Thursday, April 21, 2016

ஜனநாயகச் சோதனைச்சாலையில்-28: குருதியோட்டத்தில் இணைவது

பதிவு செய்த நாள்

17ஏப்
2016 
03:32

சில வருடங்களுக்கு முன்பு கேரளத்தில் ஒரு கட்டுமான பணியிடத்திற்கு மேற்கு வங்காளத்தில் இருந்து, கூலி தொழிலாளர்கள் ரயிலில் அழைத்து வரப்பட்டனர். ரயில் நிலையத்தை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் முற்றுகையிட்டு, அந்த கூலி தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்படவேண்டும் என்று, கோஷமிட்டனர்.செய்தியாளர்களிடம் பேசிய அவர்களின் தலைவர், 'மேற்கு வங்காளத்தை இழிவு செய்வதற்கும், அதன் வழியாக, கம்யூனிச ஆட்சியை இழிவு செய்வதற்கும், திட்டமிட்டு பொய்யாக வரவழைக்கப்பட்டவர்கள் இவர்கள்' என்று குற்றம் சாட்டினார்.ஆனால், மேலும் மேலும் கூலித் தொழிலாளர்கள் கேரளத்திற்கு வந்து
கொண்டே இருந்தனர்.

கட்டுமானம், ஓட்டல், வீட்டுப் பணியாளர் ஆகிய மூன்று தளங்களிலும் கேரளத்தில் ஏராளமான ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். ஏறத்தாழ 7 லட்சம் தமிழ் தொழிலாளர் அங்கிருக்கின்றனர்.சில பஞ்சாயத்துக்களே தமிழர்களால் நிறைந்து, அ.தி.மு.க., ஆட்சியில் இருக்கின்றன. இப்போது, சட்டமன்ற தேர்தலில், பல தொகுதிகளில், தமிழ் தொழிலாளர்களை நம்பி அ.தி.மு.க., வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இரண்டாவது மொழி:மேற்கு வங்க தொழிலாளர்கள் கிட்டத்தட்ட நான்கு லட்சத்துக்கு மேல் பணியாற்றுவதாக சொல்லப்படுகிறது. சில ஊர்களில், வங்கமொழி செய்தி தாள்களையும், வார இதழ்களையும் கூட பார்க்க முடிகிறது. சில ஊர்களில், அரசு பள்ளிகளில் வங்கமொழி இரண்டாவது மொழியாக கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுக்க பயணம் செய்யும் அனுபவமுள்ள ஒரு பயணி, எந்த மாநிலம் வளர்கிறது தேய்கிறது என்று, எளிதில் கண்டு கொள்ள முடியும். ஒரு சாலையில் சாதாரணமாக சென்றாலே, சாலை ஓரத்து உணவகங்கள் தரமானவையாகவும் வசதியாகவும் இருந்தால், அங்கு சாலை போக்குவரத்து மிகுந்திருக்கிறது என்று பொருள். அது பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டும்.எதிரே வரும் வண்டிகளில் எத்தனை வண்டிகள் வீட்டு கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்கின்றன என்பதை பார்த்தால், அங்கு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதை, சொல்ல முடியும்.

ஒரு சின்ன கிராமத்தில், பொது பொருட்கள் விற்கும் கடையில் என்னென்ன பொருட்கள் விற்கப்படுகின்றன என்று பார்த்தால், அங்குள்ள மக்களின் நுகர்வின் தரம் தெரியவரும்.
ஆந்திரம், கேரளம், தமிழகம் போன்ற தென் மாநிலங்கள் சீரான வளர்ச்சியை காட்டுகின்றன. கர்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் சில பகுதிகளில் வளர்ச்சியும், சில பகுதிகளில் தேக்க நிலையும் காணப்படும். குஜராத்தில் பழங்குடி பகுதிகளில் குறைவான வளர்ச்சியும், நகர்ப்புறங்களில் பெரிய வளர்ச்சியும் இருக்கும்.
ஒரிசா, பத்தாண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய தேக்க நிலையிலிருந்து வியப்பூட்டும் படி மேலெழுந்து வந்து கொண்டிருக்கிறது. பீகாரிலும் மாற்றங்கள் உள்ளன.

