Monday, May 9, 2016

அரசியல் பழகு: சொல் அல்ல ஜனநாயகம்! -சமஸ்



திருச்சியில் செய்தியாளராக இருந்தபோது, குல்சும் பீபியைச் சந்தித்தேன். 116 வயது மூதாட்டி. நாட்டிலேயே அதிக வயதானவராக இருந்த அவருக்கான வாக்காளர் அட்டையை அன்றைய ஆட்சியர் நந்தகிஷோர் நேரில் சென்று வழங்கினார். நான் கேள்விப்பட்டு சென்றபோது நத்தர்ஷா பள்ளிவாசலில் குல்சும் பீபி இருப்பதாகச் சொன்னார்கள். பழமையான அந்தப் பள்ளிவாசலின் வாயிலில் யாசகம் பெறுபவராக அந்த மூதாட்டி அமர்ந்திருந்தார். ஒரு ஆச்சரியமான விஷயம், எல்லாத் தேர்தல்களிலும் அவர் தவறாமல் வாக்களித்திருந்தார். குல்சும் பீபி ஆங்கிலேயரின் ஆட்சியைப் பற்றி விவரிக்கையில் சொன்னார், “வெள்ளைக்காரங்க ஆட்சியை, முழுக்கவுமே குறையாச் சொல்லிற முடியாது. என்ன மாதிரி ஒரு ஏழைப்பட்ட முஸ்லிம் பெண் அந்தக் காலத்திலேயே பள்ளிக்கூடம் போய்ப் படிக்க முடிஞ்சுதுன்னா, அது வெள்ளைக்காரங்க வராட்டினா இங்க நடந்திருக்குமா?”
இந்தியக் கல்வி முறையை மாற்றியமைத்த ஆங்கிலேயர் மெக்காலேவை தலித் மக்கள் வழிபடும் கோயில் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் இருப்பதை அங்கு சென்றிருந்தபோது ஒரு நண்பர் சொன்னார். ஆங்கிலேயர் ஆட்சி, மிகப் பெரிய சுரண்டலையும் ஊழலையும் பல கோடிப் பேரைக் கொன்றழித்த பஞ்சங்களையும் இந்தியா மீது திணித்த ஆட்சி என்பதில் சந்தேகமே இல்லை. அதேசமயம், எந்த ஆட்சியாளரையும் ஒரே கண் கொண்டு மட்டுமே பார்க்க முடியாது. இந்நாட்டில் ஜனநாயக விதைகள் விழுந்ததில் மிக முக்கியமான பங்கு பிரிட்டிஷ் ஆட்சிக்கு உண்டு.
நவீன இந்தியா எனும் கருத்தாக்கம், இன்றைய நவீனக் கல்வி, நவீன ஆட்சி அமைப்பு, நீதி நிர்வாகப் பரிபாலன முறை, மக்களுக்கும் அரசுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றப் பாலங்களாக அமைந்திருக்கும் ஊடகங்கள் இவை யாவும் பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவுகளில் நாம் பெற்றவை. இந்திய ஜனநாயகத்தின் முப்பெரும் சிற்பிகளான காந்தி, நேரு, அம்பேத்கர் மூவருமே பிரிட்டிஷ் சிந்தனையால் தாக்கம் பெற்றவர்கள். இந்தியாவில் ஜனநாயகக் கட்டமைப்புக்கான செயலூக்கத்தை அவர்கள் பிரிட்டிஷாரிடமிருந்தே பெற்றார்கள். எதிரியாக அல்ல; மாற்றுத் தரப்பாக அவர்களை ஜனநாயக முறையில் அணுகியே நாம் சுதந்திரம் பெற்றோம்.
நிலப்பரப்பு, காலநிலை, தட்பவெப்ப வேறுபாடுகள்; இன, மத, சாதி வேறுபாடுகள்; உணவு, உடை, மொழி, கலாச்சார வேறுபாடுகள் எனப் பல நூறு சிறுபான்மை இனக் குழுக்களைக் கொண்ட தொகுப்பே இந்தியா. காந்தி இந்திய அரசியல் அரங்கில் அடியெடுத்து வைத்த காலத்தில், கிட்டத்தட்ட நூற்றுக்கு தொண்ணூறுக்கும் மேற்பட்டோர் ‘அரசியல் என்றால் என்ன?’ என்று கேள்வி கேட்கக் கூடியவர்கள். அதிகாரத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாமலிருந்தவர்கள். இவர்களுக்கு ஜனநாயகக் கல்வியை எப்படிக் கற்றுக்கொடுப்பது?
போராட்டங்கள் என்றாலே முகம் சுளிக்கும் ஒரு தலைமுறையை இன்றைக்குப் பார்க்கிறோம். மாணவர் சங்கங்களை, தொழிற்சங்கங்களை இழிவாகவும், வளர்ச்சிக்கு எதிரான அமைப்புகளாகவும் பேசுவதைப் பார்க்கிறோம். உண்மையில் ஜனநாயகக் கல்வி, அங்கிருந்தே தொடங்குகிறது. போராட்டங்களும் சங்கக் கூட்டங்களுமே மக்களை அணிதிரட்டுவதற்கான களங்கள். ‘நீ தனிநபர் அல்ல; உன்னைப் போல் எதிர்த்துப் போராட ஒரு படையே இருக்கிறது’ என்பதைக் கற்பிப்பதற்கான வகுப்பறைகள். காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய மூன்று பெரும் போராட்டங்களே இந்நாட்டின் கோடிக்கணக்கான எளிய மக்களுக்குப் பெருமளவில் அரசியலையும் ஜனநாயகத்தையும் கற்றுக்கொடுத்த போராட்டக் களங்கள்.
காந்தி, நேரு, அம்பேத்கர் இந்த மூவருக்கும் இடையில் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தன. இன்றைக்கு இந்த வேறுபாடுகளை மட்டும் பேசி, மூவரையும் துருவ எதிரிகளாகப் பிரித்துக் கும்மியடிக்கும் ஒரு வெறுப்புக் கூட்டமே இருக்கிறது. உண்மையில், ஆத்மசுத்தியோடு ஜனநாயகத்தை அணுகுபவர்களால் இந்த மூன்று ஆளுமைகளையும் புறந்தள்ளிவிட்டு இந்தியாவில் ஜனநாயகத்தைப் பற்றிப் பேச முடியாது. மூவருமே பல நூறு மேடைகளில் பேசியவர்கள்; பல்லாயிரக் கணக்கான பக்கங்களை எழுதியவர்கள். பரஸ்பர மரியாதையை எங்கே காட்ட வேண்டும், பரஸ்பர கருத்து முரண்பாடுகளை எங்கே காட்ட வேண்டும் எனும் ஜனநாயகக் கல்வியைத் தம் வாழ்வின் மூலம் நமக்குச் சொல்லிக்கொடுத்தவர்கள்.
காந்தியின் அடிப்படைக் கனவு இந்தியா கிராமங்களில் வாழ வேண்டும் என்பது. அம்பேத்கர் நேரெதிர் கருத்தைக் கொண்டிருந்தார். கிராமங்களைக் குறுகிய எண்ணங்கள் ஊறிய சாக்கடைகளாகவும் சாதியமும் அறியாமையும் நிறைந்த இருட்டுக் குகைகளாகவும் பார்த்தார் அம்பேத்கர். “விலங்குகளைப் போல் மனிதன் வாழ்வதிலிருந்து அவனை விடுவிக்க இயந்திரங்களும், நவீன சமூக அமைப்பும் மிக அடிப்படையானவை” என்றார் அவர்.
நேருவுக்கும், அம்பேத்கருக்கும் இதில் பெரிய வேறுபாடு இல்லை. 1930-ல் எழுதிய சுயசரிதையிலேயே நேரு குறிப்பிடுகிறார். “நகர நாகரிக வசதிகள் யாவையும் கிராமத்தவர்களுக்கும் பரவச் செய்ய வேண்டும் என்பதே என் ஆசை… ஏர் உழும் மனிதனை வானில் வைத்துப் பாராட்டுவதற்கு என்ன இருக்கிறது? எண்ணற்ற தலைமுறைகளாக அவன் நசுக்கப்பட்டிருக்கிறான். பல காலமாக அவனைச் சுரண்டிக்கொண்டே வந்திருக்கிறார்கள். அவனுக்கும் அவனோடு வாழும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது!”
காந்தியோ கடைசி வரை தன் கருத்தில் உறுதியாக இருந்தார். 1945, அக்டோபர் 5 அன்று நேருவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்: “இந்தியா உண்மையான விடுதலை பெற வேண்டுமாயின், இந்தியாவின் வாயிலாக உலகம் மெய்யான சுதந்திரம் காண வேண்டுமாயின், விரைவாகவோ அல்லது பின்னரோ கிராமங்களிலேதான் நாம் வாழ வேண்டிவரும். நகரங்களில் அல்ல… எளிமையான கிராம வாழ்க்கையில் மாத்திரம்தான் சத்தியத்தையும் அகிம்சையையும் நாம் நடைமுறையில் கொண்டுவர முடியும்... இன்று உலகம் தவறான வழியில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்து நாம் அஞ்சக் கூடாது... நான் கனவு காணும் தலைசிறந்த கிராமத்தில் கிராம மக்கள் மதியீனர்களாக இருக்க மாட்டார்கள்; புத்திசாலிகளாகவும் எழுச்சிகரமாகவும் இருப்பார்கள்; மிருகங்களைப் போல் புழுதியிலும் இருளிலும் உழல மாட்டார்கள்; அங்கே ஆண்களும் பெண்களும் சுதந்திரர்களாக இருப்பார்கள்; உலகிலுள்ள எவருக்கும் எவ்விதத்திலும் சரிநிகர் சமானமானவர்களாக இருப்பார்கள்!”
காந்திதான் இந்தியா என்று கருதப்பட்ட காலம் அது. காந்தியின் அடிப்படைக் கனவிலிருந்தே முரண்பட்ட இரு ஆளுமைகள்தான் சுதந்திர இந்தியாவைக் கட்டியமைத்தார்கள். நவீனராகக் கருதப்பட்ட நேருவே காந்தியின் அரசியல் வாரிசானார். கால் நூற்றாண்டு காலம் காந்தியைக் கடுமையாக விமர்சித்த அம்பேத்கரே இந்திய அரசியல் சட்டத்தின் தந்தையானார்.
சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில், காந்தியையும் காங்கிரஸையும் கடுமையாக எதிர்த்த மூவர் முக்கிய இடங்களில் இடம்பெற்றிருந்தார்கள். முதலாமவர் அம்பேத்கர் சட்ட அமைச்சர். பட்டியல் சாதியினர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர். இரண்டாமவர் ஷியாமா பிரசாத் முகர்ஜி தொழில் துறை அமைச்சர். அன்றைய இந்து மகா சபையைச் சேர்ந்தவர், இன்றைய பாஜகவின் தாயான ஜனசங்கத்தை நிறுவியவர். மூன்றாமவர் பல்தேவ் சிங் பாதுகாப்புத் துறை அமைச்சர். சீக்கியர்களின் பந்திக் கட்சியைச் சேர்ந்தவர். எப்படி இவர்கள் அமைச்சரவைக்குள் வந்தார்கள்?
டெல்லியில் இன்றளவும் நினைவுகூரப்படும் கதை இது. சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவைப் பட்டியல் காந்தியின் கைக்குப் போகிறது. பட்டியல் முழுக்க காங்கிரஸ்காரர்களின் பெயர்கள். காந்தி பட்டியலைத் திருப்பிக் கொடுத்துவிட்டுச் சொன்னாராம், “சுதந்திரம் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல!”
(பழகுவோம்..)
-சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
நன்றி:தி இந்து May 9, 2016

