொண்டிருக்கிறது.
    ஒரு ஜனநாயக நாட்டில் பிறந்து வளர்ந்த நமக்கு உண்மையில் நாம் அடைந்திருப்பது என்ன என்றே தெரியாது. அரசியல் சட்டம் அளித்திருக்கிற நடமாட்ட உரிமை என்பது எவ்வளவு அபூர்வமான செல்வம் என்பதை நாம் உணர்வதில்லை. நம்மைச் சூழ்ந்துள்ள ஜனநாயகம் இல்லாத நாடுகளுக்கு செல்லும்போது தான் அங்குள்ள ஒவ்வொரு மனிதரும் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுவதைக் காண்கிறோம். ஒரு மேடையில் பேசுவதற்கு முன்பு முறையாக அனுமதி வாங்கியிருக்கவேண்டும். நாம் பேசுவது ஒவ்வொன்றும் பதிவாகி ஆவணப்படுத்தப்படும். அதற்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். எப்போது விசாரித்தாலும் அதை நாம் விளக்கவேண்டும்.
    பலநாடுகளில் நம்மை எப்போது வேண்டுமானாலும், எந்த வினாவும் இன்றி, சிறைப்படுத்த முடியும். அச்சம் ஒரு மிகப்பெரிய பாரமாக ஒவ்வொருவர் மேலும் ஏறி அமர்ந்திருக்கிறது அங்கெல்லாம். சிங்கப்பூரில் ஒரு தேசியப் பறவைப் பூங்கா உள்ளது. அங்கு ஒரு குட்டிக் காட்டை உருவாக்கி அதில் ஏராளமான பறவைகளை விட்டிருக்கிறார்கள். அந்தக் காட்டை முழுக்க மூடியபடி மிகப்பெரிய வலை ஒன்று வானத்தில் இருக்கும். ஆகவே பறவைகள் அங்கிருந்து எங்கும் செல்ல முடியாது. சிங்கப்பூரின் ஜனநாயகமும் சுதந்திரமும் அதைப்போலத்தான். வானம் உண்டு; ஆனால் அங்கு செல்ல முடியாது.
    இந்தியா பேச்சுரிமைக்கு, எழுத்துரிமைக்கு, சிந்தனை உரிமைக்கு அளித்துள்ள சுதந்திரத்திற்கு சமானமான சுதந்திரம் இன்று உலகத்தின் எந்த நாட்டிலும் கிடையாது. ஜனநாயகம் என்பதை உருவாக்கி நமக்கு அளித்த நாடுகளான பிரான்ஸிலோ, அமெரிக்காவிலோ கூட இதற்கிணையான சுதந்திரம் இல்லை. அதை அந்நாடுகளில் சென்றவர்கள் உணரமுடியும். அமெரிக்காவில் ஒருமுறை நான் பேச்சுவாக்கில் 'பாம்ப் பிளாஸ்ட்' என்றேன். உடனிருந்த நண்பர் ''குண்டுவெடிப்பு என்று தமிழில் சொல்லுங்கள். இங்கே எங்கு வேண்டுமானாலும் ஒலிகளைப் பதிவுசெய்யும் வசதி இருக்கும். இச்சொல்லை வைத்தே நம்மை பிடித்து விசாரிப்பார்கள்” என்று பயத்துடன் சொன்னார்.
    இந்த சுதந்திரம் நமக்கு நமது அரசியல் முன்னோடிகளால் அளிக்கப்பட்டது. எந்த சுதந்திரமும் ஒரு பெரிய பொறுப்பும்கூட. சுதந்திரம் என்பது ஒர் அரிய கருவி. இந்தச் சுதந்திரத்தை நம்மை நாமே கடுமையாக விமர்சித்துக் கொள்ளவும், அதன் வழியாக நம்மை மேம்படுத்திக் கொள்ளவும் நாம் பயன்படுத்தும் போதுதான் அது அர்த்தப்படுகிறது.
    நம் இந்தியச் சமூகம் மிகச்சிக்கலான பல்வேறு உள் அடுக்குகள் கொண்டது. அனைத்தையும் பற்றி நாம் வெளிப்படையாக பேசும் போதுதான் நமக்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது என்பது வெளிவரும். ஆகவே தான் எதையும் பேசக்கூடிய ஒரு உரிமையை நமக்கு அளித்தார்கள் முன்னோர்.
    அது நம்மை நாமே அழித்துக் கொள்ளும் பேச்சுக்களை பேசுவதற்காக அல்ல. நமது தேசத்திற்கும் சமூகத்திற்கும் எதிரிகளை நம்மிடையே ஊடுருவ விடுவதற்கான உரிமை அல்ல அது.
    இன்று இந்தியாவில் பேச்சுரிமை, கருத்துரிமை என்பது இந்தியாவை அழிப்பதற்கான பேச்சுகளை பேசும் உரிமை என்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது, பேச்சுரிமையை நமக்களித்த முன்னோடிகளுக்கு மிகப்பெரிய அவமதிப்பு அன்றி வேறல்ல. பொறுப்பற்ற உரிமை என்பது போல அழிவை அளிப்பது வேறொன்றும் இல்லை.
    இப்போது தேர்தல் களம். இது எல்லாவகையான கருத்து செயல்பாடுகளும் மேடைக்கு வந்து தங்கள் தரப்பை சொல்வதற்கான ஒரு தருணம். ஒவ்வொரு நாளும் ஒரு கருத்துக் குரலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவையனைத்தும் ஒலிக்க வேண்டியது அவசியம். பல குரல்கள் ஒலிப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம். ஆனால் அவற்றின் நடுவே ''இந்தியா ஒழிக! இந்திய சமுதாயம் அழிக!'' என்று ஒரு குரல் வருமென்றால் அங்கு நாம் பேச்சுரிமையை முன்னிறுத்தவில்லை என்றும் அவ்வுரிமையை நமக்களித்த முன்னோடிகளின் நெஞ்சில் நமது வாளைப் பாய்ச்சுகிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
    ஜெயமோகன்
    கட்டுரையாளர், எழுத்தாளர்
    தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com
    www.jeyamohan.in
    நன்றி : தினமலர் http://election.dinamalar.com/detail.php?id=5476

    No comments:

    Post a Comment