எந்த வளர்ச்சியோ மாற்றமோ இல்லாத மாநிலம் என்பது உத்திர பிரதேசம். அதற்கு ஒரு படி கீழாக மேற்கு வங்காளம் உள்ளது. கல்கத்தாவை தவிர, மேற்கு வங்காளத்தில் எங்குமே, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் ஒரு சாயலையும் பார்க்க முடியாது. சதுப்புகள் நடுவே பழமையான வீடுகள் தென்படும். ஒரு கிராமத்தின் முச்சந்தியில், அழுக்கில்லாத உடையணிந்த ஒருவரை பார்ப்பதே வங்காளத்தில் அரிது.

ஒருமுறை, வங்க சிறுநகர் ஒன்றில், ஒரு பெண்மணி எங்களுக்கு சோளக் கொண்டைகளை விற்க வந்தாள். ஒரு சோளக்கதிர் பத்து ரூபாய் என்றாள். எதுவரை அவள் இறங்கி வருகிறாள் என்று பார்ப்பதற்காக, நாங்கள் வண்டியை சற்று நிறுத்தி, ''மூன்று கதிரும் பத்து ரூபாய்க்கு கொடு,'' என்றோம்.

அவள் கொடுக்க முன்வந்தாள். மேலும் வண்டியை நிறுத்தி, ''ஒரு கதிர் ஒரு ரூபாய்க்கு கொடு,'' என்று கேட்டோம். சற்று தயங்கியபின் அதற்கும் அவள் இறங்கினாள்.அங்கு, நாங்கள் ஏழு பேர் தங்குவதற்கு, இரண்டு இரட்டை அறைகளும் ஒரு தனி அறையுமாக சேர்த்து, ஐநூறு ரூபாய்க்கு அறை போட்டோம். அந்த விடுதிக்காரரிடம், ''ஏன் இவ்வளவு குறைவாக கிடைக்கிறது?'' என்று கேட்டோம். ''அந்த சோளக் கொண்டைக்காரி, அந்த சோளக்கொண்டைகளை விற்று பணமாக்குவது அவ்வளவு கடினமானது. இந்த விடுதியில் இன்றைக்கு நீங்கள் மட்டும் தான் தங்கியிருக்கிறீர்கள். குறைந்த பட்சம் இந்த மின் கட்டணத்தையாவது உங்களிடம் இருந்து வாங்கிவிட முடியுமல்லவா?'' என்றார்.
வங்காளத்தின் தேக்கநிலைக்கு என்ன காரணம்? முதன்மையாக அங்கு தொழிலாளர் பிரச்னை உள்ளது என்பதே. அரசே தொழிற்சங்கங்களை ஆதரிப்பதும், தொழிற்சங்க தலைவர்கள் தொழில்களை கட்டுப்படுத்த முயல்வதும், அங்கே தொழில்கள் வளராமல் செய்துள்ளன. கிழக்கு வங்காளத்தின் அகதிகள் வந்து குவிந்து கொண்டே இருப்பது பிறிதொரு சிக்கல்.

உறவு துண்டிப்பு:ஆனால், இதற்கு அனைத்துக்கும் மேலான பிரச்னை என்பது, வங்காளம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது தான். வங்காளத்துக்கும் பிற மாநிலங்களுக்குமான உறவு மிக குறைவு. வங்காளிகள் ஒரிசாவிலும், அசாமிலும், வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் குடியேறி மிக வலுவான வணிக சமுதாயம் இருந்தும் கூட, மேற்கு வங்காளம், அதனுடைய இடதுசாரி அரசியல் காரணமாக பிற மாநிலங்களுடனான உறவை மிகவும் துண்டித்துக் கொண்டது.