அரசியல் பழகு: தண்ணீர் விட்டா வளர்த்தார்கள்? -சமஸ்

டெல்லியிலுள்ள லால் பகதூர் சாஸ்திரியின் நினைவில்லத்தில், ஒரு கண்ணாடிப் பேழைக்குள் விரலளவு கொண்ட சின்ன டம்ளர் ஒன்றை வைத்திருந்தார்கள். உடன் வந்த நினைவில்லக் காப்பாளர் அதன் வரலாற்றைச் சொன்னார். “இது சாஸ்திரியிடம் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற அவருடைய மனைவி லலிதா வாங்கிய டம்ளர். சுதந்திரப் போராட்டக் காலத்தில் சாஸ்திரி சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே ஏழ்மையான பின்னணியைக் கொண்ட அவருடைய குடும்பத்தை சாஸ்திரியின் சிறைவாசம் மேலும் வறுமையில் தள்ளியது. சிறையிலிருந்த சாஸ்திரியைப் பார்க்க லலிதா சென்றபோது அவர் கடுமையாக மெலிந்திருந்தார். சாஸ்திரி சிறையிலிருந்தபோது குடும்பச் சுமையை ஏற்றிருந்ததோடு போராட்டங்களிலும் ஈடுபட்டுவந்தார் லலிதா. தன் உடல்நலத்தை அவர் எப்போதுமே பொருட்படுத்த மாட்டார் என்பதால், ‘எனக்காக தினமும் ஒரு டம்ளர் பால் மட்டுமாவது நீ சேர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று லலிதாவிடம் உறுதிகேட்டார் சாஸ்திரி. லலிதா உறுதிகொடுத்தார். தினமும் அப்படிப் பால் குடிக்கும் அளவுக்கு வீட்டின் நிதி நிலைமை இல்லை. அதேசமயம், கணவருக்குக் கொடுத்த உறுதியையும் மீறக் கூடாது என்று நினைத்தவர் குழந்தைகள் விளையாட்டுக்குப் பயன்படுத்தும் விரலளவு டம்ளரை வாங்கினார். வீட்டுக்குப் பிள்ளைகளுக்கு டீ போட வாங்கும் கொஞ்சம் பாலில், தன் பங்கை இதில் நிரப்பிக் குடித்தார். அந்த டம்ளரே இது!”
இதை அவர் சொல்லிக்கொண்டிருந்தபோதே, என் கூட நின்று இதைக் கவனித்துக்கொண்டிருந்த ஒரு பெண் அப்படியே அந்த இடத்தில் மண்டியிட்டு வணங்கினார். அந்தக் கண்ணாடிப் பேழையைத் தொட்டு வணங்கியபோது, அவர் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.
நெடுங்காலமாக நிலப்பிரபுத்துவ ஆட்சியின் கீழ் இருந்த இந்த தேசத்தின் மக்கள் ஜனநாயகத்தைச் சுவீகரித்துக்கொண்ட வேகமும் அதற்கு அளித்த உத்வேகமூட்டும் தியாகங்களும் இன்றளவும் உலகின் அரசியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்துவது. இந்தியச் சுதந்திரப் போராட்டமே இந்திய மக்களுக்கு அதற்கான அரசியல் கல்வியை அளித்த மிகப் பெரிய களம். தேசிய ஒற்றுமை, பழமைவாதத் தளைகளிலிருந்து விடுதலை, அறியாமை - வறுமைக்கு எதிரான உரத்த குரல், வர்க்கப் போராட்டம், கடைக்கோடி மனிதருக்குமான அதிகாரம், சுயமரியாதை, சமூக நீதி, பாலின சமத்துவம் இப்படி நாம் இன்றைக்குக் கேட்கும் ஜனநாயகத்தின் பன்மைக் குரல்கள் பலவும் ஏகக் காலத்தில் எழுச்சியும் உந்துதலும் பெற்ற களம் நம்முடைய சுதந்திரப் போராட்டக் களம். பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, ராஜாஜி, முகமது அலி ஜின்னா, பெரியார், ஜவாஹர்லால் நேரு, அம்பேத்கர், ஜெயப்ரகாஷ் நாராயண், பி.சி.ஜோஷி, ராம் மனோகர் லோஹியா இப்படி இன்றைக்கு நினைவுகூரப்படும் பல்வேறு போக்குகளைக் கொண்ட ஆளுமைகளையும் சுதந்திரப் போராட்டக் களமே வெளியே கொண்டுவந்தது. இவர்கள் யாவரும் கூடிக் கொடுத்த கொடையே நம்முடைய இன்றைய ஜனநாயகம்.
காந்தியின் பங்கேற்புக்கு நெடுங்காலம் முன்பே நம்முடைய சுதந்திரப் போராட்டம் தொடங்கிவிட்டது என்றாலும், காந்தியே அதை எழுச்சியான மக்கள் இயக்கமாக உருவாக்கினார். தன் அரசியல் குருவாக காந்தி வரித்துக்கொண்ட கோகலே, காந்தியின் இந்திய வருகைக்குப் பல ஆண்டுகள் முன்னரே இவ்வாறு எழுதினார்: “வருங்கால இந்தியா இந்து இந்தியாவாகவோ முஹம்மதிய இந்தியாவாகவோ இருக்காது. இந்துக்கள், முஸ்லிம்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள் - ஏன் இந்தியாவைத் தம் தாய்நாடாக ஏற்றுக்கொண்ட ஆங்கிலேயர்கள் என அனைத்து மக்கள் அடங்கிய ஒரு நாடாக அது இருக்க வேண்டும்.” இதைச் செயலாக்கிக் காட்டியவர் காந்தி. உலகின் மூன்று வெவ்வேறு புவிசார் அரசியல் பின்னணியைக் கொண்ட கண்டங்களிலும் வாழ்ந்த அனுபவம் கொண்ட காந்தி, தான் உள்வாங்கிக்கொண்ட மேற்கத்திய நவீனச் சிந்தனைகளை இந்தியாவின் தொன்மையான சிந்தனை மரபோடு இணைத்தார். பிராந்தியரீதியாக, மதரீதியாக, மொழிரீதியாக, இனரீதியாக இயங்கிய இந்நாட்டின் மக்கள் ஒரு பொது இலக்கின் கீழ் அணி திரண்டது வரலாற்றில் அதுவே முதல் முறை. பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சம்ஸ்கிருதக் கல்லூரியில், 1885 டிசம்பர் 28 அன்று 72 பேருடன் கூடிய அகில இந்திய காங்கிரஸின் முதல் மாநாட்டுப் புகைப்படம் காந்திக்கு முந்தைய காங்கிரஸின் வரலாற்று முகத்தை ஒரு நொடியில் சொல்லிவிடக் கூடியது. பிரிட்டிஷ் இந்தியாவின் படித்த, உயர்குடி இந்திய வர்க்கத்தின் அதிகாரக் கனவுக்கான மேடை அது. ரொம்பக் காலம் அது அப்படித்தான் இருந்தது. காந்தியின் வருகைக்குப் பின்னரே, இந்நாட்டு எளிய மக்களை அரசியல்மயப்படுத்தி, உலகின் மாபெரும் ஜனநாயக இயக்கமாக அது உருவெடுத்தது.
ஒரு தனிமனிதனின் எழுச்சியை ஒரு மக்கள் இயக்கத்தின் எழுச்சியோடு இணைத்துப் பொருத்த நீண்ட பயிற்சி தேவை. இந்தப் பயிற்சிக்கான களமாக அன்றைக்கு காங்கிரஸை காந்தி மாற்றியிருந்தார். காந்தி செய்த மகத்தான சாதனைகளுள் ஒன்று தன்னைப் பின்னிழுத்துக்கொண்டு சரியானவர்களை முன்னால் கொண்டுவந்தது. ஒரே ஒரு ஆண்டு மட்டுமே அவர் காங்கிரஸின் தலைவராக இருந்தார் (1924). கட்சியில் முதன்முதலில், ஆங்கில ஆதிக்கத்தையும் மத்திய ஆதிக்கத்தையும் ஒழித்து மாநிலங்களில் அவரவர் மொழி வழியே கட்சியைக் கட்டியமைத்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் செல்வாக்குள்ளவர்களைத் தளபதிகளாக்கினார். ஒவ்வொருவருடைய ஆளுமையும் அவரவர் விருப்பங்களுடன் கைகோத்துப் பணிபுரிய வழிவகுத்தார். எல்லாவற்றுக்கும் மேல் என்றென்றைக்கும் மக்களோடு ஒருவராக, யாரும் அணுகக்கூடியவராகவும் வெளிப்படையான கருத்துகளுக்குச் செவிசாய்ப்பவராகவும் இருந்தார். 1930-களில் எழுதிய தன்னுடைய சுயசரிதையில் நேரு குறிப்பிடும் வாசகங்கள் காந்தியின் அணுகுமுறையை மிகச் சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடியது. “என்றைக்கு நான் காந்திஜியின் அரசியல் தொடர்பைப் பெற்றேனோ, அன்றைக்கே அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்: ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் என்னுடைய கருத்துகளை அடக்கிக்கொள்ளக் கூடாது.”
இந்த அணுகுமுறையே ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த விடுதலைக்கும் ஒரு சுதந்திர இயக்கம் முகங்கொடுக்க வேண்டிய வெவ்வேறு களங்களுக்கு காந்தியை அழைத்துச் சென்றது. சமூகப் பொருளாதார விடுதலை சாத்தியமில்லாமல் தேசிய விடுதலை அர்த்தப்படாது என்பதை அவர் முழுமையாக உணர்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். சுதந்திரப் போராட்டம் உச்சம் தொட்ட வெவ்வேறு காலகட்டங்களில்கூட கிராமியப் பொருளாதார இயக்கம், மது ஒழிப்பு இயக்கம், பெண் விடுதலை இயக்கம், தீண்டாமை ஒழிப்பு இயக்கம் என்று பல்வேறு சமூக இயக்கங்களைத் தீவிரமாக முன்னெடுத்துக்கொண்டிருந்தார். எல்லாத் தரப்புகளுடனும் அவர் பேசிக்கொண்டிருந்தார். இன்றைய நரேந்திர மோடி அரசு ‘பாரத ரத்னா’ விருது அளிக்கும் மதன் மோகன் மாளவியாதான் பூனா ஒப்பந்தத்தில் இந்துக்களின் தரப்பில் நின்று அம்பேத்கரோடு பேச்சுவார்த்தை நடத்தி கையெழுத்துப் போட காந்தியால் அனுப்பப்பட்டவர் எனும் ஒரு நகர்வு காந்தியின் ஜனநாயகத்தன்மையையும் ராஜதந்திரத்தையும் நுட்பமாகக் கூறிவிடக் கூடியது.
உலக வரலாற்றில், ஒரு நாட்டின் விடுதலைக்குத் தலைமை தாங்கிவிட்டு, சுதந்திரத்தோடு அதிகாரமும் உடன் வரும்போது அதை உதறித் தள்ளி, மீண்டும் அடுத்த போராட்டக் களம் நோக்கிச் சென்ற மிக அரிதான வரலாறு காந்தியினுடையது. இந்தியச் சுதந்திரப் போராட்டம் மூன்று புரட்சிகளை நிகழ்த்தியது: 1.சுதந்திரம், 2.மக்களாட்சியுடனான அனைவருக்கும் வாக்குரிமை, 3.ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீடு!
(பழகுவோம்...)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
நன்றி:தி இந்து 
 May 6, 2016

அரசியல் பழகு: எது நவயுக புரட்சி? -சமஸ்

சமஸ்
COMMENT (13)   ·   PRINT   ·   T+  
2
வெயில் கொளுத்தும் நண்பகல் வேளை. ஒரு இளைஞர் சந்திக்க வந்திருக்கிறார் என்று தகவல் வருகிறது. அலுவலக வரவேற்பறையில் அமரவைக்கச் சொல்லிவிட்டு, கீழே சென்று பார்க்கிறேன். ஒடிந்துவிடக் கூடிய தேகம், கருத்துப்போன முகம், குடம் நீரைக் கவிழ்த்ததுபோல வடியும் வியர்வை.. கையில் நான்கு புத்தகங்களுடன் உட்கார்ந்திருந்தார் அந்த இளைஞர். எல்லாம் ஒரு இயக்கத்தால் பதிப்பிக்கப்பட்டவை. “நீங்கள் இந்தப் புத்தகங்களைப் படித்துவிட்டு இதுபற்றி எழுத வேண்டும்” என்கிறார். புத்தகங்களைப் புரட்டினால், ஒரே புரட்சி புரட்சியாக உதிர்ந்து கொட்டுகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தின் பின்தங்கிய கிராமம் ஒன்று அந்த இளைஞரின் சொந்த ஊர். சென்னைக்குப் படிக்க வந்தவரை, புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரின் பேச்சு ஈர்த்திருக்கிறது. முதலில் விடுமுறை நாட்களில் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். இப்போது இயக்கத்தின் பகுதிநேர ஊழியர். அன்றைக்குக் கல்லூரி வேளை நாள். “இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்களே, கல்லூரிக்கு இன்று போகவில்லையா?” என்று கேட்டேன். பல நாட்கள் இயக்கச் செயல்பாடுகள் அவருடைய கல்லூரி நாட்களை எடுத்துக்கொண்டிருப்பதை அவருடைய பதில்கள் உணர்த்தின. கல்லூரி மாணவர் எனும் அடையாளத்தோடு வெவ்வேறு கல்லூரிகளில் ஆள் சேர்க்கும் வேலைக்கு இயக்கம் அவரை இப்போது பயன்படுத்திக்கொண்டிருப்பதையும் உணர்ந்துகொள்ள முடிந்தது.
நிறையக் கோபம் அவரிடமிருந்து வெளிப்பட்டது. “இந்த நாடு பெருமுதலாளிகளின் நாடு. இந்து பெரும்பான்மைவாதத்தின் நாடு. ஆதிக்கச் சாதிகளின் நாடு. எந்தக் கட்சி இங்கே ஆட்சிக்கு வந்தாலும் அவை பார்ப்பனிய - பனியா, ஏகாதிபத்திய, தரகு முதலாளிய அரசாங்கங்களையே அமைக்கின்றன” என்று வரிசையாகக் குற்றஞ்சாட்டினார். “இந்த ஜனநாயகம் போலி ஜனநாயகம். புரட்சிதான் ஒரே தீர்வு” என்றார். புரட்சி என்று அவர் குறிப்பிட்டது, ஆயுதக் கிளர்ச்சியை. அப்புறம் நாங்கள் டீ சாப்பிடச் சென்றோம். அவர் கொடுத்த புத்தகங்களை வாங்கிக்கொண்டு, “தயவுசெய்து இந்தப் புரட்சியில் ஈடுபடும் முன், படிப்பை நீங்கள் முழுமையாக முடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன்.
சென்னை வந்ததிலிருந்து இப்படியான இளைஞர்களை அனேகமாக மாதத்துக்கு ஒருவரையாவது சந்திக்கிறேன். பெரும்பாலும் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அழுத்தப்பட்ட, கிராமப்புறப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள். இளைஞர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களிலும் இப்படியான மாணவர்களைச் சந்திக்க முடிந்தது. ஒருபுறம் அரசியல் உணர்வே இல்லாத உள்ளீடற்ற மாணவர்களை நம் கல்வி நிலையங்கள் உருவாக்குகின்றன என்றால், மறுபுறம் ஆழமான ஆர்வம் கொண்ட இப்படியான மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான இடமளிக்காமல் கல்வி நிலையங்கள் வெளியே தள்ளுகின்றன. இதற்கெனவே காத்திருக்கும் கசப்பு சக்திகள் அவர்களை வாரிச் சுருட்டிக்கொள்கின்றன.
நம் சமூகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டில் அதிகம் பேசப்பட்டு, உலுத்துப்போன வார்த்தை புரட்சியாகத்தான் இருக்கும். ஒரு ஜனநாயக யுகத்தில், ஆயுதவழிக் கிளர்ச்சியை அடிமனதில் வைத்துக்கொண்டு, புரட்சி எனும் வார்த்தையைப் பயன் படுத்துபவர்களை எப்படிக் குறிப்பது? இன்னும் பழமைவாத மனநிலையிலிருந்து விடுபடாதவர்களாலேயே இப்படிப் பேச முடியும் என்று நினைக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஆயுதக் கிளர்ச்சியைத் தன் அந்தரங்கக் கனவாகக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம், தன்னையும் ஏமாற்றிக்கொண்டு தனக்குக் கீழே இருப்பவர்களையும் ஏமாற்றிக்கொள்ளப் பழக்குவதாகவே இருக்க முடியும்.
ஒருகாலத்தில், இந்த உலகின் பெரும் பகுதி மன்னர்கள் கையில் இருந்தது. அவர்களுடைய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. மக்களுக்கு அதிகாரத்தோடு பேச எந்த வழியும் இல்லை. தங்கள் மீது திணிக்கப்படும் எதேச்சாதிகாரத்தையும் அநீதிகளையும் எதிர்த்துப் போரிட அந்நாட்களில் வேறு வழிகள் ஏதும் இல்லை. ஆயுதபாணி எதேச்சாதிகாரத்திடம் பேச ஆயுதபாணி மொழியையே மக்கள் இயக்கங்களும் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி இப்படி நாமறிந்த எல்லா கிளர்ச்சிகளும் ஆயுதவழிப் போராட்டங்களாக நடக்க அதுவே காரணமாக இருந்தது. அன்றைக்கு அதற்கான நியாயமும் இருந்தது. இந்த ஜனநாயக யுகத்தில் அரசியல்வழி அறப்போராட்டங்களும் பேச்சுவார்த்தைகளுமே மிகப் பெரிய ஆயுதங்கள். சண்டை அல்ல; சமத்துவத்துக்கான உரையாடலே மிகப் பெரிய சவால்.
இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான வரலாற்று நிகழ்வு, 2001 நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல். கடந்த நூற்றாண்டின் இறுதியில் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துப்போன ஆயுதக் கிளர்ச்சி என்னும் போராட்ட வடிவம், இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் பேரழிவைச் சந்தித்தது. இன்றைய உலகில், ஆயுதக் கிளர்ச்சி எதிர்கொள்ளும் மிகப் பெரிய எதிரி உலகமயமாக்கப் புவியரசியல். 2001-க்குப் பிறகு, இந்த உலகில் தனித்த ஒரு நாடு என்று ஒன்று எதுவுமே கிடையாது. எல்லா அரசாங்கங்களும் பொருளாதார, ராணுவ, ராஜ்ஜிய வலைப்பின்னலில் பிணைக்கப்பட்டவை. உலகின் ஏதோ ஒரு சின்ன தீவில் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு குழு ஆயுதத்தைத் தூக்கினால், அது அந்த அரசாங்கத்தை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த அமைப்பையும் எதிரியாக்கிக்கொள்ளத் தயாராகிவிட்டது என்பதே பொருள். இதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், நம் கண் முன்னே நடந்த விடுதலைப் புலிகளின் அழிவும், தமிழ் இனப் படுகொலையும்!
பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை விலையாகக் கொடுத்து, எல்லாப் பெரிய எதிரிகளையும் கடந்து ஒரு ஆயுதபாணி இயக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், இறுதியில் அது நிறுவும் ஆட்சி எப்படிப்பட்டதாக அமைகிறது? எந்த ஜனங்களின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்களோ அதே ஜனங்களையும் ஜனநாயகத்தையும் கடைசியில் காலில் போட்டு நசுக்குவதே இதுவரை நாம் கண்ட வரலாறு.
ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போரில், “அங்கே பாருங்கள், இங்கே பாருங்கள்” என்றெல்லாம் இன்றும் உதாரணம் காட்டுபவர்கள் அடிப்படையில் இன்னமும் இந்தியாவில் நிகழ்ந்த பெரும் புரட்சியை உள்வாங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். உண்மையில், புதிய நூற்றாண்டுக்கான ஜனநாயகப் புரட்சியை உலகுக்கே அறிமுகப்படுத்தியது இந்த மண். உலகத்தின் பெரும் பகுதியைத் தன் வசம் வைத்திருந்த ஒரு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, உலகின் மிக வலிய ராணுவத்தை வைத்திருந்த ஒரு பேரரசை எதிர்த்து, சாதிய - நிலவுடைமை ஆதிக்கக் கட்டமைப்பில் குறைந்தது 2,500 வருடங்கள் உழன்ற ஒரு அடிமைக் கூட்டம் - அவர்களில் பெரும்பான்மையோர் ஏழைகள், எழுத்தறிவற்றவர்கள், விவசாயிகள் - நடத்திய அகிம்சை வழியிலான இந்தியச் சுதந்திரப் போராட்டமே உண்மையான ஜனநாயகப் புரட்சி. அது காந்தி இந்த உலகுக்குக் கொடுத்த பெருங்கொடை!
(பழகுவோம்...)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