மேற்கு வங்காளத்தின் கிராமங்களில் வங்காளி அல்லாத ஒருவரை பார்ப்பதே மிக குறைவு.
ஒரு மாநிலத்தில், பிற பகுதியினர் வந்து செல்வது என்பது, நுரையீரலுக்குள் மூச்சு செல்வது போல. அதுதான் வணிக வளர்ச்சியாக மாறுகிறது. கொண்டும் கொடுத்தும் தான் ஒரு பொருளியல் வளரமுடியும். எந்த ஒரு அரசியலாக இருக்கட்டும், அது வணிகத்தின் மூச்சு ஓடிக்கொண்டிருக்க உதவவேண்டும். வங்காளத்தில் நெடுங்காலமாகவே ஒருவகை வங்கமேட்டிமைவாதம் இருந்தது. தாங்கள் ஒருவகையில் அத்தனை இந்தியர்களை விடவும் மேலானவர்கள் என்னும் தோரணையை, பொதுவாக வங்காளிகளிடம் பார்க்கலாம்.இந்திய சுதந்திர போராட்டத்தின் நெடுந்துாண்களில் ஒருவராகிய சுரேந்திரநாத் பானர்ஜி போன்றவர்களே வங்க மேலாதிக்க மேட்டிமைவாதத்திற்கு ஆட்பட்டு, மெல்ல அரசியலில் ஓரங்கட்டப் பட்டவர்கள் தான். அன்று முதல் இன்றுவரை, வங்காளத்தின் அரசியல்வாதிகள் அனைவரின் வரலாற்றிலும், தான் வங்காளி என்னும் அகந்தையாலேயே தனிமைப்பட்டு விலகி வீழ்ச்சியடையும் ஒரு சித்திரத்தைக் காணலாம். இந்தியாவின் மையப்போக்கு அரசியலை வங்காளிகள் எப்போதும் நிராகரித்துக் கொண்டிருந்தனர். தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு, ஒரு சின்ன தனி சமுதாயமாக வாழ்ந்தனர்.
இந்த மனநிலை காரணமாக, வங்காளம் தன்னை துண்டித்துக் கொண்டு, பொருளியலில் தேக்கமடைந்துவிட்டது. இதை உடைப்பதற்காக, சில முயற்சிகளை, கடந்த பத்தாண்டுகளாக, அங்குள்ள இடதுசாரிகள் எடுத்தனர். அவர்களுக்கு எதிராக எழுந்த மம்தா பானர்ஜி, மீண்டும் வங்க மேட்டிமைவாதம் பேசி, அம்முயற்சிகளை உடைத்தார். அந்த மக்கள், இன்னும் இந்தியாவின் மைய ஓட்டத்துடன் கலந்து, வெற்றியும் வளர்ச்சியும் சாத்தியமாகாமல் இருக்கின்றனர். அதேசமயம் கூலி வேலை தேடி இந்தியா முழுக்க அலைகின்றனர், ஏழை வங்காளிகள்.

ரத்த ஓட்டம்:எனது நண்பர் ஒருவரின் அலுவலகத்தில், இந்தியாவின் லாரி போக்குவரத்தைக் காட்டும் ஒரு மின்னணு வரைபடம் உண்டு. இந்தியாவில் அனைத்து சாலைகளும், அவற்றில் ஓடும் லாரிகளும் ஒரு சாட்டிலைட் வரைபடத்தில் ஒளிவிட்டுக் கொண்டிருக்கும். இரவு நேரத்தில் அதை பார்க்கும்போது, ஒரு MRI ஸ்கேன் திரையில், உடலில் ஓடும் ரத்த ஓட்டத்தை பார்ப்பது போலிருக்கும்.

இந்தியா முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் இந்த பல்லாயிரக்கணக்கான லாரிகள் இந்தியாவின் ரத்தம். அந்த லாரிகளில் கணிசமானவை நாமக்கல்லையும், கரூரையும் சார்ந்தவை என்பது தான், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம்.

நாகாலாந்திலோ காஷ்மீரிலோ நின்று, சாலையில் செல்லும் லாரிகளைப் பார்த்தால் ஐந்தில் ஒரு லாரி தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டதாக இருக்கிறது. அந்த லாரிகள் ஒவ்வொன்றும், அங்கிருந்து நமக்கு செல்வத்தைக் கொண்டு வந்தபடியே இருக்கின்றன. இந்தியாவின் மிக வெற்றிகரமான தொழில் துறைகளில் ஒன்றாக தமிழகம் இருப்பதற்கான காரணம், நாம் இந்திய பெருநிலத்துடன் கொண்டுள்ள இந்த உறவு தான்.

உடலின் ஒரு பகுதி ரத்த ஓட்டத்திலிருந்து துண்டித்துக் கொண்டால், அது காலப்போக்கில் அழுகிப் போவதைப் போல தான் வங்கமும் மாறிக் கொண்டிருக்கிறது. நம்முன் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் ரத்த ஓட்டத்தில் கலந்து, அதன் இதயதுடிப்பை வாங்கிக்கொள்வது. அதன் வழியாக வளர்வது. அல்லது வங்காளம் போல துடித்துத் துண்டித்துக் கொள்வது.
நம்மிடம் அரசியல் பேசும் ஒருவர், துடித்துத் துண்டித்து அழியும் அரசியலை சொல்கிறாரா, இணைந்து வளரும் அரசியலை பேசுகிறாரா என்பது மிகவும் முக்கியமானது.

ஜெயமோகன்,கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com
www.jeyamohan.in
நன்றி : தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1503332

No comments:

Post a Comment