நன்றி:தி இந்து  May 5, 2016

அரசியல் பழகு: தார்மிகம் எனும் அறம்! - சமஸ்



பெரும்பாலான மாணவர்கள் “இன்றைய அரசியல்வாதிகள் சுயநலவாதிகள்” என்று குற்றம்சாட்டுகின்றனர். முக்கியமான பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் செயல்படாத்தன்மையையும் சாடுகின்றனர். மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களில் இப்படியான பேச்சுகள் வந்தபோதெல்லாம் அரங்கம் அதிர்ந்தது.
நான் அவர்களிடம் இரு கேள்விகளை முன்வைத்தேன்.
“தம்பி, இன்றைய தலைவர்கள் எல்லோரையுமே சுயநலவாதிகள், செயல்படாதவர்கள் என்று நீங்கள் பொதுமைப்படுத்துகிறீர்கள். நானும் உங்கள் கட்சியில் சேர்ந்துவிடுகிறேன். இப்போது நம் கருத்துப்படி, மாற்றம் வேண்டும் என்றால், இவர்கள் களத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இளைஞர்கள் அந்த இடத்தைக் கைப்பற்ற வேண்டும். சரி, நாம் சுயநலவாதிகள் என்று குறிப்பிடுபவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது 12 மணி நேரம் வரை உழைக்கிறார்கள், நூறு வயதை நெருங்கும் சூழலிலும் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து உழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அப்படியென்றால், மாற்று அரசியல் பேசும் பொதுநலவாதிகள் இளைஞர்கள் நாம் எவ்வளவு நேரம் உழைக்க வேண்டும்? உண்மையில் எவ்வளவு நேரத்தைப் பொது வேலைக்குக் கொடுக்கிறோம்?”
“தம்பி, நாம் இன்றைய அரசியல்வாதிகளின் செயல்படாத்தன்மையைப் பற்றி பெரிதாகப் பேசுகிறோம். கடந்த மூன்று வருடங்களில் மூன்று இளைஞர்களின் மரணம் தமிழகத்தை அதிரவைத்தது. இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் மூவரும் செய்த ஒரே குற்றம் காதலித்தது. நிகழ்தகவு மாற்றி அமைந்தால், அந்த மூவரில் ஒருவர் நீங்களாக இருந்திருக்கலாம் அல்லது அந்த மூவரால் காதலிக்கப்பட்ட பெண்கள் உங்கள் தோழியராக இருந்திருக்கலாம். நாளை இதே சாதி உங்கள் கழுத்திலும் உங்கள் தோழியர் கழுத்திலும் அரிவாளை வைக்கலாம். ஒரு சக மாணவராக, இதற்கு எதிராக நீங்கள் வெளிப்படுத்திய எதிர்வினை என்ன? சாலை மறியலில் போய் உட்கார வேண்டாம்; குறைந்தபட்சம் ஒரு கருப்புப் பட்டையை அணிந்துகொண்டு அன்றைக்குக் கல்லூரிக்குச் செல்லும் அளவுக்குக்கூடவா நம் கல்வி நிறுவனங்களில் ஜனநாயகம் இல்லை?”
அரங்கம் நிசப்தமானது.
ஒரு சமூகம் கீழே எந்த அளவுக்குத் தார்மிகத் துடிப்போடு ஜனநாயகச் செயல்பாடுகளில் பங்கெடுக்கிறதோ, அந்த அளவுக்கே மேலே அதன் பிரதிநிதிகளிடத்தில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளைப் பார்க்க முடியும். ஒரு சமூகத்தை ஆளும் வர்க்கமானது அந்தச் சமூகத்தின் கடைந்தெடுத்த பிழிவு. மேலே திரளும் வெண்ணெய் ஊளை நாற்றமெடுக்கிறது என்றால், கீழே பாலும் ஊளை அடிக்கிறது என்றே பொருள்.
இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் மது விற்பனை தாராளமாக நடக்கிறது என்றாலும், தமிழ்நாட்டு அவலம் வேறெங்கும் கிடையாது. அரசாங்கமே மது விற்பதும் ஆட்சி நிர்வாகத்தில் தொடர்புடையவர்களே மது ஆலைகளை நடத்துவதும் அரசு அதிகாரிகளே இலக்கு நிர்ணயித்து மது விற்பனையை ஒரு சாதனையாகப் பிரகடனப்படுத்திக்கொள்வதும் இங்குதான். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் மது விற்பனை வந்த பிறகான இந்த 13 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கிராமப்புறப் பொருளாதாரம் பெரும் சீரழிவைச் சந்தித்தது. மாநிலத்தின் உடலுழைப்புத் தொழிலாளர் வளத்தை மது உறிஞ்சிக் குடித்தது. மருத்துவமனைகளுக்குக் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட கூட்டம்போல கல்லீரலால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடம் வந்து சென்றார்கள். அரசின் பிரதான வருமானங்களில் ஒன்றாக மட்டும் அல்லாமல், அரசியலைப் பின்னின்று இயக்குபவர்களின் கொள்ளையாதாரமாகவும் மது விற்பனை மாறியது.
மாநிலத்தின் மிகப் பெரிய கட்சிகளைச் சேர்ந்தவர்களில் தொடங்கி பல கரங்கள் இந்த அசிங்கத்தில் கோத்து நிற்கும்போது, இந்தத் தேர்தலில் கட்சி வேறுபாடின்றி எல்லோருமே மதுவிலக்கைப் பேசும் சூழல் எப்படி உருவானது? அசைக்க முடியாததாகக் கருதப்பட்ட ஒரு அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழக எதிர்க்கட்சிகளை வீதிக்கு இழுத்துவந்தது எது?
ஒரு தனிமனிதரின் தார்மிக உணர்வு. மதுவுக்கு எதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களின் மைய உந்துசக்தியாக இருந்த சசிபெருமாளின் போராட்டம். சேலம் பக்கத்திலுள்ள இடங்கணச்சாலை இமேட்டுக்காடு எனும் சின்ன கிராமத்தைச் சேர்ந்தவர் அவர். ஏழ்மையான குடும்பம். பதின்ம வயதில் காமராஜர் நடத்திய மது ஒழிப்புப் போராட்டம் ஈர்க்க, அப்போதே போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்.
சின்ன வயதிலிருந்தே பொதுக் காரியங்களுக்காக மனுவோடு அலுவலகம் அலுவலகமாக ஏறி இறங்குவது, அரசியல்வாதிகளிடம் முறையிடுவது என்று ஏதாவது செய்துகொண்டிருந்தவர் 2003-ல் தமிழக அரசு மது விற்பனையைக் கையில் எடுத்தது முதலாக மதுவுக்கு எதிரான போராட்டத்தைக் கையில் எடுத்தார். ஒருகட்டத்தில்
‘மதுவை
ஒழிப்போம். குடும்பங்களைக் காப்போம், தயவுசெய்து மது அருந்தாதீர்' என்று எழுதப்பட்ட அட்டையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, மதுக் கடைக்குப் போவோர் வருவோர் கால்களில் எல்லாம் விழுந்து மன்றாடும் போராட்டத்தைத் தொடங்கினார். 2013-ல் பலரும் அரசுக்கு எதிராகப் பேசத் தயங்கிய காலகட்டத்தில், தனி ஒரு மனிதராக சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் உட்கார்ந்தார். சிறையில் அடைத்தார்கள். அதிகார வர்க்கம் எவ்வளவோ நெருக்கியது. சிறையிலும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. 34 நாட்கள் நீடித்த போராட்டம் அது. மதுவுக்கு எதிரான போராட்டத்துக்காக சாகவும் தயாராக இருந்த சசிபெருமாள் கடைசியில் அது நிமித்தமான வேறு ஒரு போராட்டத்திலேயே செத்தும்போனார். “நீங்கள் எவ்வளவு பெரிய எதிரிகளோடு மோதுகிறீர்கள், தெரியுமா?” என்று ஒருமுறை கேட்டபோது சொன்னார், “நல்லாத் தெரியும். நான் ரொம்ப சின்னவன். ஆனா, என் பின்னாடி தர்மம் இருக்கு. அதுக்கு ஒரு நாள் அவங்க பணிஞ்சுதான் ஆகணும்!”
தமிழ்நாடு கண்ட செயலூக்கம் மிக்க கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் வி.பி.சிந்தன். ஒரு துடிப்பான இளைஞரை சிந்தனிடம் அறிமுகப்படுத்திவைத்தார் டபிள்யூ.ஆர்.வரதராஜன். அரசியல் தொடர்பாக ஆவேசமாகப் பேசிய அந்த இளைஞரை, “நீ ஏன் அரசியலுக்கு வரக் கூடாது? ஏன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையக் கூடாது?” என்று கேட்டார் சிந்தன். இப்படி சிந்தன் கேட்ட அதே வேகத்தில் இளைஞரிடமிருந்து பதில் வந்தது. “எனக்கு மலையாளிகளையும் பிடிக்காது. பிராமணர்களையும் பிடிக்காது. இன்றைய அரசியலும் உங்கள் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல.” அது எம்ஜிஆர் ஆண்ட காலம். சிந்தனும் ஒரு மலையாளி. அவரிடம் அந்த இளைஞரை அழைத்துச் சென்ற வரதராஜன் ஒரு பிராமணர். சிந்தன் அந்த இளைஞரிடம் சொன்னார், “நீ நம்புவது உண்மை அல்ல. ஒரு பேச்சுக்கு உண்மை என்று வைத்துக்கொள்வோம். எங்களையெல்லாம் வெளியேற்றவாவது நீ உள்ளே வர வேண்டும் இல்லையா?”
வரலாற்றுத் தருணம் என்பது இதுவே. உண்மை நம் முகத்துக்கு நேரே வந்து நிற்கும் தருணம். அறம், “இதற்குத் தார்மிகரீதியாக நீ என்ன செய்யப்போகிறாய்?” என்று கேள்வி கேட்கும் ஒரு தருணம். அப்படி ஒரு தருணத்தில் நாம் என்ன செய்கிறோம்; அந்த உண்மைக்கு எப்படி முகங்கொடுக்கிறோம் என்பதே எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது!
(பழகுவோம்..)
- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

நன்றி:தி இந்து மே04,2016

அரசியல் பழகு! - சமஸ்



மிக அரிதான ஒரு வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. தேர்தல் சமயத்தில் ஊர் ஊராகச் சென்று மாணவர்களோடு கலந்துரையாடும் வாய்ப்பு. முதலில், தமிழகத்தின் நான்கு முக்கிய நகரங்களில் ‘தி இந்து’வே நேரடியாக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தது; அடுத்த, எட்டு நிகழ்ச்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடங்களிலும் குறைந்தது அந்நகரைச் சுற்றியுள்ள ஐந்தாறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களைச் சந்திக்க முடிந்தது. நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், மருத்துவ மாணவர்கள், பொறியியல் மாணவர்கள், வேளாண் மாணவர்கள், வரலாற்று மாணவர்கள், கலை இலக்கிய மாணவர்கள், நுண்கலை மாணவர்கள், அறிவியல் மாணவர்கள் என்று எல்லாத் தரப்புகளையும் சேர்ந்த கிட்டத்தட்ட 25,000 மாணவர்களுடன் இணைந்து நடத்திய கலந்துரையாடல் இது.
இந்தத் தமிழகத் தேர்தல், வரலாற்றுரீதியாகவும் அகில இந்திய அளவிலும் ஒரு சிறப்பைப் பெறுகிறது. வாக்காளர்களில் நான்கில் ஒருவர் புதிய தலைமுறை. இவர்களுடைய மனவோட்டம் எப்படி இருக்கிறது? இன்றைய அரசியலைப் பற்றி, அரசியல் கட்சிகளைப் பற்றி, அரசியல் தலைவர்களைப் பற்றி இவர்கள் நினைப்பதென்ன? இந்தக் கூட்டங்களில் கிடைத்த பதில்கள் ஆச்சரியமும் அவமானமும் தருபவை.
பெரும்பான்மையான மாணவர்கள் சொன்னது, “இன்றைய அரசியல் ஒரு சாக்கடை. இன்றைய அரசியல்வாதிகள் குப்பைகள். அரசியலுக்கும் யோக்கியர்களுக்கும் சம்பந்தமில்லை.” இன்றைய அரசியல்வாதிகளின் ஆடம்பரம், ஆணவம், படாடோபம் யாவும் அவர்கள் மத்தியில் அருவருப்பை உண்டாக்கியிருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன மாற்று என்று கேட்டால், “இளைஞர்களே மாற்று” என்று ஒட்டுமொத்தக் குரலில் சொல்கிறார்கள். “சரி, உங்களில் எத்தனை பேர் அரசியல் ஈடுபாட்டோடு இருக்கிறீர்கள்?” என்று கேட்டால், கனத்த மௌனம் நிலவுகிறது. கூட்டத்தில், காமராஜர் பெயரை யாராவது உச்சரித்தால், கைத்தட்டல் பறக்கிறது. ஒரு நல்ல முதல்வருக்கான முன்னுதாரணமாக காமராஜரைப் பலரும் குறிப்பிடுகிறார்கள். அதேசமயம், காமரஜரைப் பற்றி மேலோட்டமாகக்கூடத் தகவல்கள் தெரியவில்லை.
அரசியல் மீது ஒரு சமூகத்தின் இளைய தலைமுறையிடம் இத்தனை கசப்பையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியதற்காக அத்தனை அரசியல் கட்சிகளுமே வெட்கித் தலைகுனிய வேண்டும். மாணவர்களை நொந்துகொள்ள ஏதுமில்லை. ஒருபுறம், அரசியல் மீதான அவர்களுடைய அவநம்பிக்கைக்கான எல்லா நியாயங்களையும் இன்றைய அரசியல் தலைவர்கள் இடைவிடாது கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் நம்முடைய வீட்டுச் சூழலும், கல்விச் சூழலும் அரசியலைத் தீண்டக்கூடாத பொருளாக அவர்களிடம் நிறுவியிருக்கின்றன. ஒவ்வொரு இளைஞரையும் சுற்றுச்சுவர் இடப்பட்ட தனித்தனி உலகமாக இன்றைய நம் சமூகச் சூழல் மாற்றியிருக்கிறது. முழுக்க சுயநலமும், குடும்ப நலமும் குழைத்துக் கட்டப்பட்ட சுற்றுச்சுவர். அந்தச் சுற்றுச்சுவரின் அடித்தளமே அரசியல் வெறுப்பின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
கல்யாணப் பத்திரிகை வைக்க வருபவர்களிடம் என் தாத்தா நடத்தும் உரையாடல் ஞாபகத்துக்கு வருகிறது. பெண், மாப்பிள்ளையைப் பற்றி அவர் விசாரிப்பார். “மாப்ள எந்த வம்புதும்புக்கும் போகாதவர். வீடு விட்டா வேலை, வேலை விட்டா வீடுன்னு இருக்கார். பொண்ணு குனிஞ்ச தலை நிமிர மாட்டா” என்பன மாதிரி வார்த்தைகளை எவரேனும் சொன்னார்கள், அவர்கள் தொலைந்தார்கள்! “ஏன்யா, வீட்டுலேர்ந்து வீதியில காலடி எடுத்துவெச்சா, ஊருல நடக்குற ஒவ்வொண்ணும் இந்த வயசுல என்னைக் கொந்தளிக்கவைக்குது. நீ புடிச்சுருக்குற புள்ளைக்கு இருவத்தியஞ்சு வயசாகுது. பள்ளிக்கூடம், காலேஜு எல்லாம் போயி படிச்ச ஒரு புள்ளைய ஊருல நடக்குற எதுவுமே நாளது தேதி வரை உலுக்கலை, ஒரு அநீதியைக் கண்டு மனம் பதைபதைக்கல, ஒரு தப்பைத் தட்டிக்கேட்க போராட்டம் பண்ணதில்லை; போலீஸ் ஸ்டேஷன் போனதில்லைன்னா, அது புள்ளையா, பிண்டமா? மிருகம்கூட அப்பிடி இருக்காதேய்யா! அதை எப்புடிப் பெருமையாச் சொல்லிக்குற?” என்பார்.
இன்றைக்கு நம் வீடுகளிலும் பள்ளிக்கூடங்களிலும் யாரை நல்ல பிள்ளைகள் என்று கொண்டாடுகிறோம் என்பது நமக்குத் தெரியாதது அல்ல. பிழைப்பது ஒன்றையே வாழ்வின் ஒரே இலக்காக்கிவிட்டோம். ஒரு சமூகத்தின் மதிப்பீடுகளும், விழுமியங்களும் எவ்வளவு சீக்கிரம் கீழே சரிந்துவிட்டன!
பதிப்பாளர் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணனிடம் சின்ன வயதில் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது அவர் இப்படிக் கேட்டார். “அரசியல் என்பது அடிப்படையில், எனக்கும் சக மனிதருக்கும் இடையேயான உறவு. அதிலிருந்து எப்படி ஒருவர் விலகியிருக்க முடியும்?”
இதை எழுதிக்கொண்டிருக்கும்போது, என் கையில் இரு அறிக்கைகள் இருக்கின்றன. ஒன்று, ‘ஆக்ஸ்ஃபோம்’, ‘குளோபல் ரிச்’ நிறுவனங்களின் சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கை. மற்றொன்று, ‘ஜர்னல் ஆஃப் குளோபல் ஆன்காலஜி’ மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஒரு மருத்துவ ஆய்வறிக்கை. முதல் அறிக்கை, “உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் 85 பேரின் செல்வமும் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ஏழைகள் பாதிப் பேரின் செல்வமும் சமம்” என்கிறது. “இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் 111 பேரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 2.02 லட்சம் கோடி” என்கிறது. இரண்டாவது அறிக்கை, “இந்தியாவில் புற்றுநோய்க்கு ஒவ்வொரு நாளும் 50 குழந்தைகள் பலியாகின்றனர். இந்த எண்ணிக்கை 2025 வாக்கில் ஐந்து மடங்காக அதிகரிக்கும்” என்கிறது. இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் அதிகமான அளவில் இறப்பதற்கு மிக முக்கியமான காரணம் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுவது, ஒரு சராசரி இந்தியக் குடும்பம் தன் ஆண்டு வருமானத்தைவிட, இருபது மடங்கு அதிகமாகச் செலவிட வேண்டியிருப்பதாலேயே பலரால் சிகிச்சைக்குச் செல்ல முடியவில்லை என்பது. இன்றைக்கு நம்முடைய வாழ்க்கை எந்தப் புள்ளியில் வந்து நிற்கிறது என்பதைச் சுட்டும் இரு செய்திகள் இவை.
இந்த இரு செய்திகளுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை; இந்த இரு செய்திகளுக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை; இந்த இரு செய்திகளாலும் நாம் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பில்லை என்று நம்பும் ஒருவரே அரசியலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சொல்ல முடியும். நம்மால் அப்படிச் சொல்ல முடியுமா?
(பழகுவோம்..)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
நன்றி : தி இந்து மே03,2016

Tuesday, May 3, 2016

ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 40 மீளும் வாசல்

பதிவு செய்த நாள்

28ஏப்
2016 
23:15



தேர்தல் அரசியல் குறித்த விவாதத்தின் ஒரு பகுதியாக, என் கோவை நண்பர் நடராஜன் உணர்ச்சிகரமாக ஒரு கேள்வியைக் கேட்டார். 'ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில், முக்கியமான அனைவருமே தகுதியற்றவர்கள் என்று, எனக்கு தோன்றுமென்றால், நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? தலைவலிக்கு பதிலாக திருகுவலியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மட்டுமே, தமிழர்களுக்கு இன்று உள்ளது.
தேர்தல் நேரத்தில் நாம் பேசுவது என்ன? 'எந்த கட்சி பரவாயில்லை?' என்று தானே! ஊழலா, சர்வாதிகாரப் போக்கா, பொறுப்பின்மையா, குடும்ப ஆட்சியா, உள்ளூர் ரவுடி அரசியலா எது தேவை என்று தானே, நம்மிடம் தேர்தல்கள் சொல்கின்றன? தகுதியான வேட்பாளர், எனக்கு முன் வரவேண்டும் அல்லவா? அப்படி இல்லையேல் நான் என்ன செய்ய முடியும்?' என்று, அவர் கேட்டார்.
பத்து சதவீதம் வித்தியாசம்
வேறு வேறு வார்த்தைகளில், இந்த வினா, அரசியலில் ஆர்வமுடைய நடுநிலையாளர்களில் அத்தனை பேரிடமும் எழுகிறது. எனக்கே இந்த கேள்வி சில ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறது. கேரளத்தின் முக்கியமான ஜனநாயக போராளியாகிய டாக்டர் எம்.கங்காதரன், எனது ஆசிரியர். அவரிடம் இக்கேள்வியை நான் கேட்டபோது, அவர் சொன்ன பதில் தெளிவான ஒன்று. 
இந்தியா முழுக்க, தேர்தல்களில் வெற்றி, தோல்வி என்பது, ஐந்து அல்லது பத்து சதவீதம் வாக்குகளின் வித்தியாசத்தில் தான் அமைகிறது. தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்தும்போது, சாதி, மதம் எல்லாம் ஏன் பார்க்கிறார்கள்? மக்களனைவரும் சாதி, மதம் பார்த்து வாக்களிப்பதில்லை.
வாக்காளர்களில் ஒரு பத்து சதவீதம் பேர் தான் சாதி அடிப்படையில் வாக்
களிப்பார்கள். ஆனால், அந்த பத்து சதவீத வாக்கே, தேர்தல் முடிவை மாற்றிவிடும். அதேபோல, ஒருவர் நேர்மையானவர் என்ற ஒரே காரணத்தாலேயே, ஒரு தொகுதியில் பத்து சதவீத வாக்குகளை வாங்க முடியுமென்றால், அதற்கு அடுத்த தேர்தலில், அத்தனை கட்சிகளும் அங்கு ஒரு நேர்மையானவரை மட்டுமே தேர்தலில் நிறுத்த முடிவெடுக்கும்.
ஒரு கட்சியின் சின்னத்திலோ, ஒரு தலைவரின் ஆதரவிலோ, எவர் நின்றாலும் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க முடியும் என்ற வாய்ப்பு, இருக்கும்போது மட்டும் தான், யாரை வேண்டுமானாலும் அங்கு நிறுத்தலாம் என்ற துணிவு, அரசியல் 
கட்சிகளுக்கு வருகிறது. தேர்தலில் சாதி, மதம், உள்ளூர் செல்வாக்கு போன்றவற்றுக்கு சமானமாகவே, நேர்மையும் ஓர் அளவுகோலாக ஆகும் என்றால், வெறும் பத்து சதவீதம் பேர் நேர்மையாளருக்கே ஓட்டுப் போடுவர் என்பது தெளிவாக தெரிந்தால், உறுதியாகவே மாற்றம் நிகழும். உண்மையில், பல வடமாநிலங்களில் கண்கூடாகவே இந்த மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நேர்மை, வளர்ச்சி அரசியல் இரண்டும் 
வாக்குகளை பெற்றுத் தரும் என பிகார், ஒரிசா, சத்தீஸ்கர், கோவா போன்ற மாநில அரசுகளின் அரசியல் நமக்குக் காட்டுகிறது. 
நான் அறிந்த காலம் முதலே, கேரள 
அரசியலில் கணிசமான தொகுதிகளில் வேட்பாளரின் தனிப்பட்ட நேர்மை என்பது, மக்களிடையே ஒரு முக்கியமான அளவுகோலாக தான் உள்ளது. அதனால் தான், இடதுசாரிகள் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் கூட, தன் வேட்பாளரின் தனிப்பட்ட நேர்மையை கருத்தில் கொண்டே போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கிறது. 
விதிவிலக்குகள் உண்டு. ஆனால், இங்கு போல, நேரடியாகவே அரசியல் ரவுடிகள் ஆட்சிக்கு வருவது அரிது. ஏறத்தாழ கேரள அரசியலின் சாயல் கொண்ட குமரி மாவட்டத்தில், நான் அறிந்தவரை, பெரும்பாலான அரசியல்வாதிகள், தனிப்பட்ட முறையில் நேர்மையானவர்கள் என்றே அறியப்பட்டு இருக்கிறார்கள்.
இங்கு, மிகக்குறைவான அரசியல்வாதிகள் மீது தான் ஊழலின் கறை உள்ளது. அவர்கள் பெரும்பாலும், அ.தி.மு.க., - தி.மு.க., அரசியலை சேர்ந்தவர்கள். வெறும் விசுவாசிகள். வாக்குகள் அவர்களுக்கு விழுவதில்லை, அவர்களின் கட்சிக்கும் சின்னத்திற்கும் விழுகின்றன. அவர்களுக்கு தனிப்பட்ட முகமோ அடையாளமோ இல்லை. அரசியலில் அவர்கள் நீடிப்பதுமில்லை.
என் இளமைப்பருவத்தில், திருவட்டாறு சட்டமன்ற தொகுதியில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜே.ஹேமச்சந்திரன், ஸ்தாபன காங்கிரஸ் கட்சியையும், பின்னர் ஜனதாக் கட்சியையும் சேர்ந்த ஜேம்ஸ் என்ற இருவர், மாறி மாறி போட்டியிட்டு வென்றிருந்தனர். பல ஆண்டு காலம் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக 
இருந்தனர்.

அரசியல் நாகரிகம்
இருவருமே ஒருவர் மீது ஒருவர் தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டுகளையும் சுமத்த மாட்டார்கள். ஏனென்றால், இருவருமே அப்பழுக்கற்ற நேர்மை உடையவர்கள் என்பது மக்களுக்குத் தெரியும். 
இந்த கட்டுரைக்காக நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தேன். நேசமணி, தாணுலிங்க நாடார், காமராஜர், குமரி அனந்தன், டென்னிஸ், பொன்.ராதா
கிருஷ்ணன், ஏ.வி.பெல்லார்மின். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா கட்சிகளை சேர்ந்தவர்கள். அனைவருமே அரசியல் நேர்மை கொண்டவர்கள். 
அவர்கள் மேல் தேர்தலின் போதுகூட குற்றச்சாட்டுகள் எழுந்ததில்லை. அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட பொன்.விஜயராகவன், இஸ்மாயில் சாகிப் 
போன்றவர்கள் கூட நேர்மையான அரசியல்வாதிகளே. ஏனென்றால், இன்னமும்கூட குமரி மாவட்டத்தில், வாக்களிக்கும் கணக்கில் அரசியல் நேர்மை ஒரு அளவுகோலாக மக்களிடையே உள்ளது. 
அதிதீவிரமான கட்சி விசுவாசம், தலைமை விசுவாசம் போன்றவை, நாகர்கோவில், அகஸ்தீஸ்வரம் போன்ற தமிழக மையநிலத்துக்கு அணுக்கமான பகுதிகளில், திராவிட அரசியல் கொண்ட கட்சிகளுக்குள் மட்டுமே உள்ளன. அவர்கள் தான் எப்போதும் ஊழல்வாதிகளை, விசு
வாசிகளை தேர்தலில் வேட்பாளர்களாக 
நிறுத்துகிறார்கள்.
அப்படியென்றால் சிக்கல் இருப்பது அரசியல்வாதிகளிடம் அல்ல. நேர்மையை மக்கள் ஓர் அளவுகோலாக கொள்வதில்லை என்று, அரசியல்வாதிக்கு தெரியுமென்பதனால் தான், தொடர்ந்து நேர்மை 
இல்லாதவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள்.
கட்சிகளுக்கு அப்பாலும் நேர்மையானவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது? 
நமக்கு நேர்மை தேவை, அதை நாம் கணக்கில் கொள்கிறோம் என, ஏன் நாம் அரசியல்வாதிகளுக்கு காட்டக் கூடாது?
தமிழகம் முழுக்க, இந்த தேர்தலில், 
ஐம்பதே தொகுதிகளில் நேர்மையான சுயேச்சைகள் ஆளுக்கு இருபதாயிரம் வாக்குகள் பெற்று, அந்த தொகுதிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பார்கள் என்றால் என்ன ஆகும்? நேர்மை ஒரு அரசியல் கணக்கு என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்வார்கள். அது உடனடியாக தேர்தல் சார்ந்த அனைத்து கணிப்புகளிலும் கண்
கூடான மாற்றத்தை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. 
இதற்கு எதிராக இருக்கும் மனநிலை என்ன? தேர்தலை கிரிக்கெட் போல இரண்டு கட்சிகளின் போட்டியாக 
மட்டுமே பார்ப்பது தான். மிகமிக முதிர்ச்சியற்ற, சிறுவர்களுக்குரிய மனநிலை இது. இங்கே படித்தவர்களுக்குக் கூட இந்த மனப்போக்கே உள்ளது. 
இந்த மனநிலையை நாம் எள்ளிநகையாட வேண்டும். மூர்க்கமாக நிராகரிக்க வேண்டும். தேர்தல் என்பது ஒரு விளையாட்டு அல்ல. இரு தரப்பினர் விளையாட, நாம் வேடிக்கை பார்க்கவில்லை. அது ஒரு சந்தை. நமக்கு தேவையானவற்றை நாம் தேர்வு செய்கிறோம். நமக்கு பிடித்ததை தான் தேர்வு செய்ய வேண்டும். 
கடைக்காரன் துாக்கி, நம் முன்னால் போடும் இரண்டு துணிகளில் ஒன்றை, தேர்ந்தெடுக்க ஒப்புக்கொள்வோமா என்ன? மேலே அடுக்கில் மறைந்து 
இருப்பதைக் கூட எடுத்துப் போடும்படி கேட்கிறோம் அல்லவா?எங்கள் தொகுதியில் அப்படிப்பட்ட நேர்மையாளர்கள் போட்டியிடவில்லை என்றால் என்ன செய்வது, என்ற கேள்வி எழும். ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர் பட்டியலை பார்த்தீர்கள் என்றால், மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணம் கொண்ட ஒரு வேட்பாளராவது இல்லாமல் இருக்க மாட்டார்கள். 
திடீர் மாற்றங்கள்
அது இந்தியாவின் அடிப்படை ஜனநாயக பண்பின் ஓர் இயல்பு. நாம் அவர்களை தெரிந்து கொள்வதில்லை, நம்மிடம் 
வந்து சேருமளவுக்கு பிரச்சாரம் செய்வதற்கு அவர்களிடம் பணபலம் இருப்பதில்லை. சரி, நேர்மையானவர்கள் சட்ட மன்ற உறுப்பினராக வந்தாலும்கூட, ஆட்சியை பிடிக்கும் கட்சிகள் ஊழலில் மிதப்பவைதானே என்ற கேள்வி எழலாம். 
ஆனால், எந்த கட்சியாயினும், அந்த கட்சிக்குள் நேர்மையை தங்கள் அடையாளமாக கொண்டவர்கள் மேலெழுந்து வருவார்கள் என்றால், அவர்களுக்கு கட்சிக்குள் ஒரு குரல் இருக்கும்.
உடனடியாக திடீரென்று மாற்றங்களை அவர்களால் செய்ய முடியாமல் போகலாம். ஆனால், அவர்களுடைய பங்களிப்பு அரசியலில் ஒரு திருப்பு முனையாக தான் அமையும். மாற்றங்கள் அப்படி 
மெல்லமெல்ல தான் நிகழும். ஒர் எளிய தொடக்கமாகவே தென்படும்.கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com 
www.jeyamohan.in

நன்றி : தினமலர்

தினமலர் – 39 , கேளாக்குரல்களைக் கேட்போம்

April 28, 2016
ஒவ்வொரு தேர்தலிலும் நாம் அடிக்கடி காதில் கேட்கும் ஒரு ஏளனக்குரல், ‘அவர்களுக்கு வைப்புத்தொகைகூட திரும்பக்கிடைக்காது’ .டெபாசிட் காலி என்பது ஒரு கேலிச் சொல்லாகவே நம் நாவில் விளங்குகிறது. ஓர் அரசியல் தரப்பை மட்டம் தட்டவும், இழிவுபடுத்தவும் அவர்களுக்கு தேர்தலில் படுதோல்வி தான் கிடைக்கும் என்ற சொற்றொடரைத்தான் நாம் பயன்படுத்துகிறோம்.
ஜனநாயகத்தை புரிந்து கொண்ட ஒருவர் இந்த கூற்றிலுள்ள அபத்தத்தை அறிந்திருப்பார். ஒரு தரப்பு முழுமையாகவே மக்களால் புறக்கணிக்கப்படும் என்றால் அது இழிவானதா என்ன ?மக்கள் அத்தனை பேரும் ஒரு தரப்பை எதிர்க்கிறார்கள் என்பதனால் அது தவறானதாகிவிடுமா என்ன? இன்று நாம் எதையெல்லாம் நம்முடைய அடையாளங்களாக தூக்கிப்பிடிக்கிறோமோ அவையனைத்தும் ஒரு காலத்தில் மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டவைதானே? எதிர்க்கப்பட்டவைதானே ?
மக்களின் மனநிலைகள் எப்போதுமே தற்காலிகமான உணர்ச்சிப் பெருக்குகள் சார்ந்தவை .யேசுவை சிலுவையில் அறையக்கொண்டுவரும்போது பிலாத்தோஸ்  ‘இந்த நீதிமானை நான் தண்டிக்கமுடியாது. உங்களுக்கு ஒருவரை விடுதலை செய்வதற்கான வாய்ப்பை தருகிறேன்’ என்று சொன்னான். மக்கள் யேசுவை சிலுவையில் அறையும்படியும், தண்டிக்கப்பட்டிருந்த பரபாசை விடுதலை செய்யும்படியும் தான் கோருகிறார்கள். பிலாத்தோஸ் தன் கைகளைக் கழுவி  ‘இந்த பாவத்தில் எனக்குப் பங்கில்லை’ என்று சொன்னான். மக்கள் ‘அந்தப்பழி எங்கள் மேல் விழட்டும்” என்று கூச்சலிட்டனர்
மக்கள் வரலாறு முழுக்க சமகாலத்தில் யேசுவுக்கு நிகரானவர்களைத்தான் சிலுவையில் அறைகிறார்கள் பரபாஸ்களைத்தான் தங்களுக்குரியவர்களுக்காக தேர்ந்தெடுக்கிறார்கள். மக்கள் மீதான் வெற்றி என்பது முக்கியம்தான். ஜனநாயகத்தில் மக்களின் குரலே இறுதியானது. தங்களுக்கு என்ன தேவை என்பதை அவர்கள்தான் முடிவெடுக்கவேண்டும். அவர்கள் தவறாக முடிவெடுத்தாலும்  அதுவே அவர்களைக் கட்டுப்படுத்தும். அதன் அழிவுகளை அவர்கள் அடையத்தான் வேண்டும்
ஆனால்  அக்காரணத்தாலேயே மக்களின் தீர்ப்பு உன்னதமானது, சரியானது என்றில்லை. ஓர் அரசியல் தரப்பு அது சொல்வது முற்றிலும் உண்மை என்று நம்பினால், அதை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்று பார்க்கவேண்டியதில்லை. தங்கள் அர்ப்பணிப்பினாலேயே அதை மக்கள்முன் தொடர்ந்து முன் வைக்கலாம். பலசமயம் முற்போக்கான, சரியான கருத்து தவறான தருணத்தில் முன்வைக்கப்படுவதனால் மக்கள் ஆதரவில்லாமல் இருக்கும். மக்கள் மனம் அப்பிரச்னையை புரிந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கடியை அப்போது அடைந்திருக்காது. ஒரு கருத்துக்கான காலம் கனிவதற்கு முன்னாலேயே அந்தக் கருத்து முன்வைக்கப்படும்போது அது எவருக்குமே பொருள்படாது. எவருமே அதைக் கவனிக்கவும் மாட்டார்கல். ஆனால் அதை முன்வைப்பவர்களின்  தொடர் செயல்பாடுகள் இர்க்கும்போது அதற்கான தருணம் வரும்போது அக்கருத்து அவர்களின் கண்ணுக்குப்படுகிறது.
‘உதாரணமாக 1985-86கள் முதல் ஈரோடு சேர்ந்த காந்தியவாதியும் ,சுற்றுச்சூழல் இயக்கங்களின் முன்னோடியுமான டாக்டர் ஜீவானந்தம் அவர்களுடன் எனக்குத் தொடர்பு உண்டு. என் ‘இன்றைய காந்தி’ என்னும் நூலை அவருக்குத்தான் சமர்ப்பண செய்துள்ளேன். அன்று நொய்யல் ஆறு மாசுபடுவது, திருப்பூர் பகுதியின் நிலத்தடி நீர் ரசாயனமயமாவது குறித்து அவர் மக்களிடையே தொடர் பிரச்சாரம் செய்து வந்தார். தன் சொந்தச் செலவில் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு ஊர் ஊராக கொண்டு சேர்த்தார். அனைத்து இடங்களிலும் அது மக்களால் ஏளனமாகவே பார்க்கப்பட்டது. அன்றிருந்த தொழிலாளர் அமைப்புகள் அது மக்களின் தொழில்வாய்ப்புகளை கெடுக்கும் உத்தியென்றே பார்த்தனர்.
அன்று தேர்தல்களில் அச்செய்தியை முன்வைத்து ஜீவா அவர்கள் பிரச்சாரம் செய்யும் போது பத்து பேர் கூட திரும்பிப் பார்த்ததில்லை ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் ஈரோடு, திருப்பூர் ,கோவை வட்டாரங்களின் மிக முதன்மையான பிரச்னையாக எழுந்து வந்தது சுற்றுச்சூழல்தன். இன்று அங்கு போட்டியிடும் அத்தனை கட்சிகளுமே சுற்றுச் சூழல் சார்ந்த வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. மக்களே ஒன்று சேர்ந்து  ‘சிறுதுளி’ போன்ற அமைப்புகளின் வழிகாட்டலில் ஏரிகளை செப்பனிடவும், நொய்யல் ஆற்றின் நீர்வழிகளை மீட்கவும் களமிறங்கிச் செயல்படக்கூடிய நிலை வந்துள்ளது.
தமிழகம் முழுக்க இன்று சுற்றுச் சூழல் சார்ந்த ஒரு மெல்லிய விழிப்புணர்வு பரவி வருகிறது. அடுத்த பத்தாண்டுகளில் முக்கியமான கோரிக்கையாகவே அது அமையும். இந்தியாவிற்கு மன்னர்கள் விட்டு சென்ற பெரும் கொடைகள் என்றால் ஏரிகளும் கோயில்களும்தான். தமிழகத்தின் பொற்காலம் என்பது சோழர்களின் ஆட்சிக்காலகட்டம்தான். அதற்கு முக்கியமான காரணம் இன்றும் தமிழகத்தின் வளத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ள மாபெரும் ஏரிகளில் பெரும்பாலானவை சோழர்களால்  வெட்டப்பட்டவை .தமிழகத்தின் விளைநிலங்களின் அளவே மும்மடங்கு பெருகியது.
அதன் பீறகு மதுரை நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் இன்றும் தென்னகத்தின் வாழ்க்கைக்கே ஆதாரமாக இருக்கும் மாபெரும் கண்மாய்கள் வெட்டப்பட்டன. புஞ்சை நிலம் முழுக்க நீர் கொண்டு வரப்பட்டு வேளாண்மை பெருகியது. அவ்வேளாண்மையின் மிச்ச செல்வத்தைக் கொண்டுதான் மிகப்பெரிய கோயில்கள் கட்டப்பட்டன. அவை கல்விக்கும் கலைக்கும் உறைவிடங்களாக இருந்தன.
ஆனால் இன்று தமிழகம் முழுக்க அந்த மாபெரும் ஏரிகள் சிதைந்து கிடக்கின்றன. பெரும்பாலான ஏரிகளுக்கு கரைகள் இல்லை. நீர்வழிகள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. நீர்பிடிப்பு பகுதிகளில் கருவேல முட்களை பயிரிட்டு காடாக மாற்றிவிட்டனர். என் இல்லத்துக்கு அருகே நடக்கும் தொலைவுக்குள்ளேயே சோழர்களாலும் நாயக்கர்களாலும் வெட்டப்பட்ட நான்கு மாபெரும் ஏரிகள் முப்பதாண்டுகளாக புதர்மண்டி நீரின்றி கிடக்கின்றன.
தமிழகம் தன் தேவைக்கு அதிகமாகவே மழை பெய்யும் பகுதி. ஆனால் அந்த மழை வருடத்தில் பதினைந்து இருபது நாட்கள் ஒட்டுமொத்தமாக பெய்து முடிந்துவிடுகிறது. ஆகவேதான் இத்தனை ஏரிகளை வெட்டி அந்த மழை நீரை முழுக்க சேகரித்து வருடம் முழுக்க பயன்படுத்தும் முறையை மன்னர்கள் உருவாக்கினார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த நீர்நிலைகள் அனைத்துமே அதிகாரிகளின் உதாசீனத்தால் கைவிடப்பட்டன. முன்பு சோழர் காலத்திலும், நாயக்கர் காலத்திலும் ஏரிகளை பராமரிக்கவும் நீர்நிலைகளை பகிர்ந்து கொள்ளவும் உருவாக்கப்பட்டிருந்த பல்வேறு குடிமராமத்து அமைப்புகள் அழிந்தன.
நமது ஆலயங்களும் அதே போல கைவிடப்பட்டு வெறும் வணிக மையங்களாக்கப்பட்டுள்ளன. அற்புதமான சிற்பங்கள் மேல் பெயிண்ட் பூசப்பட்டு நாசம் செய்யப்படுகின்றன. மணல் வீச்சு என்னும் முறைப்படி உயர் அழுத்தத்தில் மணலை சிற்பங்களின்மேல் பீய்ச்சி அடித்து  அதன் நுட்பங்கள் அனைத்தையும் மழுங்கடிக்கிறார்கள். உண்மையில் தமிழகத்தில் உள்ள மகத்தான சிற்பங்களில் பாதிக்கு மேற்பட்டவை சென்ற இருபதாண்டு காலத்தில் அழிந்துவிட்டன.
நம் ஏரிகள், ஆலயங்களின் அழிவைப்பற்றி பல்வேறு இதழாளர்கள் தொண்ணூறுகளிலேயே எழுதிவந்தனர். நானே பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் வாசகர்களின் ஆர்வம் அவற்றின்மேல் உருவாகவே இல்லை. அனேகமாக வாசகர்கடிதங்களே வராது. ஆனால் இன்று நாளிதழ்களில் ஏரிகளின் அழிவைப்பற்றி எழுதினால் பெரும் அளவுக்கு மக்களின் ஆதரவு உள்ளது. பிரச்சினை அவர்களை அணுகி விடது என்று பொருள்
ஆகவே மக்களுக்கு ஆர்வமில்லை என்பதனால் ஓர் அரசியல் தரப்பை பேசக்கூடாது என்றில்லை. அப்படி மிகச்சிறுபான்மையினரால் பேசப்படும் அரசியல் தரப்பு வீணானதோ கேலிக்குரியதோ அல்ல. அவ்வரசியல்தரப்பின் பொறுத்தப்பாடு, அதன் இன்றியமையாமை மட்டுமே நம்மால் கவனிக்கப்படவேண்டும்.
மக்களுக்குப் பிடித்தமானவை வளரவேண்டும் என்றால் இங்கே சினிமாவும் சாப்பாடும் அன்றி வேறெந்த விஷயமும் பேசப்பட முடியாது. சில சமயம் மக்களுக்கு தேவையானவை அதே மக்களால் புரிந்து கொள்ளப்படமுடியாதவையாகவும், மக்களால் வெறுக்கப்படுவதாகவும் இருக்கக்கூடும். ஜனநாயகத்தில் அவற்றை பேசுபவர்களை முக்கியமானவர்களாகக் கருத வேண்டும்.
எப்போதுமே வெல்லும் தரப்பில் அல்ல தோற்கும் தரப்பில் தான் அதிகமான நியாயங்கள் இருக்கும் என்பதை கருத்தில் கொள்வோம்.  நாளைக்குரிய விஷயங்கள் மிகக்குறைவானவர்களாலேயே பேசப்படும் என்பதை நினைவில் வைப்போம். நாம் சற்றேனும் சிந்திப்பவர் என்றால் பெரும்பான்மையினர் பேசுவதை அல்ல, குறைவானவர்களால் கவனிக்கப்பட்டதையே நாம் எடுத்துப்பேசுவோம்.
நன்றி : http://www.jeyamohan.in/87382#.VyiWNNJ97IV